Saturday 17 September 2022

 பள்ளி தேடி ஆளுமை  பயிற்சி அளிக்கும் நிகில் அறக்கட்டளை

பெண்ணாக இருக்கும் நீ படித்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டவர்களுக்கு சிறந்த மருத்துவராகி சேவை செய்வேன் -  ஆளுமை பயிற்சிக்குப் பின் கிராமத்து பள்ளி மாணவியின் தைரியமான பேச்சு 


 





 

 

 

 

                              புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையின் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

                  ஒருநாள் முழுவதும் நடைபெற்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாமை மதுரை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர் வெங்கடாசலம் தலைமை ஏற்று நடத்தினார். பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

                   பள்ளி செயலாளர் மீனாட்சி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மதுரை நிகில் பவுண்டேஷனின் தலைவர் நாகலிங்கம் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி தொடர்பான அனைத்து தகவலையும் எடுத்துரைத்தார். 

                                  ஒரு நாள் முழுவதும் தன்னை  அறிதல், இலக்கு நிர்ணயித்தல், திறன்மிகு தொடர்பு ஆற்றல், நினைவாற்றல் பயிற்சி ஆகிய நான்கு தலைப்புகளில் மிகச் சிறப்பான முறையில் 50 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர்  என்ற விதத்தில் 14 பயிற்சியாளர்கள் ஒரு நாள் முழுவதும் பயிற்சி வழங்கினார்கள் . 

                                 இந்தப் பயிற்சியானது முற்றிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சியின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பயிற்சி கையேடு இலவசமாக அளிக்கப்பட்டது .

                         சிறப்பான முறையில் பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு வேண்டிய  காலை உணவு, மதிய உணவு மற்றும் பல்வேறு தேவைகளையும் சரியான முறையில் சரியான நேரத்திற்கு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளி செயலர், தலைமை ஆசிரியருக்கும் மிகச்சிறப்பான பாராட்டுக்கள். 

                                 பயிற்சியாளர்கள் அனைவரும் மிக அருமையான முறையில் பயிற்சி அளித்ததாக மாணவர்கள் மாலை  பின்னூட்டத்தின் போது தெரிவித்தனர். பல்வேறு மாணவிகள் பேசிய போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

                            நீ பெண் ஏன் படிக்க வேண்டும்? படித்து என்ன சாதிக்கப் போகிறாய்? பிளஸ் டூ முடித்தவுடன் திருமணம் செய்து கொள் என்று பலர் வீடுகளிலும் கூறுவதாக பெண் குழந்தைகள் பேசினார்கள். 

                             அதையெல்லாம் தாண்டி இன்றைய பயிற்சியின் மூலமாக இலக்கை நிர்ணயித்து நிச்சயமாக நாங்கள் சிறந்த தாசில்தாராக, சிறந்த ஆசிரியராக, சிறந்த சிபிஐ ஆபீசராக ,சிறந்த வக்கீலாக என பல்வேறு விதங்களில் வருவோம்  என்று மாணவிகள் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 

                            ஒருமுறைகூட மேடையில் பேசாத பல மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பேசியது அனைவரது கைதட்டலையும் பெற்றது. அங்கு இருந்த அனைவரையும் நெகிழ செய்தது.

                     நிறைவாக பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா அவர்கள் பேசியபோது, கொரோனோவிற்கு  பிறகு மாணவ மாணவியரின் படித்தல் திறன் மற்றும் கற்றல்  திறன் குறைந்து விட்டது என்றும், பல மாணவர்களும் படிக்காமலேயே நம்மை பாஸ்  செய்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்  இருந்ததாகவும் தெரிவித்தார். இதனை போக்குவதற்காகவே இந்த பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.

                           நிறைவாக மாணவிகள் பேசியவிதம், குறிப்பாக  தாங்கள் உழைத்து நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று அவர்கள் வாயாலேயே கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறி ஆனந்தக் கண்ணீருடன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

                         கொரோனோவிற்கு பிறகு  மாணவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்திருந்தது. காலையில் ஆறு மணிக்கெல்லாம் மதுரையில் கிளம்பி சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி, வையம்பட்டி என பல்வேறு ஊர்களிலும் இருக்கக்கூடிய பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்து சரியாக எட்டு முப்பது மணிக்கு எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உட்பகுதியில் இருக்கக்கூடிய குழிபிறை கிராமத்திற்கு  நிகில் பவுண்டேஷன் தலைவர் நாகலிங்கம் தலைமையில் பயிற்சியாளர்கள் வந்தது பாராட்டுக்குரியது 

                                         . அனைத்து பயிற்சியாளர்களையும்  ஒருங்கிணைத்து ஒரு நாள் முழுவதும் பயிற்சி அளித்து மீண்டும் இரவு 10 மணிக்கு அவர்கள் வீடு சேர்ந்ததும் சேவை மனப்பான்மையுடன் உள்ள செயல்பாடுதான் என்பது உண்மை.இதுவரை நிகில் அறக்கட்டளை மூலம் சுமார் இரண்டே கால்  லட்சம்  பேர் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் 6,7,8,9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது.எனவே மற்ற பள்ளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினால் பள்ளிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க 9003659270, 9443117132 ஆகிய எண்களில் பௌண்டஷன் நிர்வாகி நிகில் நாகலிங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.  

                 இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு செய்ததன் மூலம்  எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தொடரட்டும் நிகில் பவுண்டேஷனின் சேவை மனப்பான்மையுடன் கூடிய பயிற்சி . வாழ்த்துகள்.

 நன்றியுடன் 

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

 

 

 

 

 

No comments:

Post a Comment