Sunday 24 June 2018


`பாய்ஸ் வீட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாதா என்ன?' பள்ளி மாணவியின் சுளீர் கேள்வி!

ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பேசிய வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அது, மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பேச்சு அல்ல. சமூகத்தில் பல ஆண்டுகளாகப் பல குடும்பங்களில் இயல்பாக நடந்துவரும் விஷயத்தின் வேறொரு கோணத்தை அலசுகிறார், அந்த மாணவி.
மாணவி
தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் எனும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி மாணவி, சிரேகா. அவர் பேசியது என்னவென்று பார்க்கும் முன்பு, அப்படிப் பேசுவதற்குத் தூண்டிய நிகழ்வு பற்றி பகிர்கிறார்,  பள்ளியின் தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம்.
லெ.சொக்கலிங்கம் ``எங்கள் பள்ளியில் பாடங்களை நடத்துவதில் காட்டும் அக்கறைக்கு இணையாக, இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் கடமையாக வைத்திருக்கிறோம். அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம். அஞ்சல் நிலையம், வங்கி, தீயணைப்பு நிலையம், வானவியல் நிலையம், வானொலி நிலையம் என எங்கள் மாணவர்கள் பொதுவெளியில் பழகும் வாய்ப்பைத் தொடர்ந்து ஏற்படுத்தித் தருகிறோம். சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகிறது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக, `பாலினச் சமத்துவப் பயிற்சி முகாம்' நடத்தினோம்.

குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் பர்வதவர்த்தினி அளித்த பயிற்சி, எங்கள் மாணவர்களின் பார்வையை மாற்றி அமைத்தது. அவர் நிகழ்வில் பேசும்போது, `யாரிடமும் எவ்வளவு மதிப்பெண் எனக் கேட்க மாட்டேன், ஏனெனில், அவை அந்தத் தேர்வோடு முடிந்துவிடும். நாம் பேசப்போவது நம் அன்றாட வாழ்க்கையைப் பற்றி' என்றவர், `மீனு' என்ற குறும்படத்தைத் திரையிட்டார். ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தைக்கு அதிக உணவும், பெண் குழந்தைக்கு  குறைவான உணவும் பரிமாறப்படுகிறது. இதை அந்தப் பெண் குழந்தை கேள்வி கேட்கிறாள். அடுத்த நாள், பெண் குழந்தை செய்யும் வேலைகள் அனைத்தையும் ஆண் குழந்தை செய்வது என ஓர் ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன்படி, நிறைய வேலை செய்யும் ஆண் குழந்தைக்குக் குறைவான உணவு பரிமாறப்படும், `இவ்வளவு வேலை செய்திருக்கிறேன்; எனக்கு ஏன் குறைவான சாப்பாடு?' எனக் கேட்கிறான் அவன். இப்படித்தானே அதிக வேலை செய்யும் உன் அக்காவுக்குக் குறைவான உணவு கொடுக்கப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து அந்த ஆண் குழந்தையின் மனநிலை மாறுகிறது' இதுதான் `மீனு' குறும்படத்தின் கதை.
இந்தப் படம்போல யார் யார் வீடுகளில் நடக்கிறது எனக் கேட்டபோது, பலரும் கை உயர்த்தியது திகைப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. உணவில் மட்டுமா பாகுபாடு? அழுவது, சிரிப்பது போன்ற உணர்விலும் ஆண், பெண் பேதம் பார்க்கப்படுகிறது. ஆண் பிள்ளைகள் அழக் கூடாது எனச் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என விளக்கினார் பர்வதவர்த்தினி. அதன்பின், மாணவர்களின் கலந்துரையாடலாக நிகழ்ச்சியின் தன்மையை மாற்றியமைத்தார். அப்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி, `எங்க வீட்டுல பெரியப்பா மகன்களுக்கு, எனக்குக் கொடுப்பதைவிட அதிகமாக தருவாங்க. ஏன் இப்படி அதிகமாக வைக்கிறாங்க என அம்மாவிடம் கேட்பேன். `அவங்க ஆம்பளை பசங்க. அவங்க அதிக வேலை செய்யணும் இல்லையா?'னு அம்மா சொல்வாங்க. நானும் அது சரிதான்னு நினைச்சேன். ஆனால், இன்னிக்குதான் தெரியுது, நாங்களும் நிறைய வேலை செய்யறோம். உணவுல வித்தியாசம் பார்க்கக் கூடாதுனு. சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட இதைச் சொல்வேன்" என்றார்.
மாணவி சிரேகா
ஏழாவது படிக்கும் சிரேகா, `எங்கள் வீட்டில், தம்பிக்குத்தான் உணவு அதிகம் வைப்பாங்க. தம்பி எந்த வேலையும் செய்ய மாட்டான். ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்ததும், பையைத் தூக்கிப் போட்டுட்டு, விளையாடப் போயிடுவான். நான்தான் வீட்டு வேலைகளைச் செய்வேன். ஏன், பாய்ஸ் வீட்டு வேலைகளைப் பார்க்கக் கூடாதா? இன்னிலிருந்து தம்பியையும் வேலை பார்க்கச் சொல்லப்போறேன். ரெண்டு பேருக்கும் வேலையைப் பகிர்ந்துகொடுங்கனு சொல்வேன்' என்றார்.
ஐயப்பன் ஐயப்பன் எனும் மாணவன் பகிர்ந்துகொண்ட விஷயம், மாற்றம்கொண்டதாக இருந்தது. ``எனது வீட்டில் கூட்டுவது, கோலம் போடுவது என எல்லா வேலைகளையும் நான்தான் செய்வேன். அம்மாவே, `ஏண்டா, பொம்பளை மாதிரி இதெல்லாம் செய்யறே?'னு கேட்பாங்க. அப்போ எனக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால், இன்னிக்கு மேடம் சொன்னதைக் கேட்டதும் அந்தச் சங்கடமும் போயிடுச்சு. வேலையில் ஆண் வேலை, பெண் வேலை என வித்தியாசம் கிடையாது' என்றான்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பல மாணவர்களும் தங்கள் வீட்டில் பேசி, அவர்கள் வீட்டின் ஆண் பிள்ளைகளையும் வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்குகிறார்கள் என்ற செய்தியைச் சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியின் வெற்றி என்பது, வெறும் கைதட்டல் அல்ல. இதுபோன்ற மாற்றங்கள்தாம். இதற்குக் காரணமான பர்வதவர்த்தினி மேடத்துக்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாக முடித்தார் லெ.சொக்கலிங்கம்.
மாணவிப் பேசிய வீடியோ:
https://www.youtube.com/watch?v=LrIx2L6gqvA&t=5s

ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்லாமல், பெண்ணும் ஆணும் சமம் என்று சொல்ல மாணவர்களைப் பழக்குவோம்.

No comments:

Post a Comment