Monday, 12 May 2014

நூறு சதவீத தேர்ச்சி பூஜ்யமாகிப் போன கதை


பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் முன்னெப்போதுமில்லா அளவிற்கு படுபாதாளத்திற்கு சென்றுள்ளது.பிறவியிலேயே காதுகேளாமல், வாய் பேச முடியாமல் பிறந்தவர்கள் மற்றவர்களைப் போல வாழ கல்வி அறிவு அவசியமாகிறது. உடல் குறைபாடுள்ளவர்கள், கல்வி அறிவைப் பெற அவர்களைப் பெற்றவர்களின் முயற்சி மட்டும் போதாது. அரசின் சிறப்பான ஏற்பாடுகளும் முக்கியமாக தேவைப்படுகின்றன.
மத்திய - மாநில அரசுகள் மாற்றுத் திறனாளிகளும், சமூகத்தில் மற்றவர்களைப் போல் வாழ்வதற்கு சிறப்பு நிதிகள் ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன. அத்திட்டத்தில் முக்கியமாக இருப்பது மாற்றுத் திறனாளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி செயலாக்கி வருவதாகும்.
தமிழகத்தில் பல்வேறு நிலை மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கொடுக்க 22 பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது. இப்பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மாற்றுத் திறனாளி ஆணையத்தின் கீழ் செயல்படுகின்றன. பொதுவாக பள்ளிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கொடுக்கும் பள்ளிகளை கண்காணிக்க உரிய அதிகாரிகளோ சிறப்பு ஏற்பாடுகளோ ஏதுமில்லை. இதனால் இப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து திட்டமிட முடியாமல் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகளுக்கும் காரணமாக இதுவே அமைந்து விடுகின்றது.காதுகேளாதவர்களுக்கு தஞ்சாவூர், தருமபுரி ஆகிய 2 இடங்களில் மட்டுமே பள்ளிகள் செயல்படுத்தப்படுகின்றன.தர்மபுரியில் தேர்வு எழுதிய 24 மாணவர்களில் இரண்டு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சாவூரில் 21 மாணவ - மாணவியர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஆனால் இந்த இரண்டு பள்ளிகளுமே கடந்த ஆண்டுகளில் 100 சதவீதம் வரை தேர்ச்சியை காட்டியவையாகும்.
இதற்கு மாணவர்களை மட்டுமே குறை சொல்லி சாதாரணமாக விட்டுவிட முடியாது. மாற்றுத் திறனாளி துறைதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இப்பள்ளியில் தேர்ச்சி வீதம் 2010-ல் 100 சதவீதமாகவும், 2011-ல் 90 சதவீதமாகவும், 2012ல் 80 சதவீதமாகவும், 2013ல் 100 சதவீதமாகவும் இருந்துள்ளது. இப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் (ஒரு வகுப்பிற்கு) 8 மாணவர்களுக்குத்தான் பயிற்சி அளிக்க முடியும். மாணவர்களின் எண்ணிக்கை கூடும் போது பயிற்சி கொடுப்பதிலும் குறைவு ஏற்படுகிறது. 173 பேருக்கு 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 13 பேர் மட்டுமே உள்ளனர். 10 ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது.சென்ற வருடம் வரை இப்பள்ளியில் வரலாறு, பொருளியல், புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் தமிழ் ஆகியவை பாடமாக இருந்தது. ஆனால், அப்பாடங்களை முழுமையாக எடுத்துவிட்டு தற்போது வணிகவியல், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், பொருளியல் மற்றும் தமிழ் பாடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படி பாடங்களை மாற்றிய நிர்வாகம் அப்பாடப்பிரிவுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை நியமிக்கவில்லை.
அதுபோல் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்க போதுமான பணியாளர்களும் இருக்க வேண்டும். அப்படி அனைத்து வசதிகளும் உரிய முறையில் செய்து கொடுக்கும் போதுதான் மாணவர்கள் மன அழுத்தமில்லாமல் முழு சுதந்திரமாக கல்வியை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறில்லாமல் 4 ஆயாக்கள் இருப்பதற்கு பதில் ஒரே ஒரு ஆயாவும், 2 சமையலருக்குப் பதில் ஒருவரும் மட்டுமே உள்ளனர். இரவு நேர காவலர், முக்கியமாக சுகாதாரப் பணியாளர் ஒருவரும் இல்லாதது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி பள்ளியில் 39 பணியிடங்களில் 19 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. 2 பள்ளிகளிலும் தகுதியான தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
தஞ்சையில் நிரந்தர தலைமை ஆசிரியர் இல்லாமல் 12 வருடங்களாக பொறுப்பு தலைமை ஆசிரியரே பணி செய்யும் அவலம் உள்ளது. தருமபுரி பள்ளியில் மேல்நிலைக் கல்வியை அறியாத பட்டதாரி ஆசிரியரே தலைமை ஆசிரியராக உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இந்த மோசமான தேர்ச்சி சதவீதத்திற்கு பிறகாவது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு பள்ளிகளிலுமே முன்பிருந்த பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர், பணியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பாடத்திற்கு பொருத்தமான ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பள்ளிகள் அனைத்தையும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்தக் குறைபாடுகளை எல்லாம் களைந்தால் முன்புபோல இப்பள்ளிகள் முழு த்தேர்ச்சி பெறுவது உறுதி.
- தஞ்சாவூர் வெ.கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment