Monday 1 June 2020

உலக செஸ் போட்டிகளில் பங்கேற்ற தமிழக பள்ளி மாணவர்கள் 

பைடி (FIDE) யின் இலவச செக்மேட் கொரோனா வைரஸ் ஆன்லைன் போட்டிகள் 






 

 தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்கள் உலக செஸ் மையம் நடத்தும் ஆன்லைன் சதுரங்க போட்டிகளில் பங்கேற்றனர்.

                   கடந்த  இரண்டு மாத காலமாக கொரோனா  நேரத்தில் பள்ளி மாணவர்கள் ஊரடங்களில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த நாள்களில் மாணவர்களின் ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் குவைத்தில் இருந்து  செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன்    குவைத் நேரப்படி காலை 4 மணிக்கு தயாராகி இந்திய நேரம் காலை 7 மணி முதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகின்றார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது.அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது.அந்த மாணவர்களை  கண்டுபிடித்து ,ஒருங்கிணைத்து,ரூக் பிரிவு,கிங் பிரிவு,குயின் பிரிவு  என குழுக்களாக மாணவர்களை பிரித்துக்கொண்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்து வருகின்றார் வள்ளியம்மை சரவணன். கடந்த மே மாதத்தில் 15-ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு உலக செஸ் மையம் (FIDE) செக்மேட்  கரோனா வைரஸ் என்கிற பெயரில் 24 மணி நேரமும் சதுரங்க போட்டிகளை நடத்தி வருகின்றது. இப்போட்டிகளில் ஒரு நாளில் நம்மால் முடிந்த அளவிற்கு எத்துணை மணி நேரம் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.பொதுவாக உலக அரங்கில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற பணம் கட்டி தான் நாம் பங்கேற்குமாறு சூழ்நிலையில் இருக்கும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் செஸ் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உலக செஸ் மையம் பைடி  இலவச ஆன்லைன் சதுரங்க போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த போட்டிகளில் சுமார்  50 நாடுகளில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக செஸ் மையம் இப்போட்டிகளில் பங்குபெறும் பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளையும் அறிவித்துள்ளது . இந்த நிகழ்வில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றார்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும்,  இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதாகவும் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார். இதன் மூலமாக இப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் நடைபெறும்  செஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பட  விளக்கம்:  உலக செஸ் மையத்தின் சார்பாக நடைபெறும் செக்மேட் கரோனா வைரஸ் போட்டிகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.







No comments:

Post a Comment