பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி சதவீத அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தர
வரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர் சிலர், உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் மாணவர்கள்
வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அதில் வெற்றி பெறும்
மாணவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் மேல் அண்ணா பல்கலைக்கழகத்தின்
ஒற்றைச் சாளர முறை மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்
பிக்கின்றனர். அந்த மாணவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச்
சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)
நிர்ணயித்துள்ள தகுதிகள் இல்லாமலேயே பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி
வருகின்றன. எனினும் ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியும் தாங்கள்தான்
முதல் நிலை (நம்பர் 1) பொறியியல் கல்லூரி என ஊடகங்களில் பிரச்சாரம் செய்து
வருகின்றன.
இதனால் தகுதியான பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு பல
சிரமங்கள் உள்ளன. அதேபோல் ஒரே மாதிரியான பெயர்களில் பல கல்லூரிகள் இயங்கி
வருவதும் மாணவர்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன என்று
தங்கள் மனுக்களில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்
கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் புதன்கிழமை
தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் அண்ணா
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறைகள், அதன் உறுப் புக் கல்லூரிகள், அரசு
பொறியி யல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும்
தனியார் சுயநிதி பொறியி யல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை அண்ணா
பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் இரண்டு வார காலத்துக்குள் வெளியிட
வேண்டும்.
அதேபோல் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகளின்
பட்டியலை, அந்தந்த கல்லூரிகளின் குறியீட்டு எண்ணுடன் சேர்த்து வெளியிட
வேண்டும். ஒரே மாதிரியான பெயர்களை வைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் மீது
நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஐசிடிஇ-க்கு உள்ளது.
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள அடிப்படை வசதிகள் பற்றியும்,
விதிமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் ஏஐசிடிஇ
மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அவ்வப்போது கல்லூரிகளில் ஆய்வுகள்
நடத்தப்பட வேண்டும் போன்ற உத்தரவுகளை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்
பிறப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment