Wednesday 28 May 2014

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை
 'முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், வி.ஏ.ஓ., சான்று, பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை,' என, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


தி.மு.க., ஆட்சியில், ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., பொறுப்பேற்றவுடன் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள விபரங்களின்படி, புதிய அட்டைகள் வழங்கப்பட்டன. 60 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வீதம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று நிறுவனங்களுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உரிமை வழங்கியுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் காப்பீட்டு திட்டத்தை, எம்.டி.,இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை, வி.ஏ.ஓ., சான்று, புதிய அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலே சிகிச்சை பெறமுடியும். இந்நிலையில், மே 28 முதல் வி.ஏ.ஓ., சான்று, பழைய அட்டைகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது. புதிய அட்டை இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கவேண்டும், என, எம்.டி., இந்தியா நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், புதிய அட்டை கிடைக்காதவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment