Tuesday 16 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அவர்களுடனான  பள்ளி பகிர்வுகள்

          
               இன்று 1 / 11 / 2019 ம் தேதி சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் (மு.குமாரவேல்) ஆகிய நான் இந்த வருடத்தின் உடைய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாணவர்களிடையே லஞ்சம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றினேன்.  இப்பள்ளியின் சிறப்பு என்னவெனில் ஒரு விழாவினை முறையாக துவக்கி இறுதியில் மாணவர்கள் புரிந்து கொண்டுள்ள விஷயங்களை எந்த அளவிற்கு மாணவர்கள் தன்னுள் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதனை காணும் விதமாக இறுதியாக  ஃபீட்பேக் செஷன்  என்பதில் மாணவர்களை பேச  வைத்தபோது  அவர்கள் உள்வாங்கிய விவரங்களை வெளிப்படுத்திய விதங்களை பார்த்து வியந்துபோனேன். இந்த அளவிற்கு  மாணவர்களை தயார் படுத்தி வைத்துள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களின்  பணியானது உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கதாகும். இதுபோன்ற மாணவர்களின் செயல் திறனை  அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் உங்கள் அனைவருக்கும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

மு.குமாரவேல்,
 இன்ஸ்பெக்டர்,
 விஜிலன்ஸ்,
 சிவகங்கை.



             ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் மு.குமாரவேல் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

விழிப்புணர்வு ஏற்படுத்த அழைப்பை ஏற்று சிவகங்கையில் இருந்து வருகை புரிந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் :
                                 
                             ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு எங்கள் பள்ளிக்கு சிவகங்கையிலிருந்து விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் லஞ்சம் கொடுப்பதை தடுப்பது தொடர்பான மிக அருமையான விழிப்புணர்வை அளித்தார்கள். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்! என்பதை செயல்பாடாக இளம் வயதில் மாணவர்கள் மனதில் பதிய வைப்பதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  சிவகங்கை டிஎஸ்பி அவர்களுடைய எண் பெற்று தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னால் வர இயலாது, வேறு ஒரு முக்கியமான அலுவல் இருக்கிறது, எங்கள் ஆய்வாளர் வருவார் என்று கூறினார்கள். பிறகு அவர்கள் கொடுத்த ஒரு ஆய்வாளர் அவர்களது  எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். அவர்களும் நான் பிஸியாக இருப்பதால் மற்றொரு ஆய்வாளர் குமரவேல்  அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார். இரவு 8 மணி அளவில் குமாரவேல் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்பொழுது நாளை வாய்ப்பு இருந்தால்  நான் வருகை தருகின்றேன். முடிந்தால் வருகின்றேன் என்று தெரிவித்திருந்தார். ஏனெனில் சிவகங்கையிலிருந்து தேவகோட்டை கொஞ்சம் தூரம் அதிகம் தான், சூழ்நிலையை பொறுத்து என்னுடைய பணிகளைப் பொறுத்து வர முயற்சிக்கின்றேன் என்றும் தெரிவித்திருந்தார். 

சரியான நேரத்திற்கு வருகை தந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் :

                எங்களால்  நம்ப முடியாத ஒரு விஷயம் சரியாக பதினொரு மணிக்கு பள்ளிக்கு வருகை தந்தார்கள். அதுவும் சாதாரண ஒரு ஜீப்பில், போலீஸ் உடை இல்லாமல் மூன்று பேர் பள்ளிக்குள் வந்தவுடன், எங்களுடைய உடற்கல்வி ஆசிரியர் என்னிடம்  சார் யாரோ மூன்று பேர் வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள். சிறிது நேரம் கழித்துதான் யூகித்தேன் இது லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் அவர்களின் வருகை  என்று தெரிந்துகொண்டேன்.ஆய்வாளர் அவர்களும் உடன் வந்த காவல் துறை அலுவலர்களும் மிக இயல்பாக என்னிடம் பழகினார்கள். மாணவர்களிடமும் மிக இயல்பாக பழகினார்கள். லஞ்சம் கொடுப்பதை எவ்வாறெல்லாம் தடுக்கலாம்  என்கிற தகவலையும் மிகத் தெளிவாக விரிவாக விளக்கமாக விளக்கினார்கள். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில்கள் கொடுத்தார்கள். அதனை தாங்கள் இத்துடன் இணைத்துள்ள வீடியோக்களில் காணலாம். எளிமையாக, பொறுமையாக எங்களிடமும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும், மாணவர்களின் கேள்விக்கும் நல்ல முறையில் பதிலளித்தார்கள். 

