Saturday 6 July 2019

ஆபாசம்,இரட்டை அர்த்தங்கள்,அடிதடி  இல்லாமல் அருமையான சமூக மாற்றத்திற்கு  தேவையான படம் ராட்சசி 

கல்விதான் சொத்து என்பதை உணர்த்தியுள்ள படம்




நண்பர்களே ,இன்று ராட்சசி படம் பார்த்தேன்.மிகவும் அருமையான படம் என்று சொல்லவேண்டும்.இப்படியும் நல்ல முறையில் படம் எடுக்கலாம் என்பதை அருமையாக எடுத்து கூறி உள்ளார் இயக்குனர்.அதனை மிக அருமையான முறையில் நடித்து காண்பித்து உள்ளார் ஜோதிகா.அவர் முழுவதும் கேரக்டராகவே மாறுதலாகி உள்ளார்.
                                                  பல இடங்களில் படம் தொடர்பாக நல்ல கருத்துக்கள் வந்தன.நானும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பதால் ஆர்வத்துடன்   படம் பார்க்க சென்றேன்.

ஆட்டோக்காரர் :
                            ஆர்வத்துடன் சென்ற எனக்கு படம் மேலும் ஆர்வத்தை கொடுத்தது என்பதே உண்மை.படத்தின் ஆரம்பத்தில் பள்ளியினை பற்றி மிகவும் அருவருப்பாக பேசும் ஆட்டோ ஓட்டுநர் உண்மையில் ஒரு சமூக மாற்றத்தை விரும்புவர்.அவரது கேரக்டரும் அப்படித்தான் உள்ளது.முக்கிய விஷயங்களை மிக எளிதாக எடுத்து சொல்கிறார். கைதட்டல் வழங்கலாம்.

தனியார் பள்ளியின் தாளாளர் :
                                                     உண்மையில் இவரின் நடிப்பு அருமை.தனியார் பள்ளி என்றாலே இவரை போலத்தான் இருப்பார்கள்.அதில் ஒன்றும் வியப்பில்லை. இன்று நாங்கள் பல  போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து சென்றாலும் , நமது மாணவர்களுக்கு திறமை இருந்து அதனை காட்டினாலும் அதற்கு மதிப்பு கிடையாது. அவர்கள் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள்.திறமைக்கு மதிப்பு என்பது தனியார் பள்ளிகளில் சில பள்ளிகள் வராதபோது மட்டுமே கிடைக்கிறது என்கிற மறுக்க முடியாத உண்மையை தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர்.

தலைமை ஆசிரியர் - மிலிட்டரி மேன்

        தலைமை ஆசிரியர் என்பவர் பல நேரங்களில் மிலிட்டரி மேனாக இருக்கவேண்டும் என்பதை அழகாக சொல்லி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் . சில இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்து அழகாக எடுத்து உரைக்கின்றார்.ஜோதிகா அவர்கள் தலைமை ஆசிரியர் கேரக்டரில் அருமையாக நடித்து உள்ளார் என்பதை விட தலைமை ஆசிரியராகவே மாறிவிட்டார் என்பதே உண்மை.மிலிட்டரி மேனாக இருப்பதுடன் ஆள்பலம்,அரசியல் பலம்,எதையும் துணிந்து எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம்,நம்பிக்கை உடையவர்களாக தலைமை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை அருமையாக புரிய வைத்து விடுகின்றனர்.

மூன்று கேள்வி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர் :
                                              ஆசிரியர்களிடமும்,மாணவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும் தலைமை ஆசிரியர் கேட்கும் மூன்று கேள்விகள் அருமை .நன்றாக யோசித்து படத்தை எடுத்து உள்ளனர்.நிச்சயமாக யாரோ ஒரு தலைமை ஆசிரியர் இப்படி இருந்திருக்க வேண்டும்.அதனை பார்த்துதான் இப்படி எடுத்து இருப்பார்கள் என்பது உண்மை.மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதும்,படிக்காத மாணவர்களும் அருமையாக படிப்பார்கள் என்பதும் உண்மை.

பணம் வாங்கும் உதவி தலைமை ஆசிரியர் :
                                          இந்த கேரக்டர் உண்மையில் மிகவும் மோசம்.தனியார் பள்ளி தாளாளர் வில்லன் கூட பூங்கொத்து கொடுத்த காட்சியில் நல்லவராக மாறி விடுகிறார்.ஆனால் ,குண்டு வைக்கவில்லையே என்று சொல்லும் அளவிற்கு மோசமானவராக இருப்பார் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

கணித ஆசிரியரும்,உடற்கல்வி ஆசிரியராக வருவபவரையும் வெற்றி பெற வைத்து அன்பை வெளிப்படுத்துதல் :
                                                   மாணவர்கள் வெற்றி பெற்ற உடன் ஆசிரியரின் உள்ளம் எப்படி மகிழ்கிறது என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளனர்.அந்த ஆசிரியர்கள் தான் கடைசியில் தலைமை ஆசிரியருக்கு முழு உதவி செய்பவராக உள்ளனர்.இதுதான் மாற்றம் .அருமை.

புதிய யோசனைகள் அருமை :

                             ஒருநாள் தலைமை ஆசிரியர்,பள்ளியின் பிரச்சனைகளை படம் வரைந்து அதனை திட்டம் தீட்டி சரி செய்யும் விதம் என அனைத்துமே அருமை.

தலைமை ஆசிரியர் - கலெக்டர் சந்திப்பு :
                                                     தன்னை விசாரிக்க வரும் கலெக்டரிடம் தலைமை ஆசிரியர் நடந்து கொள்ளும் விதம் அருமை.அதுதான் யதார்த்தம்.எங்கள் பள்ளிக்கு பல மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்த போது மரியாதை நிமித்தம் நாம் அமர சொன்னாலும் கூட அவர்கள் ,இல்லைங்க சார் ,அது தலைமை ஆசிரியர் சீட்,அவர்தான் உட்கார வேண்டும் என்று சொல்லி ,அவர்கள் எனக்கு எதிரில் இருந்த சேரில் தான் உட்கார்ந்தார்கள்.அதுதான் நடைமுறையில் சரியாகவும் உள்ளது.அதனைத்தான் இந்த படத்தில் ஜோதிகா அருமையாக கலெக்டர் வரும்போது நடித்துள்ளார்.என் பள்ளி.எனது மாணவர்கள் என்று தலைமை ஆசிரியர் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்பதே உண்மை.தலைமை ஆசிரியர் சரியாக இருப்பதனால் யாருக்கும் அச்சப்படாமல் அவர் வேலையை செய்து ,மற்றவர்களும் அதனை செய்வதால் தலைமை ஆசிரியரால் தைரியமாக பேசமுடிகிறது . அருமை.கலெக்டரும் பள்ளியின் செயல்பாட்டை பாராட்டி செல்வது சிறப்பு.நல்லது செய்தால் நமக்கு நன்மை தானாக வரும் என்பது உண்மை.

 படத்தின் காட்சி அமைப்புக்கு ஏற்ப தொய்வில்லாமல் படம் நகர்தல் :
                                                                      
                                                  இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் நைஸாக வந்து தலைமை ஆசிரியரிடம் பேசி செல்லும் காட்சிகள் சூப்பர்.என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று மாணவர் சொல்வதற்கு காரணம் மீடியாவால் இரண்டாம் வகுப்பு மாணவரின் மனநிலை மாறுதலே ஆகும்.சில  மீடியாக்கள் தவறான எண்ணத்தை மாணவர்கள் மனதில் பதிய வைப்பதையும் அழகாக படத்தில் சொல்லி உள்ளார் இயக்குனர்.என்ன இருந்தாலும் மாணவரின் அன்பும்,ஜோதிகாவின் நடிப்பும் மனதை விட்டு மாறவில்லை.

ஆசிரியர்களையும் அரவணைத்து செல்லும் தலைமை ஆசிரியர் :
                                               நல்லது செய்யும் ஆசிரியர்களை அருமையாக அனைவர் முன்னிலையிலும் பாராட்டும் பண்பு சிறப்பு.தலைமை ஆசிரியர் நன்றாக செயல்பட்டாலும் ஆசிரியர்கள் தியாக உணர்வோடு பணியாற்றினால்தான் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளார்கள்.கணித ஆசிரியர் ஈகோவுடன் செயல்பட்டு மாணவர்களை வெற்றி பெற செய்து வெற்றி பெற்ற உடன் மாணவர்களை கட்டி பிடிக்கும்போது ஏற்படும் உணர்விற்கு எதுவுமே ஈடு இணை இல்லை.இதனை ஆசிரியர்கள் உணரவேண்டும் என்று தலைமை ஆசிரியர் எடுக்கும் முயற்சிகள் அருமை.சில ஆசிரியர்கள் அப்டேட் ஆகவேண்டும் என்று சொல்வது உண்மை.

                                     ஒழுக்கம் ,போட்டிகளின் வெற்றிகள்,ஆசிரியர்களின் ,பெற்றோர்களின் ஒத்துழைப்பு ,மாணவர்கள் மீதான அன்பு,தியாக உணர்வு ,கல்வியின் வெளிப்பாடு இவை அனைத்துமே பள்ளியின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பதை பல இடங்களில் நிரூபிக்கும் காட்சிகளை இயக்குனர் வெளிப்படுத்தி உள்ள அழகு அருமை.
                                                 

                                     நிறைவு நிகழ்வில் சப் கலெக்டர் வந்து பேசும்போது, நான்கு பேர் கையெழுத்து போட்டு பெயில் என்று சொன்னவர்கள் இப்போது ஏழு பேர் கையெழுத்து போட்டு பாஸ் என்று சொல்கிறார்கள் என்பது நச்.

                               ஆக மொத்தத்தில் ஆபாசம்,இரட்டை அர்த்தங்கள்,அடிதடி  இல்லாமல் அருமையான சமூக மாற்றத்திற்கு  தேவையான படம் ராட்சசி .. ஜோதி அவர்களுக்கும்,அனைத்து நடிகர்களுக்கும்,இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.அருமையான படம்.அனைவரும் பார்க்கவேண்டிய படம் .
                            முத்தாய்ப்பாக சமுதாயம் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.சமுதாயத்தில் சீந்துவாரத்து ,மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை படிக்க வைத்து,கல்விதான் சொத்து என்பதை உணரவைக்கும் நிலையில் உள்ள ஆசிரியர்கள்தான் சமுதாயம் நிச்சயம் வெற்றி பெறும்  என்பது உண்மை.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,

                                                           










No comments:

Post a Comment