Friday 5 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

சுட்டி விகடன் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன்  அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

 பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான யுவராஜன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை நடிக்க வைத்த அனுபவத்தை தனது முகநூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார். 
 
 ஆஸ்கர் மழலைகள்!



வருடத்தின் 365 நாள்களும் தன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் பாடப் புத்தகத்துக்கு வெளியிலான அறிவைப் புகட்ட சுழன்றுக்கொண்டிருப்பவர், லெ.சொக்கலிங்கம். தேவக்கோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அந்தச் சிறிய நடுநிலைப் பள்ளிக்கு ஜெர்மனியில் இருந்தும் வி.ஐ.பி வந்ததுண்டு; ஜோலார்பேட்டையில் இருந்தும் வந்ததுண்டு. கலெக்டரும் வந்து கல்விக்கு வழி காட்டியதுண்டு; காகித மடிப்பாளரும் வந்து குதூகலப்படுத்தியது உண்டு. குழந்தைகள் ஒவ்வொருவரும் செம ஷார்ப். அழகாக கதைகள் சொல்கிறார்கள், மழலைக் குரலில் ஆங்கிலத்தை இனிதாக்குகிறார்கள். ஒரு கதையைச் சொல்லி, 'நான் சொல்லும்போதே நீங்க நடிச்சுக் காட்டணும்' என்றதும், அடுத்தடுத்த நொடிகளில் புரிந்து நடித்து ஆஸ்கர் பெறுகிறார்கள். சுட்டி விகடனுக்காக அங்கே எடுத்த போட்டோ காமிக்ஸ், இன்னும் சில தினங்களில்...


சத்துணவை சாப்பிட்டு பள்ளியை  பாராட்டிய வார இதழின் உதவி  பொறுப்பாசிரியர் யுவராஜன் அவர்கள் 


                               இன்று தங்கள் பள்ளியில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.அந்த சுவையில் மாணவர்கள் மீதான அன்பும் அக்கறையும் தெரிந்தது.வாழ்த்துகள்!

கே.யுவராஜன் ,
சுட்டி விகடன். 









போட்டோ காமிக்ஸ் மூலமாக அறிமுகம் :

                       நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக விகடன் போட்டோ காமிக்ஸ்  நிகழ்விற்காக எங்கள் பள்ளிக்கு விகடன் இதழின் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் அவர்கள் வருகை தந்தார்கள். காலையில் சுட்டி விகடன் மாணவர் போட்டித் தேர்வு நடத்தி விட்டு மதியம் எங்கள் பள்ளிக்கு வந்து போட்டோகிராபர் சாய் தர்மராஜ் அவர்களின்  உதவியுடன் பல்வேறு இடங்களில் மாணவர்களை நடிக்க வைத்து நாடகம் படமாக படங்கள் எடுக்கப்பட்டது.. 

கலைநயமிக்க வீட்டில் படப்பிடிப்பு :

             தேவகோட்டையில் உள்ள கலைநயமிக்க  ஒரு வீட்டின்  உள்ளேயும் சென்று படங்கள் எடுக்கப்பட்டு நாடகமாக படமாக்கப்பட்டது. மாணவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. செய்தியாளர்  யுவராஜன் அவர்கள் எங்களிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டார். மாணவர்களுக்கு புரியும் வகையில் படமாக்கும் வகையில் கதையை கூறி  படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்களை மாணவர்களும்,நாங்களும் பின்னர் விகடன் இதழில் பார்க்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளி மாணவர்களின் படங்கள் இளம் வயதில் நாளிதழ்களில் வெளிவரும்போது அவர்கள் பல வருடங்கள் கழித்து அதனை பார்க்கும்போது அளவில்லாத மகிழ்ச்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அந்த படங்கள் இன்றும் எங்களுக்கு நினைவு படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


பத்திரிகையாளர் மாணவர்களுடன் கலந்துரையாடல் :

                  மீண்டும் இரண்டு ஆண்டுகள் சென்ற பிறகு  விகடன் போட்டோ காமிக்ஸ் நாடகத்தை படமாக்க எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். இரண்டாவது முறை வரும்போது மாணவர்களிடம் கலந்துரையாடினார். சில கதைகளை சொல்லி மாணவர்களையே நடிக்க வைத்தார். மாணவர்களின் உள்வாங்கும் திறனை பார்த்து ஆச்சரியப்பட்டார். பாராட்டும் தெரிவித்தார். பின் முகநூலிலும் பள்ளி தொடர்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

 முகநூலில் வாழ்த்து தெரிவித்தல் :

          சமீபத்தில்கூட டிராக்டர் ஓட்டிய மாணவிகள் தொடர்பாக முகநூலில்  ஒரு அருமையான பதிவையும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவு :

அந்த நிமிடங்கள்...
அந்த நிமிடங்களில் அவளுக்கு ஆயிரம் சிறகுகள் பிறந்திருக்கும். விண்வெளி வீராங்கனையாக மாறியிருப்பாள். வான் நட்சத்திரங்களைச் சந்தித்திருப்பாள். அப்பா, அம்மா, உறவுகள், நட்புகளிடம் இன்று பேச ஆயிரம் சொற்கள் கிடைத்திருக்கும். நாளையும்... நரை கூடிய நாளிலும் பகிர சேமித்து வைத்திருப்பாள். நிஜமாகவே விண்வெளி வீராங்கனையாகவும் மாறலாம். நாம் கொடுக்க வேண்டியதெல்லாம் அந்த சில நிமிடங்களையே.
#தேவக்கோட்டை_சேர்மன்மாணிக்கவாசகம்_பள்ளியின்களப்பணி Chokka Lingam


 சத்துணவை சாப்பிட்டு விட்டு பள்ளியை  பாராட்டுதல்

                       அன்னார்  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தபோது மதிய உணவிற்காக வெளியில் ஹோட்டலுக்கு செல்லலாம் என்று  அழைத்திருந்தோம். வேண்டாம் நான் பள்ளியிலேயே சத்துணவை சாப்பிடுகிறேன் என்று மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சத்து உணவை சாப்பிட்டு மகிழ்ந்தார்.மதியம் சாப்பிடும் நேரம் வந்த உடன் மாணவர்களுடன் உட்கார்ந்து  ( மேஜையின் மீது அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதனை மறுத்து மாணவர்களுடன் உட்கார்ந்து ) தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் உள்ள உணவை சாப்பிட்டு அதனை பள்ளி சத்துணவு பதிவேட்டில் எழுதி பாராட்டவும் செய்தார் .

 மாணவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் :

           அவரது வருகை மாணவர்களின் மனதில் மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து கொண்டது . மறக்க முடியாத அனுபவம். மாணவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவம். அன்னார் அவர்கள் மிகவும் நேர்மறை சிந்தனையாளராக இருந்தவர். அவருடைய வரவு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்திருந்தது. பத்திரிக்கையாளர் என்பவர் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களது பல்வேறு பணிகளுக்கிடையில் பள்ளிக்கு வருகை தந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது . 

நன்றிகள் பல 
சென்னையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து தேவகோட்டை வந்து மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி ,மாணவர்களை கொண்டு நாடகமும் எடுத்து சென்ற யுவராஜன் அவர்களுக்கும்,ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 

  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.  
8056240653 


  பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான யுவராஜன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை நடிக்க வைத்த நிகழ்வை வலைத்தளத்தில் காணலாம் :

 
 https://kalviyeselvam.blogspot.com/2018/03/blog-post_68.html#more


 https://kalviyeselvam.blogspot.com/2018/03/blog-post_40.html#more


No comments:

Post a Comment