தான் கூறிய கருத்துக்களை சரியாய் உள்வாங்கி பேசிய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த இன்ஸ்பெக்டர் :

                        நிறைவாக மாணவர்கள் உள்வாங்கி பேசிய விஷயங்களை பாராட்டினார்கள்.ஆய்வாளர்  அவர்கள் கூறிய கருத்துக்கள் எங்கே போய் மாணவர்கள் மனதில் சேர்ந்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் பேசியதாகவும், ஆனால் அனைத்து கருத்துக்களும் மாணவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது  என்றும், உள்வாங்கிய கருத்துக்களை கூறுவதன் மூலமாக தெரிந்துகொண்டேன் என்று கூறினார்கள். இப்பள்ளியில் ஒரு நிகழ்ச்சியை முறைப்படி, வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை, நன்றி உரை என வரிசைப்படுத்தி அனைத்தும் மிக அழகாக நிகழ்வு அமைந்திருந்தது என்றும் பாராட்டு தெரிவித்தார்கள். லஞ்சம் கொடுக்கிறார்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த லஞ்சம் பெறுபவர்களை  பிடித்துக் கொடுப்பது எப்படி, லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக் கொடுப்பது என்பது எப்படி என்பதை மிகத் தெளிவாக அதற்குரிய வழிமுறைகளுடன் விளக்கமாக கூறினார். நாங்களும் பல்வேறு தகவல்களை அதன் மூலமாக தெரிந்து கொண்டு அவர்களுடைய மொபைல் எண்ணையும் கொடுத்து எப்பொழுது கேட்டாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார்கள். 

புதிய பணி - மகிழ்வுடன் ஏற்று கொள்ளுதல் :
 
                      மதுரையில் இருந்து தான் வருவதாகவும், சில நாட்களே இந்தப் பிரிவிற்கு வந்து பணியை ஏற்றுக் கொண்டதாகவும், பிரிவு தொடர்பாக பல்வேறு தகவல்களை எங்களிடம் விளக்கினார்கள். இதில்  பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பன்னிரண்டரை மணி இருக்கும் நிகழ்வு முடிந்தவுடன் எங்கள் பள்ளிக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு உணவகத்திற்கு அழைத்து சென்று பாரம்பரிய முறைப்படி விருந்தோம்பல் செய்வோம். 

வீட்டிலிருந்தே டிபன் பாக்ஸில் உணவு கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் :

             ஆனால் ஆய்வாளர் அவர்களோ  டிபன் பாக்ஸில் சாதம் எடுத்துக் கொண்டு வந்து அதனை செல்லும் வழியில் நாங்கள் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுவோம். பள்ளியிலேயே நாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிடுகிறோம் என்று கூறினார். நானும் இல்லை நீங்கள் உணவகத்திற்கு  வரவேண்டும், சாப்பிட வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அதற்கு ஆய்வாளர் அவர்களோ , இல்லை, இல்லை எங்களுடைய பழக்கமே இதுதான். எங்கு எப்பொழுது சென்றாலும் டிபன் பாக்ஸில் உணவை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று விடுவோம். போற வழியில் கிடைக்கும் இடத்தில்  அமர்ந்து சாப்பிட்டுக் கொள்வோம்  என்று தெரிவித்தார். உடனடியாக எங்கள் பள்ளியில்  அவர்கள் மூவரையும் அவர்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட ஏற்பாடு செய்து கொடுத்தோம். மிக அருமையான வாய்ப்பு. மாணவர்கள் ,ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களில்  விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்  அவர்களும் ஒருவர்.

விரிவாக லஞ்ச ஒழிப்பு துறை தொடர்பாக விளக்கம் அளித்த இன்ஸ்பெக்டர் :
 
                எனக்கெல்லாம் பணிக்கு வந்த பிறகுதான் லஞ்ச ஒழிப்புத்துறை இருப்பது தெரியும்.அதுவும் அரசு அலுவகங்களுக்கு செல்லும்போது ,அலுவலகத்தின் முன்பாக ஒரு போர்டு எழுதி போட்டு இருப்பார்கள்.சில நேரங்கள் ,நாளிதழ்களில் இது தொடர்பான செய்தி பார்த்து,படித்துள்ளேன்.இளம் வயது பள்ளி மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மிக தெளிவாக லஞ்ச ஒழிப்பு துறை தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள செய்தார்கள் நமது ஆய்வாளர் குமரவேல் அவர்கள்.. அவர்களுடைய அன்பான பேச்சு, நல்ல உள்வாங்கும் திறன் ,அதை உடனடியாக வெளிப்படுத்தி பாராட்டும் திறன் அனைத்துமே பாராட்டுக்குரியது. அன்னாரது மொபைல் எண் : 9443073558.அன்னாருடன்  இன்றுவரை தொடர்பில் இருக்கின்றேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

நன்றிகள் பல :

           இந்த நிகழ்விற்கு சிவகங்கையில் இருந்து வருகை தந்த விஜிலென்ஸ்  இன்ஸ்பெக்டர் குமாரவேல் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.   8056240653 



ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :


 https://kalviyeselvam.blogspot.com/2019/11/blog-post_2.html#more

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து லஞ்ச ஒழிப்பு தொடர்பாக பேசிய வீடியோ காணலாம் :
 https://www.youtube.com/watch?v=kJqbVFdkKfo



No comments:

Post a Comment