பாலின சமத்துவ பயிற்சி முகாம்
ஆணும் பெண்ணும் சரிபாதி
செய்து பார்த்தாலே வாழ்க்கைக் கல்வி
குழந்தை மைய செயற்பாட்டாளர் பேச்சு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆணும் பெண்ணும் சரிபாதி என்கிற தலைப்பில் பாலின சமத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை லிட்டில்ஸ் குழந்தைகள் மைய நிறுவனர் பர்வத வர்த்தினி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் தொடர்பாக பயிற்சி அளித்தார்.ஆண்களும்,பெண்களும் சமம்.இருவரும் சரிபாதியாக வேலைகளை பகிர்ந்து செய்ய பழக வேண்டும்.அடுத்தவர்கள் சிரமப்படும்போது நாம் சென்று உதவ வேண்டும் என்று பேசினார்.மாணவர்கள்ஸ்வேதா,காயத்ரி,ஐயப்பன்,புகழேந்தி,பாக்யலட்சுமி,
நித்யகல்யாணி,சந்தோஷ்,சிரேகா ஆகியோர் கேள்விகள் கேட்டு பரிசுகள் பெற்றனர்.குறும்படம் மூலம் பாலின சமத்துவம் விளக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆணும் பெண்ணும் சரிபாதி என்கிற தலைப்பில் நடைபெற்ற பாலின சமத்துவ பயிற்சி முகாமில் குழந்தை மைய செயற்பாட்டாளர் பர்வத வர்த்தினி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் .உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.
மேலும் விரிவாக ;
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆணும் பெண்ணும் சரிபாதி என்கிற தலைப்பில் நடைபெற்ற பாலின சமத்துவ பயிற்சி முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குழந்தை மைய செயற்பாட்டாளர் பர்வத வர்த்தினி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் .அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது;
மதிப்பெண்ணை யாரும் கேட்கப்போவதில்லை ;
உங்களை பிற்காலத்தில் யாரும் 10ம் வகுப்பு,12ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளாய் என்று கேட்கப்போவதில்லை.அதெல்லாம் தேர்வு நேரத்தோடு முடிந்து விடும்.என்ன படித்துள்ளாய் ? எனத்தான் கேட்பார்கள்.
செய்து பார்த்தாலே வாழ்க்கை கல்வி :
நமது மூளை கணினி போன்றது.சில விஷயங்கள் எங்காவது ஒரு மூலையில் உள்வாங்கி வைத்துக்கொள்ளும்.தேன் என்று தாளில் எழுதி நக்கினால் இனிக்குமா? இனிக்காது.அது போன்று படிப்பு என்பது எட்டுசுரைக்காய் ஆகி விடாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கல்வியாக இருக்க வேண்டும்.அதை இந்த பள்ளியில் நான் பார்க்கின்றேன்.செய்து பார்த்தாலே வாழ்க்கை கல்வி என்றார்.
பெண்களுக்கு எதையும் தாங்கும் வலிமை உண்டு ;
மிகவும் சந்தோசமாக இருந்தால் சிரிப்பு வரும்.கவலையாக இருந்தால் அழுகை வரும்.இது இயற்கையான விஷயம்.ஆனால் சமூகம் ஆண்பிள்ளை அழக்கூடாது.பெண்குழந்தை யாரும் சிரித்து பேசுதல் கூடாது என்பார்கள்.ஆண் ,பெண் என்பது உடல் உறுப்புகளில் வேறுபாடு இருக்கும்.பெண்களுக்கு கருப்பை உள்ளது.அதனால் குழந்தை பிறக்கிறது.இது இயற்கையில் அமைந்த நியதி.வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும்.பெண்களால் எதையும் தாங்கும் தன்மை இல்லை என்று நினைப்பது ,சொல்வது கட்டுக்கதை.
பெண்கள் மரம் ஏறலாம் :
பெண் பிள்ளைகள் மரம் ஏறுதல் கூடாது என்பதையெல்லாம் மாற்ற வேண்டும்.பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது அதிகமான வெப்பத்தை தாங்கி வலியை பொறுத்து கொள்ளக்கூடிய சக்தி உள்ளபோது ,பெண்கள் எதையும் தாங்கும் வலிமை இல்லாமல் இருக்காது.
பெண்களால் அனைத்தும் முடியும் ;
பொதுவாக பெண்கள் ஆண்கள் அளவுக்கு மரம் ஏறவோ , அதிக எடை தூக்கவோ பழக்கப்படுத்தப்படவில்லை.பெண்களும் எதற்கெடுத்தாலும் அழக்கூடாது.பொது தேர்வுகளில் பெரும்பாலும் பெண்கள்தான் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.
சமூகம் பிரித்து வைத்தல் :
ஆண்களையும்,பெண்களையும் பாலின பாகுபாடு காரணமாக சமூகம் நிறைய பிரித்து வைத்துள்ளது.அதனை மாற்ற வேண்டும்.ஆண் அழுதாலோ,பெண் அதிகம் சிரித்தாலோ சமூகம் கேலி செய்கிறது.ஆணும்,பெண்ணும் எதனையும் பகிர்ந்து கொண்டால்தான் இயல்பாக,சந்தோஷமாக ,நண்பர்களாக வாழ முடியும்.
