Monday, 11 March 2024

 குழந்தை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 

தலைக்கவசம் உயிர்க்கவசம் 

குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள்

ஆய்வாளர்கள்  பேச்சு 




















































தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

                     ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா லட்சுமி மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் வைரமணி   ஆகியோர் மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்கள்.

                         சாலை போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி  மாணவர்களிடம் பேசுகையில், தலைக்கவசம் உயிர்க்கவசம் ஆகும்.  ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

                         3 பேர் பயணிக்கக் கூடாது. அவ்வாறு பயணம் பண்ணினால் உங்களது தாய் தந்தையரிடம் சொல்லி அது போன்று பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்துங்கள்.

                             18 வயதிற்குப் பின்பும் லைசென்ஸ் எடுத்த பிறகுதான் வண்டி ஓட்ட வேண்டும். லைசன்ஸ் என்பது உடல் மற்றும் மனம் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானது என்பதை உறுதிப்படுத்துவதாகம்.

                         உங்கள் தாய் தந்தையரிடம் கூறி  ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். வாகனம் ஓட்டும் பொழுது உடலில் எந்த பாகம் விபத்தில் பாதிக்கபட்டாலும் மிகப்பெரிய சோகம் உண்டாகும்.

                             குறிப்பாக விபத்தில் தலையில் பாதிப்பு ஏற்பட்டால் சீக்கிரம் சரிபடுத்த முடியாது. எனவே ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்ட உங்களது அண்ணன், அக்கா, அப்பா, அம்மா ஆகியோரை அனுமதிக்காதீர்கள். வாகன சாவியை  வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

                        சாலையில் இடது ஓரமாக செல்லுங்கள். கும்பலாக செல்வதை தவிர்த்து விடுங்கள். ஒருவர் பின் ஒருவராக செல்லுங்கள். குறிப்பாக வெள்ளை கோட்டிற்கு உள்ளே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக செல்லுங்கள்.

                             அப்பொழுது தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் ஆட்டோவில் அல்லது வேனில்  பள்ளிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுனர், வேன் ஓட்டுனர்கள் ஏதேனும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தால் அவர்களது வாகனத்தில் ஏறாதீர்கள். அந்த தகவலை உங்களது பெற்றோரிடம் தெரிவித்து விடுங்கள்.

                     இளம்வயதில் உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம். சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து உங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று பேசினார். 

                                    அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாலட்சுமி மாணவர்களிடம் பேசும்போது , குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள்.  நாம்தான்  அவர்களுக்கு பேருந்து மற்றும் பல்வேறு இடங்களில் தேவையில்லாத தகவல்களை தெரிவித்து விடுகிறோம்.

                 நாம் தெரிவிக்கும் தகவல்  வாயிலாக அவர்கள் நம்மை சுற்றிவந்து அழைத்துப் போய் விடுகிறார்கள். அதற்கு நாம் இடம் தரக்கூடாது. நம்மை பற்றிய உண்மையான தகவல்களை நமக்கு தொடர்பு இல்லாதவர்களிடம்  தெரிவிக்ககூடாது. 

                                                நமக்கு தெரியாதவர்கள்  கொடுக்கும் எந்த பண்டங்களையும் நாம் வாங்கி சாப்பிடக்கூடாது. இது போன்று நீங்கள் செய்தால் குழந்தை கடத்தலில் இருந்து எளிமையாக தப்பிக்கலாம். 

                             மாணவர்களாகிய நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டும். நீங்கள் வழியில் நடந்து செல்லும் பொழுது பெண்குழந்தைகளை யாரேனும் சுற்றி வட்டமிட்டு ஏதேனும் தகராறு செய்தால் அதற்காக கலங்கி நிற்காதீர்கள். எதிர்த்து நில்லுங்கள்.

                             போன் உங்கள் கையில் இருந்தால் போலீசை அழையுங்கள். நூறு என்கிற எண்ணை அழுத்தி போலீசை அழையுங்கள். போன் இல்லை என்றால்  கத்தி சத்தம் போடுங்கள். அப்பொழுதுதான் யாருக்கேனும் குரல் கேட்டு உங்களை காப்பாற்ற வருவார்கள்.

                                     தற்பாதுகாப்பு பெண்களுக்கு மிக முக்கியமானது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை ஆண்களும், பெண்களும் நன்கு அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். யாரேனும் தவறான வழியில் உங்களை தொட்டாலோ, ஏதேனும் செய்தாலோ உடனடியாக பெற்றோரிடம் கூறுங்கள். ஆசிரியர்களிடம் கூறுங்கள்.

                                பெற்றோர்,ஆசிரியர்  உங்களுக்கு பாதுகாப்பு தருவார்கள். உங்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் வீட்டின் அருகிலோ அல்லது சுற்றுப்புறத்தில் இருந்தால் போலீசை அழையுங்கள். எங்களது மொபைல் எண் 8300002202 என்பதாகும்.

                             இந்த எண்ணுக்கு நீங்கள் அளித்தால் நாங்கள் உதவி செய்ய காத்திருக்கின்றோம். போலீஸ் உங்களது நண்பர். எனவே நீங்கள் எங்களிடம் எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். இவ்வாறு குழந்தை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆய்வாளர் கீதாலட்சுமி பேசினார்.

                         நிகழ்வில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா லட்சுமி மற்றும் போக்குவரத்து  காவல் ஆய்வாளர் வைரமணி  ஆகியோர் முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். பெருவாரியான காவலர்கள்  இம்முகாமில் பங்கேற்றனர்.


 வீடியோ:  

https://www.youtube.com/watch?v=-BkJ0JL_lhM

https://www.youtube.com/watch?v=aXzB0640HF4






No comments:

Post a Comment