Tuesday 19 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

தன்னலமற்ற அறிவியல் பயிற்சியாளர் அறிவரசன் அவர்களுடனான பழகிய அனுபவம்


         அறிவியல் என்பது மாணவர்கள் ஆய்வு செய்து பயில வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையும் வகையில், பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது நெகிழ்ச்சியாகவும் ,மகிழ்ச்சியாகவும் , சிறப்பான மாணவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. அருமையான குழந்தைகள் . மேலும் வளர சிறக்க எனது பணிவான வாழ்த்துக்கள். பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம்  அவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வணக்கங்கள். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.

வி. அறிவரசன் ,

பரிக்ஷ்ன்  அறக்கட்டளை,

(அறிவியல் ஊர்தி)




                              
தன்னலமற்ற அறிவியல் பயிற்சியாளர் அறிவரசன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து வாழ்த்து தெரிவித்து எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை :
                          
தொலைபேசி எடுக்கமுடியாத அளவிற்கு பயிற்சிக்கே தன்னை உள்படுத்தி கொண்ட பயிற்சியாளர்:

                                                               அறிவியல் பயிற்சியாளர் சென்னையைச் சார்ந்த அறிவரசன் அவர்களை விகடன் இதழ் நடத்திய நிகழ்வில்  சென்னையில் சந்தித்தேன். அந்த நிகழ்வில் அவரது தொலைபேசி எண் அப்பொழுது பெற்றுக் கொண்டேன். பிறகு பலமுறை அவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் செய்து காண்பித்த அறிவியல் தொடர்பான நிகழ்வுகள் அருமையாக இருந்தது. மாணவர்களுக்கு நன்றாக புரியும் வண்ணம் இருந்தது. எனவே எங்கள் பள்ளிக்கும் வந்து அறிவியல் பயிற்சிகளை செய்து காண்பியுங்கள் என்று அழைப்பு கொடுத்தேன். சில நேரங்கள் அவர் தொலைபேசியை எடுத்து பேசுவார் . பல நேரங்களில் அறிவியல் பயிற்சி செய்து காட்டும் அந்நிகழ்வில் இருந்த காரணத்தினால் தொலைபேசியை எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார். அப்பொழுதெல்லாம் ,அவர் தொலைபேசி எடுக்காத சூழ்நிலையில் குறுஞ்செய்தி அனுப்புவேன். அதன்பிறகு அவருக்கு நினைவு வரும்பொழுது எனக்கு அழைப்பு விடுப்பார். அதன் தொடர்ச்சியாக அவரிடம் சில, பல முறை பேசி எங்கள் பள்ளிக்கு வருகை தர ஒப்புக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் காரைக்குடியை சுற்றியுள்ள பல பள்ளிகளுக்கும் செல்வதாக என்னிடம் தெரிவித்திருந்தார். 

10 பள்ளிகளுக்கு பயிற்சி :

                         தலைமையாசிரியர் நண்பர்களிடம் பேசி 10 பள்ளிக்கூடங்களில் அனுமதி வாங்கி எங்கள் பள்ளியில் முதல் நிகழ்வாக ஆரம்பித்து மற்ற பள்ளிகளுக்கு அடுத்தடுத்த நாட்கள் செல்லுமாறு திட்டமிட்டு அவருக்கு தகவல் கொடுத்திருந்தேன். முதல் நாள் எங்கள் பள்ளியில் மிக அருமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு பல்வேறு பள்ளிகளுக்கு செல்வதாக திட்டமிட்டு , ஒருநாள் மாலை சென்னையில் பேருந்து ஏறி விட்டதாகவும், காலையில் தேவகோட்டை வந்து விடுவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். 

நெஞ்சு பட பட வைக்க வைத்த நிகழ்வு :

                         சென்னையிலிருந்து காலையில் நாலரை மணிக்கு தேவகோட்டைக்கு  பேருந்து வந்துவிடும் என்று தெரிவித்திருந்தார். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் அவரை அழைத்து வந்து காலை வேலைகள் அனைத்தையும் முடிக்கச் சொல்லி பள்ளிக்கு அழைத்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஆறு மணி ஆகிவிட்டது.6.30 மணி  ஆகிவிட்டது. ஏழு மணியாகிவிட்டது. அன்னாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை. தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்கிறது. அந்த நிகழ்விற்கு மிக முக்கியமான ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்திருந்தோம். அந்த நிகழ்வு நடக்கும் நாளன்று தேவகோட்டையில் மின்சாரம் தடை என்ற அறிவிப்பு இருந்தது. எனவே காலையில் ஒன்பதே கால் மணிக்கு நிகழ்வை ஆரம்பித்து விடலாம் என்று திட்டமிட்டு விட்டோம் .ஆனால் அறிவரசன்  அவர்கள் 8 மணி வரை தொடர்பு கொள்ள இயலவில்லை. 7 மணிக்கு  பிறகு சுட்டி விகடன் பொறுப்பாசிரியர் திரு. கணேசன் அவர்களை காலை வேளையில் எழுப்பினேன்.அன்னாரை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டேன். சிறிது பரபரப்பு ஆகிவிட்டது. ஏனென்றால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிட்டோம். கிளம்பி விட்டேன் என்று கூறியவர் ஆள் வரவில்லை. எப்படி அவரை தொடர்பு கொள்வது என்பதும் தெரியவில்லை. ஒரு மிக இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுடைய நிறுவனத்தின் தலைவர் அவர்களை தொடர்பு கொண்டேன் . நிறுவனத்தின் தலைவர் அவர்களோ எனக்கு அவரு போவதாக தெரிவித்திருந்தார், ஆனால் நேற்று இரவு கிளம்பிவிட்டார். எங்களுடைய அலுவலக பணியாளரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று தெரிவித்தார். மீண்டும் சிறிது நேரத்தில் என்னுடைய லைனுக்கு வந்து நேற்று இரவு உறுதியாக தேவகோட்டை வருவதற்காக பேருந்து ஏறி விட்டார். எனவே கண்டிப்பாக காலையில் வந்து விடுவார் என்று தெரிவித்தார் .என்ன நடந்தது என்று நமக்கு தெரியவில்லை. 

 என்ன நடந்தது ? எப்படி நடந்தது ? ஆச்சரியம் அனால் உண்மை :

                  காலையில் 8 மணிக்கு அறிவரசன் அவர்கள் சரியாக பள்ளிக்கு வந்து விட்டார்கள். என்ன சார் ஆச்சு ? ஏன் சார் எப்படி வந்தீர்கள்?  என்று கேட்டோம் .அதற்கு அவர்கள் கூறினார்கள், இரவு பேருந்தில் கிளம்பும்போதே போன் சுவிட்ச் ஆஃப் ஆகி விட்டதாகவும், அமராவதிபுதூர் வருகை வரும்பொழுது பேருந்தை நிறுத்தி ஒரு இடத்தில் டீ சாப்பிட்டதாகவும்,காலை மணி 4.30 மணி இருக்கும் என்றும், அதன் பிறகு ஏறி அமர்ந்த பிறகு லேசாக கண்ணயர்ந்து விட்டதாகவும், திருவாடனை வரை சென்று விட்டதாகவும் ,தேவகோட்டை நிறுத்தம் வந்த உடன் நடத்துனர் சொல்கிறேன் என்று கூறியவர் கூறாததால் , நிறுத்தம் தெரியததனால் திருவாடனை வரை சென்று விட்டதாகவும், மீண்டும் திருவாடானையில் இறங்கி தேவகோட்டை வந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் படபடப்பாக இருந்தது .பல நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும் அன்று அவர் வர தாமதமாகி போன நிகழ்வை எண்ணிப் பார்த்தால் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. 

சரியான நேரத்திற்கு ஆரம்பித்த நிகழ்வு :

              நல்லவேளையாக அன்னார்  அவர்கள் சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள். காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி தேவகோட்டை நகராட்சி சேர்மன் சுமித்ரா ரவிக்குமார் அவர்களது தலைமையில் நிகழ்வை ஆரம்பித்து மிக அருமையாக ஒரு நாள் முழுவதும் நிகழ்வு சென்றது. திரு. அறிவரசன் அவர்கள் தன்னை பற்றிக் கூறும்பொழுது, பிடெக்  படித்தவர் படித்தவர் என்று கூறினார். 

இளம் வயதில் நன்றாக படித்து விட்டு மாணவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் :

                நல்ல படிப்பு படித்துவிட்டு மாணவர்களுக்கு சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு பரிட்சயன்  என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேடி சென்று இப்பயிற்சியை வழங்கி வருவதாக தெரிவித்தார். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த காலத்தில் இப்படி மனிதர்களா  என்று வியந்து போனேன். ஏனென்றால்  நல்ல படிப்பு படித்து, நன்றாக பணியில் இருந்தவர், திடீரென பணியை விட்டுவிட்டு மாணவர்களுக்கு குறிப்பாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்ட விதம் மிகவும் பெருமையாக இருந்தது. 

 இந்த பையில் இத்துணை அறிவியல் உபகாரணங்களா ? ஆர்வத்தை தூண்டும் மனிதர் :

           அதனுடன் தான் தங்குவதற்கு ஒரு சிறிய அறை போதும் என்றும்,எந்த இடத்தில் வேண்டுமானாலும் குளித்து விட்டு தயாராகி தான் பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து விட்டு அதனை செயலிலும் காண்பித்தார். நன்றாக பயிற்சி அளித்தார். தொடர்ந்து அமராவதிபுதூர் தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம் அவர்களிடம்  கேட்டு அவர்களது மாணவர்களுக்கான  விடுதியில் தங்க வைத்து தொடர்ந்து 10 பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்து அண்ணார் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஒரு சிறிய பையில் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து அறிவியல் உபகரணங்களையும் கையில் வைத்து கொண்டு இளம் வயது மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடுபவர்.பயிற்சியும் மிக நன்றாக புரியும் வண்ணம் நடத்துவபவர்.

 பாராட்டு தெரிவித்த தலைமை ஆசிரியர்கள் :

            பயிற்சிக்கு போன அனைத்து இடங்களும் மிக அருமையாக இருந்ததாக அனைத்து  தலைமை ஆசிரியர்களும் தெரிவித்தார்கள். மாணவர்களுக்கு நல்ல முறையில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்தார்கள். பிறகுகூட புதிய தலைமுறை விருது பெறும்போது அறிவரசன்  அவர்கள் சென்னையில் நேரில் வந்து இருந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த சென்றார்கள். தொடர்ந்து அவருடன் முகநூல் வழியாகவும், பல்வேறு இணைய வழி இணைப்புகளின் மூலமாகவும் தொடர்பில் இருந்து வருகிறேன். அறிவரசன்  அவர்கள் தொடர்ந்து பல பள்ளிக் கூடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த நிகழ்வு இன்றளவும் மனதில் மாறாமல் அப்படியே இருக்கிறது. அறிவரசன்  அவர்கள் மூலமாக எனக்கு பல்வேறு நண்பர்கள் பிறகு தொடர்பு ஏற்படுத்தபட்டார்கள். இன்றளவும் அறிவரசன் அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் அறிவியல் சேவைகள் தொடர எங்களது இன்பமயமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

நன்றிகள் பல :

                மாணவர்களுக்கு அறிவியல் செயல்முறை தொடர்பாக அன்னார் அவர்கள் கற்றுக் கொடுத்த விஷயங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். திரு அறிவரசன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.



நன்றி கலந்த அன்புடன் ,

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம். 8056240653


 தன்னலமற்ற அறிவியல் பயிற்சியாளர் அறிவரசன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வலைதளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2015/07/blog-post_12.html#more



                                                                         

No comments:

Post a Comment