அடுத்தவருக்கு உதவுங்கள் ;
சுண்டெலி வைத்து கதை கூறி ,அதன் வாயிலாக அடுத்தவருக்கு ஏற்படும் துன்பங்கள் வந்தால் நாமும் அதனை பார்த்து சிரிக்காமல் ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விளக்கினார்.
ஆணும்,பெண்ணும் சரிபாதி ;
ஆணும்,பெண்ணும் சரிபாதி என்பதை ஒரு குடும்பத்தை வைத்து அதில் அண்ணன் - தங்கை இடையில் நடைபெறும் நிகழ்வுகள் காட்சி படங்களாக திரையில் காண்பிக்கப்பட்டு உணர்த்தப்பட்டது.ஆணும்,பெண்ணும் அனைத்து வேலைகளையும் சிறு வயது முதலே பகிர்ந்து செய்ய வேண்டும் என்பது படங்களின் வாயிலாக தெளிவாக உணர்த்தப்பட்டது.வீடுகளில் உணவையும் பெற்றோர்கள் பகிர்ந்து வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும் பங்கு கொண்டனர்.
பாலின சமத்துவம் தொடர்பாக மாணவர்கள் கருத்து ;
எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி : எங்கள் வீட்டில் எனது பெரியப்பா மகன்களுக்கு எங்களை விட அதிக அளவில் உணவு வைப்பார்கள்.நான் அப்போதெல்லாம் எங்கள் அம்மாவிடம் கேட்டதுண்டு ? ஏன் இப்படி வைக்கிறார்கள் என்று.அதற்கு எனது அம்மா ,அவர்கள் ஆம்பிள்ளை பசங்க.அதனால் அப்படித்தான் வைப்பார்கள்.அவர்கள் அதிக வேலை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.இன்று நான் பார்த்த விஷயங்களில் இருந்து எனது அம்மாவிடம் சென்று ஆணும்,பெண்ணும் சரிபாதி,எங்களுக்கும் நல்ல உணவு கொடுங்கள்,பாதி அளவு கொடுங்கள்,மரம் ஏற கற்று கொடுங்கள் என்று சொல்வேன் என்று சொன்னார்.இனிமேல் அழமாட்டேன் என்றும் சொன்னார்.
ஏழாம் மாணவி சிரேகா : எங்கள் வீட்டில் எங்கள் அம்மா எனது தம்பிக்குதான் உணவு அதிகம் வைப்பார் .தம்பி எந்த வேலையும் செய்யமாட்டார்.வீட்டிற்கு சென்ற உடன் பையை தூக்கி எரிந்து விட்டு ,விளையாட சென்று விடுவார்.நான்தான் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் பார்ப்பேன்.இன்று முதல் எனது தம்பியையும் வேலை பார்க்க சொல்வேன்.இருவரும் பகிர்ந்து வேலை பார்க்க சொல்லி எனது அம்மாவிடம் வற்புறுத்துவேன் என்று சொன்னார் .
ஏழாம் வகுப்பு மாணவர் ஐயப்பன் : எனது வீட்டில் எல்லா வேலையும் நான்தான் பார்ப்பேன்.வீடு கூட்டுவது ,கோலம் போடுவது,தண்ணீர் எடுத்து கொடுப்பது,உணவு சமைப்பது என அனைத்துமே நான்தான் பார்ப்பேன்.எனது தங்கை ஆறாவது படிக்கிறார்.அவர் எந்த வேலையும் செய்யமாட்டார்.எனது அம்மாகூட என்னடாநீ பொம்பள புள்ள செய்யிற வேலையை செய்கிறாய் என்று கேட்பார்? எனக்கு சில நேரம் சங்கடமாக இருக்கும்.ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு,இவர்களின் பேச்சை கேட்ட பிறகு இனிமேல் ஆண் ,பெண் என்று பாராமல் வேலைகளை பகிர்ந்து செய்வதற்கு எனது தங்கையிடம் சொல்வேன்.அவரும் இங்குதான் உள்ளார்.நாங்கள் பகிர்ந்து வேலைகளை செய்வோம் என்று சொன்னார்.
ஆறாம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி (ஐயப்பன் தங்கை ) :எனது அண்ணன் சொல்வது உண்மைதான் .நான் வீட்டில் நன்றாக தூங்குவேன்.எந்த வேலையும் செய்யமாட்டேன்.இனி வரும்காலங்களில் நன்றாக எனது அண்ணனுடன் வேலைகளை பகிர்ந்து செய்வேன் என்று கூறினார்.
பெற்றோர் சார்பாக உஷா பேசுகையில் ;
ஆண் ,பெண் பாகுபாடு என்பது பல ஆண்டுகளாக உள்ளது.இதனை தவிர்க்க முடியதாகவே சமூகம் மாற்றி உள்ளது.இந்த நிலையில் இன்றைய இவர்களின் பயிற்சி இளம் மாணர்வகளின் மனதில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.ஆணும்,பெண்ணும் சரிபாதி என்கிற எண்ணத்தையும்,வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தையும் நல்ல முறையில் ஏற்படுத்தி உள்ளது சந்தோசமாக உள்ளது.பெண்கள் அனைத்து வேலைகளையும் பார்க்க இயலும் என்கிற தகவலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று பேசினார்.
பயிற்சியின் நிறைவாக அண்ணன் ,தங்கை,தம்பி ,அக்கா அனைவரும் வேலைகளை பகிர்ந்து பார்ப்போம் என்கிற உறுதி மொழியோடு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
No comments:
Post a Comment