Wednesday 28 May 2014

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
பிறப்புச் சான்றிதழின் அவசியம், அதை எப்படிப் பெறுவது, எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று அறிந்தோம். பிறப்புச் சான்றிதழ் தொடர்பான இதர விளக்கங்களை தற்போது பார்க்கலாம்.
பிறப்புச் சான்றிதழை இணையதளம் மூலம் பெற முடியுமா?
இன்னும் அனைத்து மாநகராட்சிகளிலும் அந்த வசதி செய்து தரப்படவில்லை. சென்னை மாநகராட்சி இணையதளத்தில்(http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm)- ல் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவுக்குள் சென்று, அதில் குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், பெற்றோர் பெயர் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால், உரிய சான்றிதழ் கிடைக்கும்.
இணையத்தில் எத்தனை நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்?
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழுக்கான தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். பிறகு அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டும். எனவே, 30 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் இணையத்தில் கிடைக்கும்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா?
இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.
பிறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் உண்டா?
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பிறப்புச் சான்றிதழ் தொலைந்துபோனால்..?
சென்னையைப் பொறுத்தவரை 1879-ம் ஆண்டு முதல் தற்போதுவரை உள்ள பிறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் மாநகராட்சிப் பதிவேடுகளில் உள்ளன. 1930 முதல் தற்போது வரை அனைத்துச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சிக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து, அதன் பதிவேடுகளை சரிபார்த்து, வேறொரு பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இதர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆண்டுக் கணக்கு வித்தியாசப்படலாம்.
சென்னைவாசிகள் இது பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள: http://www.chennaicorporation.gov.in/departments/health/registration.htm-ல் பார்க்கலாம்.

No comments:

Post a Comment