Friday 26 June 2020

              ஆளுமைகளுடனான அனுபவங்கள்
திசைகள் குழுவின் தலைவர்  மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்


TNPAT-3 செட்டிநாட்டில்....

     திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டம் - 3வது நிகழ்வு தமிழரின் பண்பாட்டு அடையாளமான செட்டிநாட்டு பிரதேசமான, தேவகோட்டையில் 8-4-19 அன்று நடத்தப்பட்டது.
     300 ஏக்கர் நிலம், 15 இலட்சம் பணம் இருந்தால் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலாம் என்று ஜவஹர்லால் நேரு அறிவித்த அடுத்த நாளே 15 இலட்சம் பணத்துடன் நேருவுக்கு முன்னே நிற்கிறார் வள்ளல் அழகப்ப செட்டியார். இந்தியாவில் ஓர் தனிநபரின் முயற்சியால் மட்டுமே தொடங்கப்பட்ட ஒரே ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்னும் வரலாற்றுக்கு சொந்தமான காரைக்குடி CECRI என்னும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் சிறிய வரலாறு இது.
     கல்விக்காக அத்தனையும் கொடையாக வழங்கிய அழகப்ப வள்ளலின் பூமியில், அறந்தாங்கியில் 2005 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தொடங்கப்பட்ட திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, முதன் முறையாக தன் மாவட்டமான புதுக்கோட்டை தாண்டி, காலடி எடுத்து வைத்தது சாலப் பொருத்தமும் ஓர் வரலாற்று நிகழ்வுமாகும்.
    80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஒருங்கே பழமையின் அடையாளமாகவும் புதுமையின் பூமியாகவும் திகழ்கிறது. விழா அன்று நுழைவு வாயிலிலேயே தான் வெற்றி பெற்ற 50 சான்றிதழ்களை அடுக்கி வைத்து மாணவி பாரதி நம்மை கம்பீரமாக வரவேற்றாள். கருவிலிருந்தே வாங்கியிருப்பாள் போல. உள்ளே நுழைந்தால் அத்தனை பேரும் பாரதிகளாய். ஒவ்வொருவர் கைகளிலும் குறைந்தது 10 சான்றிதழ்கள். பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகத்தின் சாதனைக்கு சான்றாய்.
     திருக்குறளுக்கு, அபிராமி அந்தாதிக்கு நடனம் என்று ஆரம்பத்திலிருந்து ஆச்சர்யம் ஆரம்பமாகியது. 3 மணி நேரம் நடந்த நிகழ்வில் ஒரு மாணவன் கூட ஒரு நொடி கூட சோர்வடையவில்லை.
இன்னும் ஏதாவது செவிக்கும், சிந்தைக்கும் தீனி கிடைக்குமா என்று விழித்துக் கொண்டிருக்கிறான். குறிப்புகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறான். இறுதியில் அனைவரது பேச்சையும் உள்வாங்கி ஒவ்வொரு மாணவனும் பேசிய பேச்சும் தொடுத்த வினாக்களும் விழாவின் உச்சம். பிரமிப்பு. அந்த நிமிடம் கேட்டு, உள்வாங்கி, செரித்து, சிந்தை தொடுக்கப்பட்ட மாலையாய் அவர்கள் இறுதியில் சூட்டியது - பேசியது ஆசிரியர்களால் எந்தக் கல்லையும் கடவுளாக்க முடியும், அப்படியிருக்க கற்பூர மாணவர்களை கடவுளாக்க - சாதனையாளர்களாக்க முடியாதா என்ன? என்பதற்கான சமகால சரித்திர உதாரண நிகழ்வு.
    தலைமை ஆசிரியர் திரு .சொக்கலிங்கம் தலைமையிலான ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பு உணர்வை, ஆவணங்களிலிருந்து ஆரம்பித்து அத்தனையிலும் காணலாம் நாம். வெ.இறையன்பு, மயில்சாமி அண்ணாத்துரை, பல்கலைக்கழக வேந்தர்கள், நீதிபதிகள் அத்தனை பேரையும் அழைத்து வந்து விடுகிறார் ஐயா சொக்கலிங்கம். அவர்களை இரத்தமும் சதையுமாகப் பார்க்கும் தம் மாணவர்கள் அப்படி ஆகிவிட மாட்டார்களா என்ற பெருங் கனவுதான் அதற்கு காரணம். தான் மட்டுமல்ல, தன் சக ஆசிரியர்களையும், பணியாளர்களையும் கூட தன் வேகத்திற்கு அழைத்து ஓடுகிறார் திரு.சொக்கலிங்கம். 
     தமிழகத்தின் ஓர் முன்மாதிரி பள்ளியாகத் திகழும் இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் தமிழகப் பள்ளிகளாலும், ஆசிரியர்களாலும் பின்பற்றத் தக்கவை.
       தம் மாணவர்கள் அத்தனை பேரையும் அப்துல் கலாம்களாக ஆக்கி விடத் துடிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் கனவுதான் திசைகளின் இந்தத் தேசத்தின் கனவும்....

    கனவு மெய்ப்படும்..

நம்பிக்கையோடு👍
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,MBBS., DDVL.,
அரசு தோல் நோய் மருத்துவர்,
தலைவர் - திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்





                              திசைகள் குழுவின் தலைவர்  மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.



புதுகை வரலாறு நாளிதழ் மூலம் அறிமுகமான திசைகள் குழுவினர் :

                    திசைகள் குழுவின் தலைவர்  மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்களுடனான அறிமுகம் ஏற்பட்டது எப்படி?  திசைகள் குழுவின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்களை புதுகை  வரலாறு இணையத்தின் வழியாக அறிமுகமானேன். புதுகை  வரலாறு நாளிதழின் செய்தி ஆசிரியர் சிவ சக்திவேல் அவர்களின் மூலமாக அறந்தாங்கி திசைகள் குழுவின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் பல்வேறு தகவல்களை இணையம் வழியாக தொடர்பு படுத்தும் பொழுது திசைகள் குழுவின் இணையத்திலும் என்னை இணைத்தார்கள். அதுமுதல் அவர்களுடனான எனது தொடர்பு தொடர்ந்து நீண்டு கொண்டே வருகின்றது. 

தேடி வந்த திசைகள் விருது :


                திசைகள் குழுவின் சார்பாக எனக்கு சிறந்த ஆசிரியருக்கான சி.ஜெ . ஆர்.  மணி அவர்களின் பெயரிலான விருது வழங்குவதாக அறிவித்து இருந்தார்கள். அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அறந்தாங்கி வருமாறு அழைப்பு கொடுத்திருந்தார்கள்.  நானும் தயாராகி செல்வதற்காக இருந்த பொழுது ஒரு   நிகழ்வின் காரணமாக செல்ல இயலாமல் போனது. அதன் தொடர்ச்சியாக திசைகள் குழுவினர் எங்கள் பள்ளியை புத்தகம் வழங்கும் விழாவிற்கு தேர்ந்தெடுத்து புத்தகம் வழங்க  வரும்பொழுது திசைகள் நல்லாசிரியர் விருதையும் எங்கள் பள்ளியிலேயே எனக்கு வழங்குவதாக அறிவித்து இருந்தார்கள். அந்த நாளும் வந்தது. 

திசைகள் குழுவினர் பள்ளிக்கு வருகை தருதல் :

              திசைகள் குழுவினரும் 30க்கும் மேற்பட்ட நண்பர்கள் அறந்தாங்கியில் இருந்து எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களை வழங்கி எனக்கு விருதையும் வழங்கி சென்றார்கள்.திசைகள் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தை தாண்டி முதல்முறையாக  அடுத்த மாவட்டத்திற்கு வந்து புத்தகங்கள் வழங்குவதும்,  திசைகள் விருது வழங்குவதும்  தற்பொழுது தான் என்று பெருமையுடன் திசைகள்  தலைவர் தட்சணாமூர்த்தி அவர்கள் தெரிவித்திருந்தார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடலில் திசைகள் குழுவினரும்,எங்கள் பள்ளி மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

திசைகள் என்று பெயர் வைக்க காரணம் என்ன ? மாணவரின் கேள்வி :

              எங்கள் பள்ளி மாணவர்கள் பலரும் கேள்விகள் கேட்டபொழுதும் , மாணவர்களில் ஐயப்பன் என்கிற மாணவர் திசைகள் குழு தலைவர் அவர்களிடம் கேள்விகள் கேட்கும் பொழுது திசைகள் என்று பெயர் எப்படி வைத்தீர்கள்?  என்று கேட்டார். அதற்கு தலைவர் அவர்களும் தனது பால்ய கால நண்பன் மூலமாக அந்தப் பெயர் கொடுக்கப்பட்டது என்கிற விளக்கத்தை பொறுமையுடனும் அன்புடனும் தெரிவித்தா.ர் மாணவர்கள் தாங்கள் உள்வாங்கி கருத்துக்களை அனைவரும் முன்பாகவும் பேசும்பொழுது மொத்த குழுவும் ஆச்சரியத்தில் அசந்து எங்களை பார்த்தது. அதுதான் எங்கள் பள்ளியின் மிகப்பெரிய வெற்றி என்பது எங்களுக்கும் நன்றாக தெரிந்திருந்தது. குழுவினர் ஆச்சரியப்பட்டனர். மிகுந்த அளவில் பாராட்டு தெரிவித்தார்கள். அறந்தாங்கியிலிருந்து 30க்கும் மேற்பட்டோர் எங்கள் பள்ளியை தேடி வந்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. 

அரசு பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட திசைகள் குழு :


               திசைகள் குழுவானது  அறந்தாங்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களால் மக்களுக்கு,சமுதாயத்துக்கு நல்லது செய்ய உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .தொடர்ந்து பல ஆண்டுகளாக சமுதாயத்தில் நன்றாக செயல்பட கூடியவர் களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கௌரவிப்பதுடன் மாணவர்களுக்கு வேண்டிய பல்வேறு தகவல்களையும் கொண்டு போய் சேர்த்து மருத்துவ உதவிகளையும் செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. என்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக அறந்தாங்கி நான் சென்ற பொழுது நண்பர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு வரவேற்புக் கொடுத்து நல்ல முறையில் வாழ்த்து தெரிவித்தனர். மறக்க முடியாத நிகழ்வு.  அடுத்ததாக திசைகள் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு நடைபெற்ற பொழுது நானும் சென்றிருந்தேன். பல நபர்களை தேர்ந்தெடுத்து பல்வேறு முயற்சிகள் எடுத்து மாணவர்களை வரவழைத்து அவர்கள் முன்பாக இந்த செயல்பாட்டினை பாராட்டி விருது வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்தினார்கள். 

தலைமைக்கு சிறந்த உதாரணம் மருத்துவர் தட்சிணாமுர்த்தி :

                   தலைமை சரியாக இருந்தால்தான் அதன் அமைப்பு , செயல்படக்கூடிய அனைவரும் நல்ல முறையில் செயல்படுவார்கள் என்பதற்கு அறந்தாங்கி திசைகள் குழுவின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி மிகச்சிறந்த உதாரணம். அன்னார் அவர்கள் மேற்படிப்புக்காக அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்லும் பொழுது பிரிவு உபச்சார விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அங்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு சமுதாயத்தில் முக்கிய பதவியில் இருப்போர் வந்து வாழ்த்து தெரிவித்த பொழுது எனக்கு அந்த ஆளுமையின் உண்மையான உயரம் தெரிந்தது. என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.அரசு பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கபட்ட மாணவர்கள் மிக அருமையாக வளர்ந்து உள்ளார்கள் என்று எண்ணும் பொழுது எனக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. எப்படி சொல்வது என்று என்னால் இப்பொழுது தெரியவில்லை, ஆனால் அந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ந்து இருந்தேன். அப்பொழுதும், அன்னார்  அவர்களிடம் மறுநாள் பேசும்பொழுது நான் கூறியது என்னவெனில் , தாங்கள் சென்னை சென்றாலும்,  நல்ல தலைமை என்பது அடுத்த தலைமையை உருவாக்க கூடிய பண்பு இருப்பவர்தான் செயல்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தேன். அன்னார் அவர்களும், என்னுடைய குழுவினரில் உள்ள அனைவரும் தலைவர்கள்தான்,  அனைவரும் நல்ல முறையில் செயல்பட்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்று என்னிடம் தெரிவித்திருந்தார்.  அது உண்மை என்று நிரூபித்தும் காட்டிவீட்டார்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற திசைகள் விருது வழங்கும் விழாவில் நான் அதை நேரடியாக கண்டேன். மருத்துவ தட்சணாமூர்த்தி அவர்கள் சென்னையில் இருந்தாலும், அறந்தாங்கியில் வேண்டிய அனைத்து வேலைகளும், விருது வழங்கும் விழாவிற்கு குழுவாக இணைந்து மிகச் சிறப்பாக செயல்படுத்தி இருந்தார்கள். அந்த நிகழ்வை காணும்பொழுது என்னுள் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. 


சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் திசைகள் குழுவினர் :


              அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக இணைந்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்க முடியும் என்பதை நான் அங்கு கண்டேன். திசைகள் குழுவின் தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்களுடன்   பழகிய அனுபவம் எனக்கு மிகப்பெரிய மறக்க முடியாத அனுபவம் ஆகும். எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திசைகள் குழுவின் வருகை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். திசைகள்  குழு மென்மேலும் வளர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை அடைவதற்கு மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்கள் முழு முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்கள் குழுவினர்  மென்மேலும் வெற்றி பெறவும், அறந்தாங்கியிலிருந்து எங்கள் பள்ளியை தேர்ந்தெடுத்து எங்கள் பள்ளிக்கு வருகை தந்ததற்கு திசைகள் குழுவினருக்கு இந்த நேரத்தில் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். திசைகள் குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் எங்கள் பள்ளி பற்றி கூறிய கருத்துக்களையும், அவர்களுடனான பள்ளி பகிர்வுகளையும்  ஒவ்வொன்றாக வரும் தொடர்களில் நாம் நிச்சயமாக காண்போம். 

நன்றிகள் பல :


                இந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு வருகை தந்த திசைகள் குழுவின் தலைவர் தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.   8056240653 



திசைகள் குழுவின் தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2019/04/blog-post_10.html#more

https://kalviyeselvam.blogspot.com/2019/04/blog-post_14.html#more

 திசைகள் குழுவின் தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :



https://www.youtube.com/watch?v=n__OlG1FL78

No comments:

Post a Comment