Thursday 5 November 2020

 அடுத்தவருக்கு உதவி செய்வதையே வாழ்க்கையாக கொண்ட ஆசிரியர் பெஞ்சமின் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியாக உள்ளது 

 

கஜா புயலில் மழையையும் பார்க்காமல் மக்களுக்காக உதவி செய்த ஆசிரியர் பெஞ்சமின்

 


            நண்பர்களே ஆசிரியர் பெஞ்சமின் அவர்களை பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் மூலமாக எங்கள் பள்ளிக்கு அவர்களது பள்ளியை முதலில் முடிவு செய்திருந்தார்கள். இணைப்பு பள்ளியாக பிறகு அவர்களது பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை பார்வையிட்டு சென்றார்கள் . திட்டத்தின் மூலமாக பலமுறை அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன். மிகுந்த அன்புடன் வாஞ்சையாக எங்கள் பள்ளியைப் பற்றியும் நல்ல விதமாக பல்வேறு கருத்துக்களைக் கூறி என்னிடம் பேசினார்கள். அதுதான் அவருடனான எனது முதல் உரையாடல். பிறகு பலமுறை ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நேரில் சந்தித்து உள்ளேன். கஜா புயலின் போது அவருடைய உதவி எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 11 மூடை  அரிசி சேகரித்து ,  அந்த அரிசியை எவ்வாறு கஜா புயல் பாதித்த கந்தர்வகோட்டை பகுதி கொண்டு செல்வது என்று யோசித்தோம். எப்படி கொண்டு செல்லலாம் என்று ஆலோசனையும் கேட்டோம். அதன் நிறைவாக பெஞ்சமின் ஆசிரியர் அவர்கள் இந்த தகவலைக் கேள்விப்பட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காளையார் கோவிலில் இருந்து 6,500 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்கிறோம்  என்றும், அந்த தண்ணீர்  வண்டி லாரியில் ஏற்றிச் செல்ல முடியுமா என முயற்சி செய்கிறேன் என்றும் தெரிவித்தார். அப்பொழுது லோடுமேன்  ஏற்றுக்கொண்டால் நான் கொண்டு செல்கிறேன் என்று என்னிடம் தெரிவித்தார். பிறகு அவரே ஒரு மணி நேரம் கழித்து என்னை தொடர்புகொண்டு டேங்கர் லாரியின் மேல் இடம் உள்ளது. அதில் மூட்டைகளை அடுக்கி கொள்ளலாம்  என்று கூறி எங்கள் பள்ளிக்கு வந்து அரிசி மூட்டைகளை ஏற்றி மாலை மூன்றே முக்கால் மணிக்கு வந்து  ஐந்தே முக்கால் மணி, ஆறு மணிக்கு கிளம்பி இரவு சென்று சரியான நேரத்தில் சரியான முறையில் அந்தப் பொருள்களை சேர்ப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார்கள்.  இந்த தண்ணீர் லாரி தான் கொண்டு செல்லும்  இரண்டாவது தண்ணீர் லாரி என்றும் என்னிடம் தெரிவித்தார்கள். அதற்குப் பிறகும் அவருடனான தொடர்பு எனக்கு நீண்டுகொண்டே சென்றது. பல நேரங்களில் என்னுடன் பேசியுள்ளார். மறக்கவே முடியாது. அன்னார் அவர்கள் நேற்று மறைந்து விட்டார்கள் என்கிற செய்தி மிகப்பெரிய அளவில் என்னை பாதிப்பு அடைய செய்தது.அவருடைய தொண்டு உள்ளம், உதவி செய்யும் உள்ளம் என்றுமே யாராலும் மறக்க முடியாது. அன்னாரின் மறைவு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள். அவர் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும்  மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் உதவிகரமாக இருந்தது  என்பதே உண்மை. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். 

ஆழ்ந்த வருத்தங்களுடன் ,

லெ .சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

 தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

8056240653

 ஆசிரியர் பெஞ்சமின் அவர்கள் கஜா புயலின் போது எவ்வாறு தானாக முன்வந்து உதவி செய்தார்கள் என்பதை கீழ்கண்ட பதிவின் மூலமாக தாங்கள் அறிந்து கொள்ளலாம்.

 https://kalviyeselvam.blogspot.com/2018/11/blog-post_21.html#more

 மறக்க முடியாத நபர் மறைந்த நிகழ்வு ஆழ்ந்த வேதனைக்குரியது.

 

 

 

 

 

No comments:

Post a Comment