Wednesday 6 November 2019

 ஜெய்ச்சிட்டு பேசுங்க , அதான் கெத்து ! பெண் விமானியின் நம்பிக்கை பேச்சு 

தமிழகத்தின் முதல் பெண் விமானியுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

ஏளனம் செய்பவர்களை  உங்களை திரும்பி பார்க்க வையுங்கள் - அதற்கு  எடுத்துக்காட்டாக நானே உள்ளேன் 









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
                                 ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பெண் விமானியின் தந்தை ரவிக்குமார்,தாய் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களிடம் பேசும்போது, உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டு  கோபப்படாதீர்கள்.அவர்கள் முன்பாக நீங்கள் என்னவாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவாக மாறி காண்பியுங்கள்.உலகம் உங்களை திரும்பி பார்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும்.அதற்கு படிப்பு  இருந்தால் போதும்.வாழக்கையை எளிதாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் . என்னை சிறு வயதில் கிண்டல் செய்தவர்கள் இன்று எனது சாதனையை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.விமானி ஆவதற்கு 12ம் வகுப்பு படித்தால் போதும்.பிறகு ஐந்து வருட கோர்ஸ் படித்தால் விமானி ஆகிவிடலாம். நான் இப்போது விமானம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக உள்ளேன்.சிறு வயதில் உங்களை போன்று வானில் சத்தம் கேட்டால் உடனே நீண்ட நேரம் மேலே பார்த்து கொண்டு இருப்பேன்.இன்று அந்த மேகக்கூடத்தின் இடையில்  கீழிருந்து 45,000 அடி மேலே சென்று தைரியமாக விமானம் ஓட்டுகிறேன் .அரசு பேருந்து ஓட்டுநராக உள்ள எனது தந்தை வருமானத்தில் , நடுத்தர குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடிந்தபோது உங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் சாதிக்க முடியும்.முயற்சி செய்து கொண்டே இருங்கள் வெற்றி வசப்படும் என்று பேசினார்.மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கில அகராதிகளை பெண் விமானி வழங்கினார்.மாணவர்கள் அய்யப்பன்,காவியா , கீர்த்திகா,கோட்டையன் ,லெட்சுமணன்,வெங்கட்ராமன்,முத்தய்யன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில் பெற்றனர்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


மேலும் விரிவாக :
                        தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  

குடும்ப சூழ்நிலை :


   மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் காவ்யா. இவரது தந்தை பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார். தாய் கல்பனா.  பள்ளியில் படிக்கும் போதே, சிறந்த பைலட்டாக வேண்டும் என்று கனவு கண்டவர். இதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். 

விமான படிப்பு :
                               கர்நாடக அரசு  பெங்களூருவில் ஜக்கூர்  பகுதியில் நடத்தி  வரும்  விமான  பயிற்சி நிலையத்தில்  சேர்ந்தார்.  இந்தப் பயிற்சி நிலையம் இந்தியாவின் பழமையான  பயிற்சி நிலையம்.  214 ஏக்கர்  பரப்பளவில்  அமைந்திருக்கும்  இந்தப் பயிற்சி நிலையம்  விமானியாக   தேவையான  பயிற்சிகளை அளித்து பயிற்சியின் முடிவில்  லைசென்ஸ் வழங்குகிறது.  இந்த லைசென்ஸ்  கிடைத்தால் மட்டுமே  விமானத்தை ஓட்ட முடியும்.200 மணி நேரம் பயிற்சி முடித்து, முதல்கட்டத் தேர்வில் தேறினார்.இதையடுத்து பல்வேறு பயிற்சிகளை முடித்து, தற்போது பயிற்சியாளராக இருக்கிறார். 

                       அவர் மாணவர்களிடம் பேசும்போது ,பறக்கும் அனுபவம் அற்புதமானது. அதைச் சொல்லி புரிய வைக்க முடியாது. அதுவும் தனியாக விமானத்தை ஓட்டிச் செல்லும் அனுபவம் அலாதியானது. எனது மனவலிமையால் என்னை நோக்கி வந்த கேலி, கிண்டல்களை தூக்கி எறிந்து விட்டேன். பறவையைப் போல் இருப்பதாக ஏற்படும் உணர்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

12ம் வகுப்புக்கு பிறகு விமானியாக என்ன படிக்க வேண்டும் ?

                                12ம் வகுப்பு முடித்த பிறகு , 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இதை படிப்பதற்கு அதிகம் செலவாகும்.எஸ்.பி.எல்,சி.பி.எல் என ஆறு பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.17 வயது முதல் படிக்கலாம்.சி.பி.எல்.படிக்க 20 லட்சம் செலவாகும்.பின் தங்கிய மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.68 வயது வரை பணியாற்றலாம்.17 வயதுக்கு பிறகு படிப்பதற்கு வயது வரம்பு கிடையாது.ஆண்டு ஒன்றுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை உண்டு.இதற்கு டெல்லியில் உள்ள மருத்துவர்தான் சோதனை செய்யவேண்டும்.உடல் நிலையில் பிரச்சனை இருந்தால் விமானம் ஓட்ட முடியாது.ஏனென்றால் இங்கு பொறுப்புக்குத்தான் முடியத்துவம் உண்டு.

 ஜெய்ச்சிட்டு பேசுங்க , அதான் கெத்து ! பெண் விமானியின் நம்பிக்கை பேச்சு

                           'Never Ever give up' என்ற ஒற்றை தாரக மந்திரத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதையும் சாதிக்கலாம். அது என் வாழ்வில் நடந்தேறியது.
""விமானம் ஓட்டுவது,  விளையாட்டான விஷயம் இல்லை. விமானத்தில்  ஏறி அமர்ந்து, விமானம்  தரையிலிருந்து  வானம் நோக்கி உயரும்   போது  விமானத்தினுள்  அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு  அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும்.  பயணத்தின்  போது, கட்டாந்தரையில் கார்  போகும் போது அதிருமே... அதேபோன்று  விமானமும் சில சமயம்  மேகத்தினுள்  கடந்து போகும் போது அதிரும். பயணிகள் அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களையும், 500 கோடி மதிப்புள்ள விமானத்தையும் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும். பொறுப்புகள் அதிகம். கடந்த ஆறு ஆண்டுகளில், ஒரு கி. மீ  நீளமுள்ள  சிறிய ரன் வேயில்,  தனி ஆளாக  தரையிலிருந்து விமானத்தை  வானம் நோக்கி பறக்கச் செய்து நிர்ணயிக்கப்பட்டிருக்கும்   நேரம் வரை  விண்ணில் பறந்து, பிறகு  விமானத்தை  தரை  இறக்கிய  பெண் விமானி நான்தான். இதை ""சோலோ'' என்பார்கள்.  பயிற்சி காலத்தில் மட்டும் தான் தனியாக  விமானம் ஓட்ட முடியும். 

சோலோவாக விமானம் ஒட்டிய அனுபவம் :

                                       சாதாரணமாக  ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் இருப்பார்கள்.  இரண்டு விமானிகளில்,  ஒருவருக்கு திடீரென்று    பயணத்தின்  போது   உடல்நலக் குறைவோ  வேறு ஏதாவது பிரச்னையோ  வந்துவிட்டால்,  இரண்டாவது  விமானிதான்  அந்த விமானத்திற்கு   பொறுப்பாளி.   அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்  மனோதைரியத்தை  ""சோலோ'' பயிற்சி தரும். கார்கில் போரில் தனது திறமைக்காக  ஜனாதிபதி  விருது  பெற்ற,  விங் கமாண்டர் அமர்ஜித் சிங் டாங்கே தான் எனக்கு பயிற்சி கொடுத்தார்.
என்னதான்  பயிற்சி  பெற்றாலும்,   முதல் முறையாக தனியாக   விமானம் ஓட்டும் போது  மனசு  மட்டுமல்ல கையும் காலும் நடுங்கத்தானே செய்யும். ரன் வேயில்  கொஞ்சம் ஓடி.  பிறகு  வேகம் கூட்டி   விமானத்தை தரையிலிருந்து  வானம் நோக்கி  அம்பாகப்  பாயச் செய்கிற  போது., எல்லாம்  நல்லபடியா  நடக்கணும்னு... பதட்டம் வரத்தான் செய்யும்.  அவற்றைச் சமாளித்து   தனியாக விமானத்தை     ஓட்டி   மீண்டும்  தரையிறக்கிய பிறகுதான் நிம்மதி வந்தது. இப்போது தனியாக  விமானம் ஓட்டுவது   பழகிப் போய்விட்டது''.
     
விமானம் ஓட்ட லைசென்ஸ் பெற என்ன செய்ய வேண்டும் ?                

                         ""விமானம்  ஓட்டும்  லைசென்ஸ்  பெற, ஒருவர் 200 மணி நேரம்  விமானம் ஓட்டியிருக்க வேண்டும், அதில் நூறு மணி நேரம்  விமானத்தை  "சோலோ'வாக ஓட்டிய அனுபவம் வேண்டும். நான் இதுவரை 65 மணி நேரம் "சோலோ'வாக  விமானத்தில் பறந்துள்ளேன். ஆரம்பத்தில் ஒரு இஞ்சின்  உள்ள விமானத்தை ஓட்டிப் பழக வேண்டும்.  பிறகு  பல இஞ்சின் உள்ள  விமானத்தைக் குறைந்தது 25 மணி நேரம்  ஓட்டிப் பழக வேண்டும்.  அதற்குப்  பிறகு, டைப்  ரேட்டிங்  என்ற பிரிவில்  போயிங், ட்ரீம் லைனர்  போன்ற பெரிய  விமானத்தை மூன்று மாதம் ஓட்டிப்  பழக வேண்டும். இந்த பயிற்சி  அமெரிக்கா, கனடா, ஸ்விட்சர்லாந்து   போன்ற நாடுகளில் மட்டுமே கிடைக்கும். நான், ட்ரீம் லைனர் விமானம் ஓட்டும் பயிற்சிக்காக  ஸ்விட்சர்லாந்து  போகலாம் என்பது எனது கனவு ஆகும்.

 விமானம் ஓட்ட பயிற்சி பெற என்ன கட்டணம் ?

                                         ஒரு மணி  நேர விமான பயிற்சிக்கு  இங்கு பத்தாயிரத்து ஐநூறு  ரூபாய் கட்டணம்.  தனியார்  விமான பயிற்சி  நிலையங்களில்  கட்டணம்  இன்னும் அதிகம்.விமானி ஆக  எல்லாப் பிரிவிலும்  பயிற்சி பெற குறைந்த பட்சம் ஐம்பது லட்சம் வரை  செலவாகும்.
இந்தியாவில்,  வானத்தில்  விமானம் ஓட்டி   அதிகபட்சம்   கடல் மட்டத்திலிருந்து, 45,000 அடிகள்  வரை பறக்கலாம்.. நான்,  நான்கு இருக்கைகள் கொண்ட  செஸ்னா 172 பி சிங்கிள் என்ஜின்  சிறு விமானத்தை  ஓட்டியிருக்கிறேன். தனி ஆளாக தரையிலிருந்து 3700 அடி உயரத்தில் 90 நாட்ஸ் வேகத்தில்  பறந்துள்ளேன். டேக் ஆப்  (பறப்பது), லேண்டிங் (தரை இறங்குவது)  இவற்றை  "தானே  செய்யும்  தொழில் நுட்பங்களைக்  கொண்டிருக்கும் விமானங்கள்'  வந்துவிட்டன. என்றாலும்,  எல்லாம்  முறைப்படி  இயங்குகிறதா  என்று கண்காணிக்க  சாதுர்யமுள்ள விமானம்  குறித்து  "அத்துப்படியான  விமானி' தேவை.

 சவாலே சமாளி : 
                    சிக்கலான  சூழ்நிலைகளை   சாமர்த்தியமாக  எதிர் கொள்ள வேண்டும்  என்று நினைப்பவள் நான்.   சவாலாக   அமையும்  இது போன்ற தருணங்களை  சாமர்த்தியமாகக் கையாண்டு அதில் சாகசத்தையும் சேர்க்க வேண்டும்.  சிறந்த  விமானி அப்படித்தான் இருக்க வேண்டும்.என்று பெண் விமானி காவ்யா ரவிக்குமார் கூறினார்.



No comments:

Post a Comment