Wednesday 4 September 2019

கண்ணை கவரும் காந்தலூர்

குளிருடன் இயற்கையை ரசிக்கலாம்

17 கிலோமீட்டருக்கு ( மலை உச்சிக்கு செல்ல ) ரூபாய் 300 மட்டுமே வாங்கி அசத்தும் ஆட்டோக்கள்

மூன்று நாள் பயண அனுபவம் 


மரத்தக்காளி,ஆப்பிள் , பேஷன்  பழம் தோட்டம் பார்த்து மகிழுங்கள்


அன்பான,மனித நேயத்துடன் ,பாதுகாப்பான பயணத்துக்கு உதவிய நல்ல மனிதர்





















கசப்பாக இருந்த  சுற்றுலாவை ரசனையானதாக  மாற்றிய புதிய நண்பர்கள்

முதல் நாள் பயணம் :

பயணத்தை சொதப்பிய வாகன ஓட்டுநர்
                                             நாங்கள் காரைக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு கிளம்பி உடுமலைப்பேட்டை வழியாக காந்தலூர் செல்வதற்காக வாடகை கார் பிடித்து இருந்தோம்.காலையில் 4 மணிக்கு கிளம்ப வேண்டிய ஓட்டுநர் கிளம்பாமல் 5.45 மணிக்குத்தான் கிளம்பினோம்.பிறகு வண்டியில் எங்களது பேக்குகளை தூக்கி வைப்பதற்கு ரூபாய் 300 கேட்டு எங்களுக்கு காலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.பிறகு பழனி செல்லும் வரை தொடர்ந்து செல் போன் பேசிக்கொண்டே வந்தார்.நாங்கள் அய்யா,போன் பேசாமல் வாருங்கள் என்று சொன்ன உடன் அவருக்கு கோபம் வந்து விட்டது.வாக்குவாதமாகி ,இன்ப சுற்றுலா சென்ற நாங்கள் காலையில் சாப்பிடாமல் ,தப்பித்தோம் ,பிழைத்தோம் என்று உடுமலைபேட்டையில் அந்த வாகன ஓட்டுனரிடம் விடைபெற்று வழி தெரியாமல் எங்கள் குடும்பத்துடன் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) மனைவி,குழந்தைகள் சகிதம் இரண்டு குடும்பங்கள் உடுமலை பேருந்து நிலையத்தில் விழிபிதுங்கி நின்றோம்.எங்களுடைய பேக்குகள் வேறு அதிகம்.என்ன செய்ய என தெரியாமல் நின்ற நேரத்தில் எங்களுக்கு உதவிய நண்பர்கள் குறித்து பார்ப்போம்.

கசப்பாக இருந்த  சுற்றுலாவை ரசனையானதாக  மாற்றிய புதிய நண்பர்கள்

                                                             உடுமலைபேட்டையில் நாங்கள் வந்த வண்டியை அனுப்பி விட்டு நண்பர்கள் செல்வராஜ் மற்றும் சின்னப்பன் ஆகியோரை தொடர்பை கொண்டேன்.இவர்களை நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது.அப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் பேசிவிட்டு , அன்று உதவி என்று கேட்டேன்.உடனடியாக எங்களை வந்து சந்தித்து சில வண்டிகளை சொல்லி எங்களுக்கு நல்ல நேரத்தில் நம்பிக்கை தந்தனர்.அவர்களுக்கு நன்றிகள் பல.

அன்பான,மனித நேயத்துடன் ,பாதுகாப்பான பயணத்துக்கு உதவிய நல்ல மனிதர்
                        இதற்கு நடுவில் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) நாங்கள் முன்பே தங்குவதற்கு சொல்லி இருந்த காந்தலூர் சில்வர் ரூக் லாட்ஜ் உரிமையாளரை அஜய் ( தொலைபேசி எண் : 9846011486) அவர்களை தொடர்பு கொண்டோம்.அவரும் நம்பிக்கையுடன் இருங்கள் .நான் வண்டி ஏற்பாடு செய்து உங்களை அழைத்து செல்கிறேன் என்று நம்பிக்கையுடன் பேசினார்.பொதுவாக இதுபோன்று சுற்றுலா செல்லும் இடங்களில் பணம் பறிக்கும் முயற்சிகள்தான் அதிகம் நடக்கும் .ஆனால் விடுதி உரிமையாளர் எங்களுக்கு மிக குறைந்த செலவில் நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து கொடுத்து மறையூர் வரை அழைத்து சென்றார்.

 17 கிலோமீட்டருக்கு ( மலை உச்சிக்கு செல்ல ) ரூபாய் 300 மட்டுமே வாங்கி அசத்தும் ஆட்டோக்கள்
                                                       மறையூரில் பெரும்பாலும் தமிழர்கள்தான் உள்ளனர்.மாநிலம் கேரளா ஆகும்.மலை பகுதியில் மிக குறைந்த செலவில் எங்களை உச்சியான இடத்துக்கு மறையூரில் இருந்து காந்தலூருக்கு குமார் என்கிற ஆட்டோக்காரர் அன்புடன் அழைத்து சென்றார்.வழிநெடுகிலும் எங்களுக்கு பல்வேறு மலையில் உள்ள காடுகள் தொடர்பான செய்திகளை சொல்லி சென்றார்.செங்குத்தான மலை தொடரில் எங்களை பாதுகாப்புடன் 17 கிலோமீட்டர் தூரத்துக்கு 300 ரூபாயில் அழைத்து சென்றது நல்ல விஷயம்.அனைத்து ஆட்டோக்களும் இதே தொகையில் தான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.நாங்கள் காந்தலூர் மேலே குகநாதபுரம் மேலே செல்ல மேலும் மூன்று கிலோமீட்டர் ஆனது அதற்கும் சேர்த்து ரூபாய் 50 மட்டுமே வாங்கி கொண்டார்.எங்களுக்கு மிகுந்த அதிசயம்.நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் சிலர்தான் அப்படி நல்லவர்கள்.(காரைக்குடியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரியபவன் சுமார் அரை கிலோமீட்டர் வருவதற்கு ரூபாய் 70 என்பதும் குறிப்பிடத்தக்கது.)
                                         ஆட்டோக்காரர் குமாருக்கு நன்றி சொல்லி விட்டு மாலை 6 மணிக்கு விடுதி உள்ளே சென்றோம்.விடுதி உரிமையாளர் எங்களை அன்புடன் வரவேற்றார்.இரவு உணவு சாப்பிட்டோம்.ரூம்களும் அருமையாக இருந்தது.

உடுமலை டூ மறையூர் செல்லும் வழியில் உள்ள பார்க்கும் இடங்கள் :
                                                 உடுமலையில் இருந்து கிளம்பும்போது நாம் முதலில் சின்னார் காடுகளை சந்திப்போம் .அதற்கு முன்பாக அமராவதி அணை வெளிப்பகுதியில் சாலைகளின் நடுவே காணலாம்.அங்குஇருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதர்கள் குடியிருப்பு கிடையாது.அடர்ந்த காடுகள் மட்டுமே உண்டு.அழகான வீயூ பார்க்கும் இடங்கள் உண்டு.அவற்றை ரசித்து கொண்டே நாம் 30 கிலோமீட்டர் தாண்டினால் ஆலம்பட்டி என்ற வனச்சரக அலுவலகம் வரும்.அதற்கு முன்பாக சின்னார் செக் போஸ்ட் வரும்.அதனையும் கடந்து சென்ற பிறகுதான் தூவானம் அருவி நம் கண்ணனுக்கு அழகாக தெரியும் .அடர்ந்த காடுகளின் வழியே நாம் பயணித்து பிறகு மறையூர் செல்ல வேண்டும்.

தூவானம் அருவிக்கு செல்லுதல் :
                                   தூவானம் அருவிக்கு நாம் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) ஆலம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு சென்று ரூபாய் 230க்கு டிக்கெட் எடுத்து கொண்டு வனவர் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து தூவானம் அருவியை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி அதே இடத்துக்கு வரலாம் என்று சொன்னார்கள்.இயற்கை நிறைந்த காடுகளின் வழியே நாம் சென்று விட்டு குளிர்ந்த அருவியில் குளித்து விட்டு மீண்டும் வந்து விடலாம்.ட்ராக்கிங்த்தான் செல்ல வேண்டும்.வாகனம் செல்லாது.

இரண்டாம் நாள் பயணம் :

 கண்ணை கவரும் காந்தலூர்

                                           காந்தலூரில் நாங்கள் ( லெ .சொக்கலிங்கம் ,காரைக்குடி ) தங்கி இருந்த சில்வர் ரூக் ரூமிலிருந்து கிளம்பி ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் வாகனம் அமர்த்தி கொண்டு கிளம்பினோம்.ஆட்டோ மூலம் முதல் பயணம் சென்றோம்.ஆதிவாசிகள் குடியிருப்பு அருகில் உள்ள வியூ பகுதிக்கு பகுதிக்கு சென்றோம்.

மலையில் தொங்கும் தேன் கூடுகள் :
                                           மலை உச்சியில் தேன்கூடுகள் அதிகம் இருந்தது.அதனை காட்டு பகுதிக்குள் நடந்து சென்று பார்த்தபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது.இப்படியும் தேன்கூடுகள் தொங்கும் என்று அப்போதுதான் அறிந்து கொண்டோம்.

ஆதிவாசிகள் குடியிருப்பு அருகே உள்ள வியூ பாயிண்ட் :
                                                                 சுமார் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி நாம் உள்ளே செல்ல வேண்டும்.அங்கு லெமன் க்ராஸ் அடர்ந்த பகுதியில் வாட்ச் டவர் உள்ளது.அதனில் ஏறி பார்க்கும்போது நமக்கு வியப்பாக உள்ளது.அருமையான இடம்.பிறகு லெமன் கிராஸ் வழியாக தொடர்ந்து நடந்து செல்லும்போது நமக்கே வியப்பு  தரும் வகையில் அருமையான பார்க்கும் இடங்கள் உள்ளது.பார்த்து கொண்டே இருக்கலாம்.அழகான இடம்.மீண்டும் உள்ளே வந்தால் அங்கு அழகிய பூந்தோட்டம் உள்ளது.அதன் உள்ளே மலை தென் விற்கிறார்கள்.ஒரே லிட்டர் சுமார் 700 ரூபாய் .நாங்கள் ஆறுமுகம் என்கிற ஆதிவாசியுடன் சிறிது நேரம் பேசி  அவர்களது குடியிருப்பு தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டோம்.

மரத்தக்காளி  தோட்டம் :
                                                காந்தலூர் மேலே பெருமாள் மலை பகுதியில் ஆப்பிள் தோட்டம் அமைந்து உள்ளது.அங்கு ரெட் ஆப்பிள்,வெள்ளை சப்போட்டா, பேஷன் பழம் என பல்வேறு மரங்களையும்,பூக்கள் அடர்ந்த சோலையையும் காணலாம்.மகிழ்ச்சியான தகவல் அதிகம் உள்ளது.எங்களுக்கு சரசுவதி என்கிற அம்மாள் அனைத்து தோட்டங்களையும் அன்புடன் விவரித்து சொன்னார்கள்.கெமிக்கல் உரம் எதுவும் இல்லாத இயற்கை உரத்துடன் விளையக்கூடிய பழங்கள் அனைத்தும் அங்கு உள்ளது.நாங்களும் சீதா பழம் ,பேரிக்காய் ,மரத்தக்காளி போன்றவை வாங்கி வந்தோம்.இங்கு ஒரு ஆளுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 15 ஆகும்.

மதியம் சாப்பிட்டு விட்டு அடுத்து அருவி சென்றோம்.

 குளிருடன் அருவி குளியல் :
                                                            மீண்டும் ஆட்டோ வழியாக கீலாந்தூர் அருவிக்கு சென்றோம்.சுமார் 20 நிமிடம் காடுகள்,மலைகளின் வழியாக நடந்து சென்று பார்த்தால் அருமையான அருவி.பார்த்து ரசிக்க வேண்டிய இடம். குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்.குளிப்பதற்கு அருமையான இடம்.அருவி தண்ணீர் நம்மீது படும்போது அப்படி ஒரு சுகம்.அந்த அருவியில் சுமார் ஓரு மணி நேரம் இருந்து விட்டு பிறகு அங்குஇருந்து காந்தலூர் சென்று டீ குடித்து விட்டு பிறகு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம்.

ஆஃப்ரோடு காடுகளுக்குள் விலங்குகள் பார்க்க ஒரு பயணம் :
                                                               காந்தலூர் மலையில் இருந்து அடர்ந்த காடுகளுக்குள் ஒரு பயணம் ஜீப் வழியாக சென்றோம்.சரியான காடு.சுமார் 20 நிமிட பயணத்துக்கு பின்பு நாங்கள் நடந்து ஒரு அடர்ந்த புதர் போன்ற காடுகளுக்குள் பயணித்தோம். மிக த்ரில்லிங்கான பயணம். ஒரு பக்கம் மலை.மறுபக்கம் பள்ளம்.அடர்ந்த பள்ளம்.அதன் வழியாக நடந்து சென்று நாங்கள் வியூ பாயிண்ட் பார்த்தோம்.எங்களை பிரமிக்க வைத்த இடம் அது.ஒரு அடி தவறி வைத்தாலும் நம்மை அதல பாதாளத்துக்கு தள்ளி விடும்.அது போன்று இடத்துக்கு சென்று வந்தோம்.காடுகளுக்குள் பயணம் ஒரு சுகமான அனுபவம்.எங்களுக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.நாங்கள் செல்லும் வழியில் ஆங்காங்கே அட்டை பூச்சிகள் வேறு கிடந்ததது.அதனையும் தள்ளி விட்டு ஒரு வித தயக்கத்துடனே காடுகளுக்குள் நடந்து சென்று ,நாங்களும் மீண்டு வந்தோம்.பிறகு இரவு விடுதிக்கு திரும்பி நல்ல உணவு சாப்பிட்டு ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) இரவு உறக்கத்தை நல்ல குளிரூடன் அனுபவித்தோம்.ஜீப்பில் செல்லும்போது விலங்குகள் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.ஆனால் நாங்கள் செல்லும்போது ஒரே ஒரு கேளாய் ஆடு மட்டுமே பார்த்தோம்.

மூன்றாம் நாள் பயணம் :

உலகப்புகழ் பெற்ற மறையூர் ஜெகரி  :
                                                   காந்தலூரில் இருந்து கீழே வரும்போது ஜெகரி என்ற வெல்லம் தயாரிக்கும் இடம் உள்ளது .வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுவர்கள் அனைவரும் தமிழர்களே.வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சங்கரன்கோவில் பாலசுப்ரமணியன் என்பவருடன் பேசியபோது , சுமார் 50 வருடங்களாக அந்த ஊரில் இருப்பதாகவும்,தற்போது சில வருடங்களாக வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் சொன்னார்.முதலில் 3 டன் கரும்பு எடுத்து அதனை அரைக்கும் இயந்திரத்தில் வைத்து அரைத்து , மோடா என்கிற கலத்திற்குள் விடுகிறீர்கள்.அங்கு நன்றாக வடிகட்டி அதனை கொப்பரை என்னும் பெரிய கலனில் சுமார் மூன்று மணி நேரம் சூடு செய்கிறார்கள்.சூடு செய்வதற்கு கரும்பு தொகையை பயன்படுத்துகிறார்கள்.அதனை நன்றாக இறுக வைத்து பண்ணை என்கிற கலத்தில் வெல்லமாக மாற்றுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆற வைக்கிறார்கள்.இதன் விலை கிலோ ரூபாய் .70 ஆகும்.இதன் சிறப்பு நேரடியாக பாலில் வெல்லத்தை போட்டு நாம் பயன்படுத்தலாம்.இதனில் எந்த கெமிக்கலும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொப்பரையில் சுட வைக்கும்போது மட்டுமே 100கிராம் சுண்ணாம்பு சேர்க்கிறார்கள்.மிக அருமையான வெல்லம் வாங்கிய மகிழ்ச்சியில் அங்கு இருந்து கிளம்பினோம்.

குரங்குகள் செல்வதற்கு அந்தரத்தில் பாலம் :

                                        மறையூரில் காலை உணவை முடித்துக்கொண்டு அடர்ந்த காடுகளின் வழியே மீண்டும் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.மறையூர் தாண்டிய உடன் கரிமுட்டி அருவியின் அழகை ரசித்து கொண்டே சென்றோம்.சின்னார் என்கிற செக் போஸ்ட் அருகே இரண்டு மரங்களின் உச்சியில் கீழே குரங்குகள் செல்லாமல் மரத்தின் மேலே செல்லுமாறு இரண்டு மரங்களுக்கு நடுவே பாலம் அமைத்து இருந்தது எங்களுக்கு வியப்பை தந்தது.அதுவும் அருகில் உள்ள மரங்களின் வழியே குரங்குகள் எளிதாக தாவி சென்று விடுமாம்.தூரத்தில் உள்ளே கிளைகளின் நடுவே மட்டும் பல இடங்களில் பாலம் அமைத்து குரங்குகளையும் பாதுகாப்பாக செல்ல உதவி இருந்தனர்.

பிரமிக்க வைத்த அமராவதி அணை :
                                                                 சின்னார் தாண்டிய உடன் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அமராவதி அணை இருந்த்தது.ஒரு நபருக்கு ரூபாய் 10 விதம் நுழைவு கட்டணம். மதியம் சுமார் 2.00 மணி அளவில் உள்ளே நுழைந்தோம்.அங்கு இருந்த ஆவின் கடையில் சுட,சுட பொறித்த மீன் சாப்பிட்டோம்.பிள்ளைகள் ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.பிறகு அணையின் அழகை ரசித்து கொண்டே மேலே ஏறினோம்.அங்கு உள்ள படகில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.அருமையான தண்ணீர் தேங்கி உள்ளது.பார்க்கவே ரம்மியமாக இருந்தது.மிகப்பெரிய அணை பகுதியை பார்வையிட்டு பல கோணங்களில் போட்டோ எடுத்துக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

பயமுறுத்தும் முதலை பண்ணை :
                                                       அமராவதி அணையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள   முதலை பண்ணை உள்ளே நுழைவு சீட்டு வாங்கி கொண்டு சென்றோம்.அங்கு பல நூறு முதலைகள் நமது அருகில் உள்ளது போன்று தடுப்பு வலைகள் வைத்து பார்க்க விடுகின்றனர்.நாங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) செல்லும்போது பல முதலைகள் தண்ணீரின் உள்ளே இருந்து வெளியே வந்தது.பார்க்கவே பயங்கரமாக இருந்தது.பிறகு பல முதலைகள் வாயை திறந்து ஆஆ என கிடந்தது.பற்கள் அதிகமாக இருந்தது.அவை நகர்வதே எங்களுக்கு பார்க்க பிரமிப்பாக இருந்தது.அதனை ரசித்து விட்டு அங்கு இருந்து மீண்டும் திருமூர்த்தி அணை சென்றோம்.

திருமூர்த்தி அருவி குளியல் :
                                                          திருமூர்த்தி அருவிக்கு சுமார் மூன்று மணிக்கு சென்றோம்.அங்கு வாகனம் நிறுத்தும் இடத்தில இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே நடந்து செல்ல வேண்டும்.நடந்து சென்ற பிறகு அருவியில் குளிப்பது சுகமானது ஆகும்.சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வாகனம் இருக்கும் இடத்திற்கு வந்தோம்.அருவி செல்லும் வழியில் ஏகப்பட்ட குரங்குகள் உள்ளன .அருவியில் குரங்குகள் அதிகம் உள்ளது .கவனமுடன் இருக்க வேண்டும்.குட்டி குரங்குகள் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.நமது அருகில் வந்து செல்கின்றன.அது ஒருவிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.அருவியில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது.கூட்டம் அதிகம்.இருந்தபோதிலும் சுகமாக குளித்தோம்.மீண்டும் ஐந்து மணிக்கு வாகனம் வந்து அடைந்தோம்.அருவி உள்ளே செல்ல நுழைவு கட்டணம் ரூபாய் ஐந்து மட்டுமே.

வீடு திரும்புதல் :
                                        சுமார் 5 மணி அளவில் திருமூர்த்தி மலையில் கிளம்பி குறிச்சிக்கோட்டை ,நெய்க்காரப்ட்டி ,பழனி ,திண்டுக்கல்,நத்தம்,கொட்டாம்பட்டி,சிங்கம்புணரி,திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

உதவிய நண்பர்களுக்கு நன்றி 
                                            இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்து பயணித்த அண்ணன் நடராஜன்-மீனாட்சி,அவர்களது புதல்வர் சிவா,சரியான நேரத்தில் உதவி கரம் நீட்டிய செல்வராஜ்,சின்னப்பன்,பொள்ளாச்சி ஓய்வு வங்கி மேலாளர் பழனியப்பன், விடுதி உரியமையாளர் அஜீஜ், விடுதி உதவியாளர் ராஜன்,மூன்றாம் நாள் வாகன ஓட்டுநர் மூணாறு - அடிமாலியை சேர்ந்த அஜய் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் பல.எங்களுக்கு காந்தலூரை அறிமுகப்படுத்திய ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றிய ஆசிரியர் கார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

தங்கும் விடுதியின் சிறப்பு :

நீங்கள் காந்தலூர் சென்றால் தங்குவதற்கு அருமையான விடுதி : சில்வர் ராக் ,குகநாதபுரம்,காந்தலூர் .இதன் உரிமையாளர் அஜீஜ் மிகவும் அருமையான நபர்.நாங்கள் மீண்டும் வரும்போது நல்ல வாகனம் எங்களுக்கு பிடித்து கொடுத்து ,அவரும் எங்களுடன் பயணம் செய்து எங்களை வழி அனுப்பி வைத்து உதவினார்.எந்த விதமான ஏமாற்று வேலையும் இல்லாமல் உதவினார்.அவருடன் பயணித்த வாகன ஒட்டி அஜய் அவர்களும் எங்களுக்கு முகம் சுளிக்காமல் வண்டி ஒட்டி சரியான நேரத்தில் எங்களை அழைத்து வந்தார்.
SILVER ROCK GUEST HOUSE CONTACT NUMBER : 98460 11486

அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி.
8056240653
 

No comments:

Post a Comment