Monday, 18 June 2018

முகநூல் நட்பின் வழியாக மாணவிகளின்  கல்விக்கு உதவி


மாணவிகளின் கல்விக்கு உதவி தொகை வழங்குதல் 




உதவி செய்ய தூண்டிய எஸ் டூ எஸ் சேவை அமைப்பு

தேவகோட்டை - தேவகோட்டையில் பள்ளியில் பயிலும்  மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
                       மைசூரை சேர்ந்த சேவை அமைப்பு (துபாயில் வசிக்கும் தமிழர்) தேவகோட்டையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு உதவி செய்தார்? முகநூல் நட்பே காரணம் .

                     கல்வி   உதவி தொகை பெற்றுக்கொண்ட மாணவிகளின் தாயார் மாலா கூறியதாவது :
                                    எனது ஊர் தேவகோட்டை .எனக்கு மூன்று மகள்கள் .எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலை பார்த்துதான் எனது மூன்று மகள்களையும் படிக்க வைக்கின்றேன்.எனது மூன்றாவது மகள் காவியா தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்று உள்ளார்.எனது மகள் இந்த பள்ளியில் படித்த போது சென்னையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை போட்டியில் பங்குபெற்று பதக்கம் பெற்றார்.என்னால் எனது மகளை எந்த போட்டிக்கும் அழைத்து செல்ல இயலவில்லை.பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்களே சென்னை,மதுரை,காரைக்குடி,திருச்சி போன்ற ஊர்களில் நடைபெறும் போட்டிகளுக்கு பள்ளி செலவில் அழைத்து சென்று வந்து உள்ளனர்.எனக்கு இந்த பள்ளியில் படிக்க வைத்தவரை எந்த செலவும் இல்லை.மதிய உணவு நல்ல முறையில் வழங்கி , கல்வி தொடர்பான அனைத்துமே பள்ளியில் நல்ல முறையில் கற்று கொடுத்து உள்ளனர்.தற்போது ஒன்பதாம் வகுப்பு செல்லும்போது ஆகும் செலவிற்கு யாரிடமாவது உதவி தொகை பெற்று தர இயலுமா என கேட்டேன்.பள்ளி தலைமை ஆசிரியரும் உதவி தொகை கேட்டு பார்க்கின்றேன் என்று சொல்லி கேட்டு வாங்கியும் கொடுத்து உள்ளார்.

                            தற்போது புதியதாக வேறு பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கச் சென்று உள்ளார்.காவியாவின்  கல்வி செலவிற்கும்,எனது இரண்டாவது மகள் (மாற்று திறனாளி ) 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.இருவரின்  கல்வி செலவுக்கும் மொத்தம் ரூபாய் 8330யை மைசூருவை சேர்ந்த ரவி சொக்கலிங்கம் எஸ் டூ எஸ் சேவை அமைப்பு வழியாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மூலம் கல்வி உதவி தொகையாக வழங்கி உதவி உள்ளார்கள்.இதனை கொண்டு எனது மகள்களை  நல்ல முறையில் படிக்க வைப்பேன்.எங்கோ இருந்துகொண்டு எங்களுக்கு இப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழியாக உதவி செய்யக்கூடிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் .இந்த உதவி தொகையானது எனக்கும்,எனது குழந்தைகளுக்கும் நல்ல நேரத்தில் எனது பெண்குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க உதவியாக இருக்கும் .தற்போது எனது மகளின் படிப்புக்கும்  கல்வி உதவி தொகை பெற்று தந்து உள்ள பள்ளி தலைமை ஆசிரியருக்கும் ,ரவி சொக்கலிங்கம் அவர்களின் சேவை நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 


மாணவி காவியா : 
 உதவி செய்ய தூண்டிய எஸ் டூ எஸ் சேவை அமைப்பு
                               எனக்கு இரண்டு அக்காக்கள்.எனது வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள்.எனது அம்மா வீடுகளில்  பாத்திரம் தேய்த்து எங்களை படிக்க வைத்து வருகிறார்.எனது அக்கா மாற்று திறனாளி.அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.மைசூருவில் உள்ள சேவை நிறுவனம் எங்களுக்கு உதவி உள்ளதால் நானும்  நன்றாக படித்து பிற்காலத்தில் உதவி தேவை படுபவர்களை கண்டறிந்து உதவுவேன் என்று சொன்னார். உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை சேவை அமைப்பு என்னுள் ஏற்படுத்தி உள்ளது என்றார்.


                               உதவி தொகை வழங்கப்பட்டது குறித்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
                                           தேவகோட்டையை சார்ந்தவர் மாலா.இவருக்கு கணவர் கிடையாது.கூலி வேலை,வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.இவரது மகள் எங்கள் பள்ளியில் எந்த செலவும் இல்லாமல் நன்றாக எட்டாவது வரை படித்து,முடித்து தற்போது ஒன்பதாவது வகுப்பு சென்று உள்ளார்.இவரது படிப்பு செலவுக்கும்,இவரது அக்கா 11ம் வகுப்பு படித்து வருகிறார் எட்டாயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என்றார்.பெண் குழந்தைகளின் கல்விக்கு வாய்ப்பு இருந்தால் உதவுங்கள் என்று கேட்டார்.
                                                       நானும் கடந்த இரண்டு வருடங்களாக முகநூல் வழியாக துபாயில் வசிக்கும் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நட்ப்பில் உள்ளேன்.( அன்னாரை நான் இது வரை நேரில் சந்தித்தது கிடையாது .தொலைபேசி வழி உரையாடல் மட்டுமே ) .எங்கள் பள்ளியின் செயல்பாடுகளை பார்த்து விட்டு பலமுறை பாராட்டு தெரிவித்து உள்ளார்.முகநூல் நட்பின் தொடர்ச்சியாக இந்த இரு மாணவிகளுக்கும்  உதவுமாறு அவரிடம் கேட்டு கொண்டேன்.அதன் தொடர்ச்சியாக பல்வேறு தகவல்களை கேட்டு கொண்டும்,மாணவி தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டும் உடன் பணமும் அனுப்பி அவர்களிடம் கொடுக்க சொன்னார்கள்.அவரது சேவை அமைப்புக்கும்,அவரது உதவிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கடந்த ஆண்டும் இது போல்  இதே சேவை அமைப்பின் வழியாக தேவகோட்டையில் உள்ள ஒரு மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்கி உதவி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
                     பெண் குழந்தைகளின்   கல்விக்கு உதவி செய்த அன்னாருக்கு நானும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.ஏழைக்கு எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள்.எழுத்து அறிவிக்க உதவியாக இருப்போரும் அவ்வாறே ஆவார்கள் என்பது உறுதி.
   

No comments:

Post a Comment