Friday 6 August 2021

 ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு 

திருக்குறள் எழுத ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே திருக்குறள் எழுதும் போட்டியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்தமிழ் கல்வி நிலையம் நடத்தியது. இதில் கொரோனா காரணமாக ஊரடங்கு நேரத்திலும் ஏராளமான மாணவர்களை  ஆர்வமூட்டி பங்கேற்க வைத்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

                                 சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து இணையம் வழியாக முத்தமிழ் கல்வி நிலையம் மூலமாக 1330 திருக்குறளையும் எழுதி அனுப்பும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குவதாக அறிவித்தனர். இதனை மாணவர்களுக்கு இணையத்தின் வழியாக தெரிவித்து, மாணவர்களின் குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதாலும், ஆசிரியர்களே மாணவர்கள்  எழுத   பேப்பர்களையும் வழங்கி , ஊக்கப்படுத்தி 10 நாட்களில் 1330 திருக்குறளையும்  எழுதி முடிக்க வைத்து அதனை ஆசிரியர்களே பெற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு தபால் வழியாக அனுப்பி வைத்தனர். கொரோனா காலத்தில் 1330 திருக்குறளையும் தொடர்ந்து எழுதியது மாணவர்களுக்கு மனதளவிலும்,  கல்வி அளவிலும் மிகப் பெரிய நன்மை பயப்பதாக இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். சிறப்பான முறையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வமீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார். இப்பள்ளியில் இருந்து 34 மாணவர்கள் 1330 திருக்குறளையும் எழுதி அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இப்போட்டியை முயற்சி எடுத்து நடத்திய முத்தமிழ் கல்வி நிலையத்தில் கூட்டு முயற்சிக்கும் பள்ளி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 

 படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே  திருக்குறள் எழுதும் போட்டியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்தமிழ் கல்வி நிலையம்   நடத்தியது.இதில்  இப் பள்ளியின் மாணவ மாணவியர் 34 பேர் 1330 குறட்பாக்களையும் எழுதி அனுப்புவதற்கு முயற்சிகள் எடுத்த ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வமீனாள் ,முத்துலட்சுமி ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment