Sunday 24 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான இ.வி. கணேஷ் பாபு அவர்களுடன் பழகிய அனுபவம்


                   இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவியரிடையே உரையாற்றினேன். இதுவரை பல நூற்றுக்கணக்கான கல்லூரிகள் , இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்களை போல் சுய சிந்தனை உள்ள மாணவர்களை பார்த்ததில்லை. இவர்களை உருவாக்கிவரும் தலைமையாசிரியர் திரு சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள். இந்தியாவின் மிகச் சிறந்த பள்ளிக்கான அடிப்படை தகுதி இந்தப் பள்ளிக்கு உண்டு. இந்தப் பள்ளியை பாதுகாப்போம்.

 இப்படிக்கு,
இ.வி. கணேஷ் பாபு ,
திரைப்பட இயக்குனர்,
 நடிகர்,
 சென்னை.





 திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான இ.வி. கணேஷ் பாபு அவர்கள்  மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி மாணவர்கள் குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

இணையதள குழு வழியாக அறிமுகமான திரைப்பட நடிகர் :

                    திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான  கணேஷ் பாபு அவர்களை எனக்கு இணையதள குழு மூலமாக அறிமுகம் கிடைத்தது. இணையதள குழு சென்னையில் நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்று இருந்தேன். அப்பொழுது அன்னார்  அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அந்த மேடையில் சிறப்பு விருந்தினராக என்னுடன் கலந்துகொண்ட  கணேஷ் பாபு அவர்கள் தான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் , பல்வேறு சிரமமான சூழ்நிலைகளுக்கு இடையில் திரைப்பட உலகில் ஜொலித்து  கொண்டிருப்பதாகவும் உரையாற்றினார். அப்பொழுதே எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு  அழைப்பு விடுத்திருந்தேன்.

சன் டிவி தொடரில் நடிக்க காரைக்குடி வருதல் :

       அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் குலதெய்வம் தொடரில்  ஆசிரியர் துரைப்பாண்டி ரோலில் தான் நடிப்பதாகவும்,  அதற்கான படப்பிடிப்புக்கு வரும்போது கண்டிப்பாக உங்கள் பள்ளிக்கு வருகின்றேன்  என்றும் தெரிவித்திருந்தார். அதற்கான படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரம் என்னை தொடர்பு கொண்டு, எங்கள் பள்ளிக்கு திடீர் என்று வருகை தந்தார் .வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி ஆளுமை பயிற்சி வழங்கினார். சில காட்சிகளை நடித்துக் காண்பித்தார். மாணவர்களையும் நடிக்க சொல்லியும் செயல் வடிவம் கொடுத்தார் .அந்த நடிப்புகளில் ஆளுமை தன்மை வெளிப்படுமாறு செயல்பாடுகளை செய்து காண்பித்தார். 

சன் டிவி தொடர் இயக்குனர் மற்றும் இமாம் அண்ணாச்சியை அறிமுகப்படுத்துதல் :

                அதன் பிறகு நானும் அவரும் காரைக்குடி வந்து மலர் ஹோட்டலில் சிறிது நேரம் இருந்துவிட்டு, மெட்டிஒலி இயக்குனர் திருமுருகன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பிறகு சினிமா நடிகர் இமாம் அண்ணாச்சி அவர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்து நல்ல முறையில் என்னைப் பற்றிக் கூறினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றுவரை முகநூல் வழியாகவும், இணையம் வழியாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்கள் .வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருடன் தொடர்பில் இருந்து வருகின்றோம்.

 ஆளுமை பயிற்சி வழங்கிய நடிகர் :

                திரைப்பட நடிகர் கணேஷ் பாபு அவர்கள் மாணவர்களிடம் பேசும்போது , தான் விவசாய குடும்பத்தில் இருந்து வருவதாகவும் ,பல்வேறு சிரமங்களுக்கு இடையில் இன்று நல்ல பணியில் இருப்பதாகவும், எனவே நீங்கள் அனைவரும் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். உங்களுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்று ஒவ்வொருவரையும் கேட்டு உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான கணேஷ் பாபு அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். தற்போது கூட கட்டில் என்கிற திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கின்றார் கணேஷ் பாபு அவர்கள். அவருடைய படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து நடிகராக உயர்ந்தவர் :

           திரைப்படத்துறையில் இருக்கக்கூடிய நண்பர் கணேஷ் பாபு  கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயத் துறையில் இருந்து, தற்பொழுது ஒரு முக்கியமான திரைப்பட நடிகராக,இயக்குனராக  வளர்துள்ளார் என்பது பாராட்ட வேண்டிய விஷயமாகும். நேற்று கூட தமிழக அரசு  விளம்பர படம்  எடுத்து கொடுப்பதற்காக அன்னார்  அவர்களை  நியமித்துள்ளதாக முகநூலில் அறிந்துகொண்டேன் .  

திரைப்பட நடிகர் என்றால் பொதுமக்களுக்கு ஈர்ப்பு :

           திரைப்பட நடிகர் வருகின்றார், சன் டிவியின் சீரியல் தொடர் நடிகர் வருகிறார் என்றதும் ஏராளமான பெற்றோர்களும் அன்று எங்கள் பள்ளிக்கு வந்து அவருடன் படம் எடுத்துக் கொண்டார்கள். ஆர்வத்துடன் பெற்றோர்களும் அவரை அணுகி பேசிக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களுக்கு திரைப்படத்தில் நடிக்கும்  நடிகர்களிடம்  இருக்கக்கூடிய ஒரு ஈர்ப்பை அன்று தான் நான் எங்கள் பள்ளியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.  தற்பொழுது தொலைக்காட்சிகளில்  வீட்டிற்குள் சென்று படத்தை காண்பிக்கிறார்கள். எனவே அதன் தொடர்ச்சியாக அன்னார்  அவர்களை  அனைவரும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.

நன்றிகள் பல :

                  அன்னாருடைய  பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரத்தை ஒதுக்கி எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றதற்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.  ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றேன். 


நன்றி கலந்த அன்புடன் ,
லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,  
தேவகோட்டை.  
சிவகங்கை மாவட்டம். 
 8056240653


திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான இ.வி. கணேஷ் பாபு அவர்கள்  மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை பள்ளி வலைத்தளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2018/02/blog-post_11.html#more

திரைப்பட இயக்குனரும்,  நடிகருமான இ.வி. கணேஷ் பாபு அவர்கள்  மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வீடியோவாக  காணலாம் :


https://www.youtube.com/watch?v=Dzzi4QtTYzs

https://www.youtube.com/watch?v=B72MipenKG4

https://www.youtube.com/watch?v=emmAYuo9DiE









No comments:

Post a Comment