Thursday 3 June 2021

 வாட்ஸ்அப் வதந்திகளை நம்பாதீர்கள் 

தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் 

உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் 


 

 தொண்டை வலியும் ,மருத்துவர்களை பார்க்க இயலாத நிலையும் :

                 நண்பர்களே ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு நாள் எனக்கு தொண்டை வலி ஏற்பட்டது. காய்ச்சல் கிடையாது. சளி  கிடையாது. தொண்டை வலிக்கிறது என்பதற்காக மருத்துவரை சந்திப்பதற்காக சென்றேன். மருத்துவரோ தொண்டை வலிக்கிறது என்றாலே சந்திக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள். பிறகு மொபைல் மூலம் பல முறை முயற்சி செய்து காரைக்குடியில் மருத்துவர் ஒருவரை சந்தித்தேன். அவர் தொண்டை வலிக்கு மாத்திரை கொடுத்து விட்டு என்னை கொரோனா  டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார். டெஸ்ட் எடுப்பதற்கு அப்போதைய நிலையில் தனியாரில் 3000 ரூபாய் ஆகும் என்று தெரிவித்தார்கள். அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று எண்ணினேன். 

 கொரோனா டெஸ்ட் எடுத்த வேதனையான அனுபவம் :

                        மே இரண்டாம் தேதி லாக் டவுன் அன்று கொரோனா டெஸ்ட் எடுப்பதற்காக சென்றேன். காரைக்குடியில் பெரியார் சிலை அருகே உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவ மனையில் 30க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தார்கள். பிறகு பழைய அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு செவிலியர் ராமலட்சுமி மூலமாக கொரோனா  பரிசோதனை எடுத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலையில் பாசிட்டிவாக இருந்தால் மொபைல் மூலம் தகவல் வரும் என்று தெரிவித்தார்கள்.  என்னுடன் 5 பேர் அங்கு டெஸ்ட் எடுத்துக் கொண்டனர். டெஸ்ட் எடுக்கும்போது சினாப்ஸிஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக வாயில் ஒரு டெஸ்ட் குச்சி வைத்து அழுத்தினார்கள் .மேலும் மூக்கிலும் ஒரு அழுத்து அழுத்தினார்கள் .சரியான வேதனை நண்பர்களே.

 கொரோனா ரிசல்ட் வருதற்குள் திக்,திக் நிமிடங்கள் :

           கொரோனா டெஸ்ட் எடுத்த   அன்று முழுவதும் ஒருவித அச்சத்துடனேயே இருந்தேன்.ஏனென்றால் பாசிட்டிவாக இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் அவர்களும் இந்த வேதனைகளை அனுபவிக்க வேண்டுமே என்று வருத்தமாக இருந்ததது.மறுநாள் காலையில் எனக்கு எந்தவிதமான தொலைபேசி தொடர்புமில்லை .எனது தொண்டை வலியும் சரியாகிவிட்டது. 

 கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த பிறகுதான் நல்ல தூக்கமே வந்தது :

                                 மீண்டும் அன்று இரவு எனக்கு வந்த எஸ்எம்எஸ் ஐ எடுத்து ஆன்லைன் வழியாக சென்று எனக்கு கொரோனா  நெகட்டிவ் என்பதற்கான சான்றிதழை எடுத்துக்கொண்டேன் .மீண்டும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையில் செவிலியர் ராமலட்சுமி அவர்களை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்.  

 கொரோனா பாசிட்டிவ் ஆன பெண்மணியின் நிலை : குழந்தைகளை பார்த்து கொள்வது யார் ?

                                அப்போது செவிலியர் ராமலட்சுமி அவர்கள் என்னிடம் ,  தம்பி எனக்கு 57 வயதாகிவிட்டது.கொரோனா  தடுப்பூசி எடுத்துக் கொண்டு விட்டேன். நீங்கள் டெஸ்ட் எடுத்தபோது உங்களுக்கு அடுத்ததாக நின்றிருந்த பெண்மணிக்கு கொரோனா  பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. அவர்களது கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளும் சிறு குழந்தைகள். அன்னார்  அவர்களை அமராவதிபுதூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். குழந்தைகளை  பார்த்துக் கொள்ள ஆளில்லை. எனக்குத் தெரிந்தவர் அவர். எனவே அந்த குழந்தைகளுக்கும் டெஸ்ட் எடுத்து விட்டு , நெகடிவ் ஆக இருந்தால் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும் . கொரோனா  பாசிட்டிவ் என்று தெரிந்ததும் அந்த அம்மணி மிகக் கடுமையாக அழுதார். குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கதறினார். 

 கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தூண்டிய நிகழ்வு :

என்னுடைய உறவினர் ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார்.அவரும் கொரோனா பாதித்து ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறார். எனவே நீங்கள் உடனடியாக சென்று , இன்றே நீங்களும் உங்களது மனைவியும் ஊசியை போட்டுக் கொள்ளுங்கள் என்று என்னிடம் தெரிவித்தார். காலை எட்டரை மணியளவில் தான் அவரிடம் பேசினேன். உடனடியாக முடிவெடுத்து காரைக்குடி புதிய  மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டு விட்டேன். 

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் கூட வரவில்லை :

                   ஊசி போட்ட பிறகு எனக்கு எந்தவிதமான காய்ச்சலோ அல்லது வேறு விதமான பாதிப்புகளும் எதுவுமே வரவில்லை. தற்போது  இரண்டாவது ஊசியும் போட்டுவிட்டேன். எந்தவிதமான பாதிப்பும் இல்லை. காய்ச்சல் கூட வரவில்லை. எனவே உங்களை காத்துக் கொள்வதற்கு  தடுப்பூசி ஒன்றுதான்  ஒரே வழி. நண்பர்களே அவசியம் தடுப்பு ஊசியை செலுத்தி உங்களது உடம்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்களது மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை செய்து கொள்ளுங்கள். தற்பொழுது ரஷ்ய ஊசியும் அடுத்த வாரம் முதல் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

 தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ளுங்கள் :

              எனவே ஏதாவது ஒரு ஊசியை அவசியம் எடுத்துக் கொண்டு உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். அரசு ஆரம்பத்தில் ஊசி செலுத்தி கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது வாட்ஸ்அப் வதந்திகளை நம்பி ஊசிகளை போடாமல் விட்டு விட்டேன் . பிறகு நாட்கள் செல்லச் செல்ல தான் உண்மை நிலைமை தெரிந்தது. தற்பொழுது ஊசி செலுத்தி கொண்டு உள்ளேன்.பெரும் முயற்சி எடுத்துத்தான் தற்போது ஊசி போட்டுக்கொண்டேன்.எனது மனைவியும் முதலில் தடுப்பூசி போடுவதற்கு சிறிது தயக்கம் காட்டினார்கள் .அவர்களையும் கொரோனா தடுப்பூசி போடச்சொல்லி நம்பிக்கை அளித்தேன். தற்போதைய தமிழக அரசு பல இடங்களில் முகாம்களை நடத்தி வருகிறது .எனவே முகாமில்  தொடர்புகொண்டு அவசியம் தடுப்பு ஊசிகளைப் போட்டு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

 நன்றிகள் பல :

               அரசு பொது  மருத்துவர் முத்துவடிவு  அவர்கள் ஜனவரி மாதமே   ஊசி போடுவது தொடர்பான நன்மைகளை தெரிவித்தார். எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார். தான் போட்டுகொண்டு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றார்.மீண்டும் பலமுறை பேசும் பேசும்பொழுதும் ஊசி போடுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அரசு  மருத்துவர் முத்து முடிவு அவர்களுக்கும், செவிலியர் ராமலட்சுமி அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகள் பல.

 அன்புடன் 

லெ . சொக்கலிங்கம்,

 காரைக்குடி.



 

 

 

 

No comments:

Post a Comment