Monday 26 May 2014

 

மதிப்பீடுகள்: உங்களை அறிவதற்கு


தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து அதனை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒருவரைப் பற்றிய  மதிப்பீடுகளே, அவரை அறிவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும், பணிக்கு சேர்வதாக இருந்தாலும் அங்கே கூறப்படும் முக்கியமான வார்த்தைகள் "பையன்  ஒழுக்கமானவன்", "வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவாள்", "நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடப்பான்" போன்றவை ஆகும். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் மதிப்பும், நம்பிக்கையுமே அவைகளைக் கூறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த மாணவன் புத்தி கூர்மையானவன், இந்த இளம் பெண் திறமையானவள் என மற்றவர் கூறுவதை விட, நம்மை நாமே அந்த உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும்.  அதற்கு தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றி அறிய வேண்டுமானால் அதற்கு மற்றொருவரின் கருத்துக்களும் தேவைப்படுகிறது
.
மதிப்பீடு செய்வது எப்படி?
நீங்கள் உங்களின் உண்மையான திறன்களை நீங்களாக அறிந்துகொள்ள முடியாது. உங்களைப் பற்றி உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு சில முயற்சிகள் தேவைப்படுகிறது. உங்களை சுற்றி உள்ளவர்கள் மற்றும் உங்களோடு நீண்ட நாட்களாகப் பழகியவர்களுக்கு உங்கள் குணங்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி மாறுபடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களிடம், நீங்களாக கேட்டால் மட்டுமே சொல்வார்கள். உங்களைப் பற்றி அறிந்துகொள்ள மாற்றுக் கருத்து உடையவரும் கூட உதவி புரிவார். ஏனெனில் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை கூறக்கூடியவர், உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் அவர்களிடமிருந்து உங்கள் முன்னேற்றத்திற்கான சமரசமில்லாத தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். அதனால் அவர்கள் கூறும் கருத்துக்கு நீங்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை, அதே போன்று அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
கருத்துக்களை ஆராயுங்கள்
மற்றவர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை எல்லாம் வைத்து, கூறப்பட்டவைகளில், உண்மைத் தன்மை இருக்கிறதா? என்பதை வெளிப்படையாக ஆராயுங்கள். பெறப்பட்ட கருத்துக்கள் பொதுவானவையாக இருக்கிறதா அல்லது கூறியவரின் தனிப்பட்ட பார்வையில் இருக்கிறதா என்பதை கண்டுகொள்ளுங்கள். பொதுவான, சமூகத்திற்கு நன்மை தரும் கருத்துக்களே நாட்டிற்கும், நாம் வாழும் ஊருக்கும் பெருமை சேர்க்கும்.
தனிப்பட்ட நபரின் பார்வையில் இருக்கும் கருத்துக்கள், நமக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. பெறப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை ஆராயுங்கள். இது போன்ற செயல்பாடுகளினால், பிறர் எந்த மாதிரியான முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள் என ஆராய்வது எளிதாக முடிவுகளை எடுக்க உதவும்.
மாற்றங்களை செயல் வடிவத்திற்கு கொண்டு வரும்பொழுது ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள், நடைமுறைப்படுத்தப்பட்டதின் விளைவுகள் உடனடியாக தெரியாவிட்டாலும், சில காலங்களில் உங்களுக்கு நிச்சயமான மறு மலர்ச்சியை தரும்.

No comments:

Post a Comment