Saturday 24 May 2014

தனியார் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் வாபஸ் பி.எட். தேர்வு எழுத அனுமதி கேட்டு 100 மாணவர்கள் வழக்கு


சென்னை, மே 24-பி.எட். தேர்வினை எழுதுவதற்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக்கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில், ஈ.ரகுராமன், எம்.அஞ்சலி, கே.அன்பு, ஆர்.ஆஷா உள்பட 100 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், 2013–ம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பி.எட். படிப்பில் சேர்ந்தோம். இதன்பின்னர், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வந்ததது.இந்நிலையில், இந்த கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல இயக்குனர் 2013–ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி திடீரென வாபஸ் பெற்றார். இந்த விவரம் எங்களுக்கு காலதாமதமாக தெரியவந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டபோது, தென் மண்டல இயக்குநர் உத்தரவை எதிர்த்து தில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறினார்கள்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில், ‘இந்த விவ காரத்தை மீண்டும் தென்மண்டல இயக்குநருக்கு அனுப்பி வைப்பதாகவும், அதுவரை அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படும்’ என்று உத்தரவிட்டது. இதன்பின்னர், தேசிய கல்வி கவுன்சிலின் தென்மண்டல இயக்குநர் ஆய்வுகளை நடத்தி, கடந்த ஜனவரி 23–ந் தேதி மீண்டும் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த நாங்கள், கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டபோது,
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார்கள்.இதற்கிடையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், வருகிற 30ம் தேதி பி.எட். படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வு நடத்தப்போதாக அறிவித்து, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ வழங்கி வருகிறது. ஆனால், எங்களுக்கு ‘ஹால்டிக்கெட்’ எதுவும் வழங்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திடம் கடந்த 5ம் தேதி கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அங்குள்ள அதிகாரிகள், ‘கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லாததால், எங்களுக்கு ஹால்டிக்கெட் வழங்க முடியாது’ என்று வாய்மொழியாக கூறினார்கள்.
நாங்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஓர் ஆண்டுகளாக இந்த கல்லூரியில் முறையாக படித்துள்ளோம். போதுமான வருகை பதிவும் உள்ளது.எனவே வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள பி.எட். பொது தேர்வில் எங்களை கலந்துகொள்ள அனுமதிக்கவும், அதற்கான ஹால்டிக்கெட்டை வழங்கவும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு மீதான விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment