Friday 8 November 2019

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்







  தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர்  ஜெ.ஜெயகாந்தன் இ.ஆ.ப. பள்ளி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வல்லாரை சிறந்த ஞான மூலிகை - தினமும் மூன்று இலைகளை சாப்பிட்டால் நல்லது - மாவட்ட ஆட்சியர் அறிவுரை

ஒருங்கிணைந்த கல்வி வழங்கி வரும் சிறந்த பள்ளி என மாவட்ட ஆட்சியர் பாராட்டு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

மக்களுக்கு சேவை செய்ய எந்நேரமும் நேரடி தொடர்பு உள்ள  பணி  மாவட்ட ஆட்சியர் பணி

இப்பள்ளிக்கு வந்த இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாள் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

 முதல் அமைச்சர் தனி பிரிவில் மக்கள் குறை தீர்க்கும் பிரிவில் ஐந்து வருடம் மூன்று மாதம்  பணியாற்றிய தமிழக அலுவலர்களில் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறேன் 

 சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் :

மாணவி நதியா : தாங்கள் கலெக்டர் ஆனதும் மறக்க முடியாத அனுபவம் எது ?
       
கலெக்டர் பதில் : மக்களுக்கு சேவை செய்ய நேரடி தொடர்பு கொண்டு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு பலருக்கும் உதவி செய்ய வேண்டும்.இந்த நாள் உங்களை சந்தித்தது கூட சிறப்பான மறக்க முடியாத அனுபவம்தான்.நமது பணி சேவை பணி .இதனை விரும்பி செய்கின்றேன்.

மாணவி கீர்த்தியா : மக்கள் குறை தீர்க்கும் நாள் எப்பொழுது  நடைபெறும் ?

கலெக்டர் பதில் : ஒவ்வொரு திங்கள் கிழமையும் குறை தீர்க்கும் நாளாகும்.அன்று பொதுமக்கள் ,பெண்கள்,கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பிரச்சனைகளை மனுவாக கொடுக்கலாம்.பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கம் தான் மக்கள் குறை தீர்க்கும் நாளாகும்.

மாணவர் ஜோயல் : கலெக்டர் பதவியில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு எத்துணை மணி நேரம் பணி செய்ய வேண்டும்?

கலெக்டர் பதில் : மாவட்ட ஆட்சியர் பணிக்கு நேரம் காலம் இல்லை.விடுமுறை இல்லை.உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எப்போதும் கடமையோடு செயலாற்றி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.தூங்கும்போது தகவல் வந்தாலும் உடனடியாக செயலாற்ற பக்குவப்பட வேண்டும்.நீங்கள் இப்போது இருந்தே உங்களால் முடிந்த சிறு,சிறு உதவிகளை செய்ய பழக வேண்டும்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப சேவை செய்வதே நமது நோக்கமாகும்.

மாணவர் கோட்டையன் : ஆழ்துளை கிணறுகளில் விபத்து இல்லாமல் இருக்க என்ன செய்வீர்கள் ?

கலெக்டர் பதில் : ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அனைத்து கிராம,நகர நிர்வாகங்களில் கோட்டாட்சியர் என எல்லாராலும் ஆழ்துளை கிணறுகளை மூடவும்,விபத்து ஏற்படாமல் இருக்கவும் உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவி மெர்சி : பள்ளியில் படித்த அனுபவம் எப்படிங்க சார் ?

கலெக்டர் பதில் : ஐந்தாம் வகுப்பு வரை ஆவடியிலும் , பிறகு பெரம்பூரிலும் படித்தேன்.நான் பள்ளியில் படித்த காலத்தில் கவிஞர் கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்து பேசினார்கள்.அப்போது அவரிடம் நான் கை குலுக்கியது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி.கண்ணதாசன் பிறந்த மாதம் , தேதியில் நானும் பிறந்தேன்.அதே கண்ணதாசன் பிறந்த மாவட்டத்தில் நான் மாவட்ட ஆட்சியராக பணி செய்வதை பெருமையாக கருதுகிறேன்.

மாணவி சிரேகா : சிவகங்கை மாவட்டத்தை சிறந்ததாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டு நீர் மேலாண்மையை செம்மைபடுத்தி உள்ளீர்கள்.இன்னும் என்னவெல்லாம் இந்த மாவட்டத்திற்கு செய்ய போகிறீர்கள் ?

கலெக்டர் பதில் : மாண்பு மிகு தமிழக முதல்வரின் பெரும் முயற்சியில் சிவகங்கை மாவட்டம் நீரில்லாமல் இருக்ககூடாது.நீர் ஆதாரங்களை பெருக்கி ,விவசாயம் செழிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிராமப் பொருளாதாரம் மேம்படவும்,போட்டி தேர்வுகளில் வெற்றி பெற மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மத்திய அரசும் , மணிலா அரசும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு படிக்கவும்,வேலை வாய்ப்பை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த கண் தெரியாத மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ் .தேர்வில் வெற்றி பெற்று இப்போது மிகப்பெரிய பதவியில் உள்ளார்.போட்டி தேர்வுகள் தொடர்பான பல விழிப்புணர்வுகளை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.அது போன்று இந்த மாவட்டத்திலும் அதிக அளவில் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கெடுக்கும் வண்ணம் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் .

மாணவர் அஜய் : தாங்கள் சின்ன வயசிலேயே ஐ.ஏ.எஸ் .ஆக வேண்டும் என்று நினைத்தீர்களா ?

கலெக்டர் பதில் : பள்ளி படிப்புக்கு பிறகு விவசாய பட்டதாரி படிப்பு படித்தேன்.மண்ணியல் பிரிவில் முதுகலை முடித்தேன்.அரசு துறையின் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றேன்.மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.உயர் பதவிக்கு வந்தால்தான் மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு உதவி செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன்.நீங்களும் இளம் வயது முதலே திட்டமிட்டு படித்து போட்டி தேர்வுகள் எழுதினால் வெற்றி உறுதி.

மாணவர் சக்திவேல் : உங்களின் ஆசை என்ன ?

கலெக்டர் பதில் : ஆசை என்று எதுவும் இல்லை.அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.நீங்களும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை இளம் வயது முதலே ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

மாணவி ஜனஸ்ரீ : உங்களுக்கு ரோல் மாடல் யார் ?

கலெக்டர் பதில் : எனக்கு ரோல் மாடல் யாரும் இல்லை.இறைவன்தான் எனக்கு ரோல் மாடல் .
                     முதல் அமைச்சர் தனி பிரிவில் மக்கள் குறை தீர்க்கும் பிரிவில் ஐந்து வருடம் மூன்று வருடம் பணியாற்றிய தமிழக அலுவலர்களில் நான் ஒருவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு பணியில் இருந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்.அதனை செவ்வனே செய்து வருகிறேன் என்று பேசினார்.இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
                               சராசரி பள்ளியாக இல்லாமல் இப்பள்ளி பல்வேறு வகைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.பல்வேறு கருத்துக்களை குறிப்பாக விஞ்ஞான அறிவை வளர்க்கும் விதமாக ,  இஸ்ரோ விஞ்ஞானியின் பாராட்டை பெற்றதோடு, நேர்மை மாணவி மகாலெட்சுமி போன்று உருவாக்கும் விதமாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.பொதுவாக நல்லமுறையில் வழிகாட்டும் வகையிலும், வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசயங்களையும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சிறப்புற கற்றுத்தருவது பாராட்டுதலுக்குரியது.
                                         பெற்றோரின் வாழ்க்கையை மனதில் நினைத்து உங்கள் வாழ்வில் சிறக்க எண்ணி கல்வி கற்க வேண்டும்.சிறந்த தோட்டம் அமைத்து உள்ளீர்கள்.நல்ல செயல்பாடு.வல்லாரை ஒரு சிறந்த ஞான மூலிகை ஆகும்.அது ஞாபக சக்தியை வளர்க்கும்.தினமும் 3 முதல் 4 இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.உடலை வளர்த்துக் கொள்ள உடற்பயிற்சி இதர விளையாட்டு,பேச்சு,கட்டுரை,கவிதை எனப்பல போட்டிகளில் கலந்து கொள்ள அடித்தளம் இப்பள்ளியில் சிறப்பாக அமைக்கப்டுகிறது.
                                       இப்பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் அனைவரும் சரியான வழிகாட்டுதலோடு கண்தானம்,உடல் தானம் செய்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது.இறந்த பிறகும் உடலையும்,கண்களையும் தானம் செய்யும் செயல் மிகப்பெரிய பாராட்டுக்குரியது.அதற்கு தனி மனப்பான்மை வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள் உடல் மற்றும் கண்தானம் தொடர்பாக பொதுமக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
                                                இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றல் அருமை.இதனை வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துங்கள்.அரசு பணிக்கு செல்வதற்கு குறிக்கோள் நிர்ணயித்து கொள்ளுங்கள்.போட்டி தேர்வுக்கு தயாராகுங்கள்.அரசு பணி சேவை பணி ஆகும்.மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய இயலும்.எனது பணியை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று பேசினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர்  ஜெ.ஜெயகாந்தன் இ.ஆ.ப. பள்ளி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments:

Post a Comment