Wednesday 27 June 2018

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

அன்பு தொடர்பான பயிற்சி 

அகம் ஐந்து புறம் ஐந்து 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                               பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் பௌண்டேஷன் பயிற்சியாளர் தயானந்த் மாணவர்களுக்கு அன்பு என்கிற தலைப்பில் வாழ்வியல் பயிற்சி அளித்தார்.அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் மொத்தம் பத்து திறன்களை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திறன் என்கிற விதத்தில் பத்து பயிற்சியாளர்களை கொண்டு பத்து மாதங்கள் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.பயிற்சி தொடர்பாக மாணவர்கள் காயத்ரி,சந்தியா,கிஷோர்குமார்,ஈஸ்வரன்,சிரேகா ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் முத்து மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் பௌண்டேஷன் சார்பாக அன்பு என்கிற தலைப்பில்  தயானந்த் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்.




மேலும் விரிவாக ;
                            தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் பௌண்டேஷன் சார்பாக அன்பு என்கிற தலைப்பில்  தயானந்த் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பயிற்சியில் 

அகம் ஐந்து,புறம் ஐந்து :
                                         அகம் ஐந்து என்கிற தலைப்பில் அன்பு செலுத்துதல்,பொறுப்புணர்வு,ஒற்றுமை,நேர்மை,பிறர் நிலையில் இருந்து பார்த்தல் என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும்,புறம் 5 என்கிற தலைப்பில் கவனித்தல் ,பாராட்டுதல்,ஆழமான சிந்தனை,ஆக்க சிந்தனை ,கோபத்தை கையாளுதல் என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மொத்தம் பத்து திறன்களை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திறன் என்கிற விதத்தில் பத்து பயிற்சியாளர்களை கொண்டு பத்து மாதங்கள் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

                              பயிற்சியாளர் முதல் தலைப்பாக அகம் ஐந்தில் உள்ள அன்பு என்கிற பொருள் குறித்து விளக்கும் வண்ணம் ,   மாணவ,மாணவியரை பல குழுக்களாக பிரித்து அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சி அளித்தார்.குழுக்களுக்குள் எவ்வாறு ஒற்றுமையை கொண்டு வருவது என்பதை செயல்கள் மூலம் செய்து நேரடியாக விளக்கம் அளித்தார்.அடுத்தவர் நிலையை உணர்ந்து அன்பு செலுத்துதல் தொடர்பாக விளக்கப்பட்டது .

வகை படுத்துதல்  : 
                                          முதலில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களை வகைப்படுத்தினார்கள்.வரிசையில் மாணவர்களை அமரவைத்து ,அவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மேம்படுத்த ஒருவரை ஒருவர் எதிரே உட்கார்ந்து உயிரெழுத்து வடிவில் அஃகு வடிவில் அமர்ந்து தன் நண்பர்களை கண்களால் மட்டும் தலையை அசைக்காமல் பார்க்குமாறு செய்தல்.ஒரு செயலை நன்றாக செய்தால் தன் முதுகில் தன் கையால் தட்டி தன்னையே பாராட்டிக்கொள்ளுதல் வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி :
                                         பிறகு கண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கண்கள் நன்றாக இருந்தால் உங்களுக்கு அன்பு தானாகவே அதிகம் வரும் என்ற கருத்து சொல்லப்பட்டது .

தாரக மந்திர வார்த்தைகள் :
                                வாழ்க,வளர்க,வெல்க,உயர்க,ஓங்குக,ஒளிர்க,மிளிர்க என்ற வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து சொல்ல வைக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் ;
                                    உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளில் திறன் பத்து - என் சொத்து என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் எனககருதுகிறது . 
                                           நம் நாட்டில் அன்பின் வெளிப்பாடாக திகழ கூடிய பல்வேறு தலைவர்கள் வாழ்ந்து சென்று உள்ளார்கள்.அவர்கள் வழி நாமும் செல்ல வேண்டும்.அன்பை உணர்த்தும் வகையில் பாடல் பாடப்பட்டது . கதை சொல்லியும் அன்பின் வெளிப்பாடு விளக்கப்பட்டது.

பயிற்சியின் தொடர்ச்சி :
                                         அன்பு என்கிற தலைப்பிலான திறன் இந்த மாதம் முழுவதும் மாணவர்களில் வீடுகளில்,பள்ளியில்,நடந்து செல்லும் சாலையில் என செல்லும் இடமெல்லாம் தன்னை சுற்றி எவ்வாறு அன்பு பயன்படுத்த பட்டது என்பதை மாணவர்களாலேயே குறித்து வைத்து பள்ளியில் எடுத்துக்கூற சொல்லப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த தலைப்புகளில் ஆன பண்புகள் விளக்கப்படும்.

பயிற்சி குறித்து மாணவர்களின் எண்ணங்கள் :

எட்டாம் வகுப்பு மாணவி ; எனது அப்பாவிடம் நான் ஒரு பேணா கேட்டேன்.அவர் வாங்கி தர இயலவில்லை.நான் மீண்டும் கேட்டபோது என்னிடம் முதலில் கோபமாக பேசினார்.பிறகு சிறிது நேரம் கழித்து அவரே என்னிடம் அன்பாக பேசினார்.நான் கோபமாக இருந்தேன்.இந்த பயிற்சியின் வழியாக கோபத்தை குறைத்து என் அப்பாவிடம் அன்பாக இருப்பது என்று முடிவு செய்துள்ளேன் என்று சொன்னார்.

ஆறாம் வகுப்பு மாணவி சந்தியா ;
                                    எனது தம்பியிடம் நான் அடிக்கடி சண்டை போடுவேன்.கோபப்படுவேன்.இந்த பயிற்சி எனக்கு அதிகமான விசயங்களை கற்று கொடுத்து உள்ளது.நான் கோபப்படாமல் அன்புடன் இருப்பேன்.இதனை எங்கள் வீட்டில் செயல்படுத்துவேன்.


ஏழாம் வகுப்பு மாணவி சங்கரி : 
                                                பயிற்சி அளித்த தயானந்த் சார் அவர்கள் 57 முறை ரத்தம் தானமாக கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.அது போல் நானும் பிற்காலத்தில் ரத்தம் தானம் செய்வேன்.அதன் வழியாக அன்பை வெளிப்படுத்துவேன் என்று பேசினார்.

ஆசிரியை முத்துலெட்சுமி :
                                       பயிற்சியாளர் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே ,மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு கோபப்படாமல் அன்புடன் பதில் சொல்லி அசத்தினார்.நான் படிக்கும் காலத்தில் எனக்கு இந்த பயிற்சி கிடைக்கவில்லை.இந்த மாணவர்களுக்கு கிடைத்து உள்ளதற்கு நிகில் அமைப்புக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பேசினார். 

No comments:

Post a Comment