Friday, 16 March 2018

உணவில்  கலப்படம் கண்டறிதல் எப்படி?

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
                                              நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி மாணவர்களின் உணவு கலப்படம் கண்டறிதல் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள் நடித்து காண்பிக்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதி பாசு முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம்  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை நேரடி செயல் விளக்கங்கள் வழியாக செய்து காண்பித்து மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.உணவு கலப்படம் தொடர்பாக புகார்களை 9444042322 என்கிற எண்ணிற்கு கட்செவி மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார்.கலப்படம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.நிறைவாக ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.அலுவலரின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்ன மாணவர்கள் உமா மஹேஸ்வரி,காயத்ரி,வெங்கட்ராமன்,ஜனஸ்ரீ ,கார்த்திகேயன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை நேரடி செயல் விளக்கங்கள் வழியாக செய்து காண்பித்து மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.


மேலும் விரிவாக :

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உணவு பொருள்களில் உள்ள கலப்படங்கள்  தொடர்பாக விளக்கி கூறிய தகவல்களை காணுங்கள் :

தேன் மிட்டாயை தவிருங்கள் :

                       மாணவர்களாகிய நீங்கள் கலர் அப்பளம்,இலந்தைப்பழ பேஸ்ட்,தேன் மிட்டாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.கலர் ,கலர் அதிகமாக சேர்க்கப்படும் பொருள்களில் வழியாக புற்று நோய் எளிதாக தாக்கும் அபாயம் அதிகம்.அஜினோ மோட்டோ என்கிற பொருளை அதிகமாக உணவின் சுவை கூட்டுவதற்காக சில ஹோட்டல்களில் சேர்ப்பார்கள்.அதனால் நமக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.அதனை உணவில் தவிருங்கள்.

அயோடின் குறைபாட்டினால் கரு சிதைவு :
                         அயோடின் உப்பை உணவில் கண்டிப்பாக சேருங்கள்.அயோடின் உப்பை இளம் வயதில் தவிர்த்து விட்டால் பிற்காலத்தில் நமக்கு கரு சிதைவு உட்பட பல்வேறு நோய்கள் வரும்.உப்பை திறந்து வைக்க கூடாது.அயோடின் உப்பை சேர்த்தால் குழந்தைகளின் அறிவு வளரும்.முன் கழுத்து கழலை,கருச்சிதைவு போன்றவை அயோடின் உப்பு சேர்க்காவிட்டால் ஏற்படும் நோய்கள் ஆகும்.

கோடீஸ்வர எலி,பூனைகள் பரப்பும் நோய்கள் :
                                                   எலி,பூனைகள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.ஏனெனில் அவை தங்களது சிறுநீரில் கோடிக்கணக்கான நோய் பரப்பும் கிருமிகளை கொண்டுள்ளது.அவற்றை மிக எளிதாக திறந்து வைத்துள்ள உப்பு ஜாடி மற்ற பாத்திரங்களில் உள்ள உணவு பொருள்களில் சிறுநீரை இருந்து விட்டு போய் விடுகிறது.அதன் வழியாக நமக்கு பல்வேறு நோய்கள் உருவாகிறது.எனவே உணவு பொருள்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

பொருள் வாங்கும்போது என்னவெல்லாம் பார்த்து வாங்க வேண்டும் ?
                                கடையில் நாம் பொருள் வாங்கும்போது எப்.எஸ்.எஸ்.எ.ஐ.என்கிற குறியீடு,தயாரிப்பு தேதி,எஸ்பிரி தேதி ,கடையின் பில்,பொருளின் தயாரிப்பு முகவரி போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும்.பொருள் தயாரிப்பதற்கான உரிமம் எண் போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும்.

பொருள்களில் கலப்படம் இருந்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும் ?
                              பொருள்களில் கலப்படம் இருந்தால் 9444042322 என்கிற எண்ணுக்கு கட்செவி அனுப்பலாம்.24 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.புகார் கொடுத்தவரின் தகவலும் பாதுகாப்பாக வைக்கப்படும்.நாம் பொருள் வாங்கும் கடையில் பொருள் வாங்கும் அனைவரும் படிவம் 5பி என்கிற படிவத்தை பெற்று மாதிரி சோதனைக்கு அனுப்ப சொல்லலாம்.புகார் செய்யலாம்.

வடையை நியூஸ் பேப்பரில் சுற்றி கொடுத்தால் புகார் செய்யலாமா ? 
                              வடை போன்ற சாப்பிடும் பொருள்களை நியூஸ் பேப்பரில் சுற்றி கொடுக்கக்கூடாது.அதனில் சுற்றி சாப்பிட்டால் நமக்கு கேன்சர் வரும்.எனவே வடையை நியூஸ் பேப்பரில் சுற்றி கொடுத்தால் நீங்கள் கட்செவி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.தடை செய்யப்பட்ட புகையிலை , போலியான டீ தூள்,இலந்தை பேஸ்ட்,தடை செய்யப்பட்ட ஊறுகாய் போன்றவை விற்றால் புகார் செய்யலாம்.

எந்த மாதிரியான உணவுகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்?
                                 பாஸ்ட் புட் ,பானிபூரி ,தந்தூரி சிக்கன் ,சிக்கன் 65,மேகி போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு புற்று நோய் வரும்.எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
                           
                       அலுவலரின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்ன மாணவர்கள் உமா மஹேஸ்வரி,காயத்ரி,வெங்கட்ராமன்,ஜனஸ்ரீ ,கார்த்திகேயன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ராஜேஷ்,நித்திய கல்யாணி,அய்யப்பன்,சந்தியா,சின்னம்மாள் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.


 

 







No comments:

Post a Comment