Tuesday, 24 July 2018

 பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம்  வளர்க்கும் மாணவர்கள்

உயர்ந்து வளரும் மரங்கள்

வீடுகளில் மரம் வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுதல் விழா 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வீடுகளில் மரம் வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                                      இந்த நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி மாணவர் சபரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கடந்த ஆண்டு புவி தினத்தினை முன்னிட்டு ஜூலை மாதம் 22ம் தேதி மா 3 என்ற அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு  வீடுகளில் மரம் வளர்ப்பினை ஊக்குவிக்கும்   வண்ணம் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து வளர்த்து மரமாக வளர்த்துள்ள   25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.ஆசிரயர்களால் மாணவர்களின் வீடுகளில் சென்று அவற்றை பாதுகாப்பாக வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.கன்றுகள் வளர்ப்பதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு ,நன்றாக மரம் வளர்க்கும் மாணவர்கள் அனைவரு க்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் நன்றாக மரம் வளர்த்த மாணவர்கள் மகாலிங்கம்,அனுசுயா,காயத்ரி,ஓவியா,கிஷோர்குமார் உட்பட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசுகளை பெற்றனர்.நிறைவாக மாணவர் கோட்டையன் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம் வளர்த்து வருவதை காணலாம்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு செடிகளை வழங்கினார்.


மேலும் விரிவாக ;

வீடுகளில் செடிகள் வளர்த்து பரிசுகள் பெற்ற மாணவர்கள் :

                                    மாணவர்களின் வீடுகளில் செடிகள் வளர்க்க அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கடந்த ஒரு ஆண்டு கடந்த நிலையில் ,தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று செடிகள் வளர்வதை பார்த்து,மாணவர்கள் செடிகள் வளர்ப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.இதனில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரக்கன்றுகளை நல்ல முறையில் பாதுகாப்பாக வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளியிலும் தங்கள் பெயர் வைத்து செடிகளை மரங்களாக வளர்த்த மாணவர்கள் : 

                         பள்ளியிலும் மாணவர்கள் அவர்கள் பெயரை மரக்கன்றுகளுக்கு வைத்து தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார்கள்.அவை நன்றாக வளர்ந்து நிற்கின்றன.உயர்ந்து வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் மரக்கன்றுகளை உயரமாக வளர்த்தது எப்படி என மாணவர்கள் சொல்வதை கேட்கலாம் :
  
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்ரி : நான் முதலில் எங்கள் வீட்டில் பள்ளியில் கொடுத்த செடியை கொண்டு போய் நட்டு வளர்த்தேன்.சில மாதங்கள் கழித்து அந்த செடிகள் மாடுகளால் கடிக்கப்பட்டது.அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது.எங்கள் வீட்டிலும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.ஆனால் எனது அப்பா எனக்கு தொடர்ந்து ஆர்வப்படுத்தி அவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி இப்போது செடிகள் நன்றாக வளர்ந்து உள்ளன.எங்கள் பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து மாதத்தில் இரண்டு முறை வீட்டுக்கு வந்து பார்த்து செடிகளை வளர்க்க ஊக்கப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரும் தினசரி காலை வழிபாட்டு கூட்டத்தில் செடி வளர்ப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கி சொல்லுவார்.இப்போது செடி என்னை விட உயரமாக வளர்ந்து உள்ளது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் வெங்கட்ராமன் : பள்ளியில் கொடுத்த செடி மிகவும் சிறியதாக இருக்கும்போது வாங்கி சென்றது.எனது வீட்டில் வைத்து தொடர்ந்து வளர்த்து வருகின்றேன்.இப்போது நான் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் மரமாகி வளர்ந்து நிற்கிறது.எனது வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அனுசுயா : எனது வீட்டில் நான் வாங்கி கொண்டு போய் வைத்த அகத்தி கீரை செடி மிகப்பெரிய அளவில் என்னை விட மிக உயரத்தில் வளர்ந்து நிற்கிறது.எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.ஆடுகள்,மாடுகள் வசம் இருந்து எனது அக்கா,எனது அம்மா உதவியுடன் மிகுந்த சிரமத்துக்கு இடையில் இந்த செடிகளை பாதுகாப்பாக வளர்த்து உள்ளேன்.இது என்ன மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்தார்.

ஆறாம் வகுப்பு மகாலிங்கம் : எனது வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் மூலம் வழங்கிய மாதுளை செடி வளர்த்து வருகிறேன்.நன்றாக வளர்ந்து காய் உண்டாகி  உள்ளது.எனது குடும்பத்தினர்,சுற்றி உள்ள அனைவரும் என்னை பாராட்டி உள்ளனர் .எனக்கும் செடி வளர்த்து சுற்று சூழலை பாதுகாக்க ஆவண செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி.

மாணவர்களே வீடுகளில் உயரமாக செடி வளர்க்க ஊக்குவித்து வெற்றி பெற்றது எப்படி என பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் சொல்வதை காணலாம் :

              ம-3 அமைப்பின் மூலம் அரசு தோட்டகலை பண்ணையில் இருந்து பூவரசு ,புங்கன்,கொன்றை மரக்கன்றுகளை வாங்கி பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்து விட்டு வளர்ப்பது என முடிவுசெய்தோம். ஆனால், மாணவர்கள் வீடுகளில் எவ்வாறு செடிகளை கொண்டு சென்று வளர்ப்பார்கள் என்று ஒரு சந்தேகம் வந்தது. அதனால பள்ளி ஆசிரியர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தோம்.
எங்க பள்ளியில படிக்குற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு ஆளுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து, வீட்டுல வச்சு முறையாத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கணும். மரக்கன்றுகள் வளர்க்குற பொறுப்பை எடுத்திருக்குற மாணவர்களின் வகுப்பாசிரியர், மூன்று நாளுக்கு ஒரு முறை மாணவரோட பெற்றோரின் போன் நம்பருக்கு போன் செய்து பெற்றோரிடம் பேசி, ’’தண்ணீர் ஊத்தினார்களா , கன்று எப்படி வளர்ந்துருக்குன்னு’’ கேட்பார்கள்.மேலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று செடி வளர்ப்பதை ஆசிரியர்கள் பார்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.நன்றாக வளர்க்கும் மாணவர்ளுக்கு
பரிசுன்னு சொல்லியிருக்கோம். ஒரு மரக்கன்றை கொடுத்து முறையா தண்ணீர் ஊற்றி வளர்த்துடணும்னு சொல்லுறதுனால மாணவருக்கு ஒரு பொறுப்பு வந்துடும்.செடிகள் கொடுக்கும் இரண்டு மாதம் முன்பாகவே இருந்து மாணவர்களுக்கு செடி வளர்ப்பதன் பயன்கள்,அதனை பாதுகாப்பாக வளர்ப்பதால் எவ்வாறெல்லாம் நாட்டுக்கும்,வீட்டுக்கும் பயன் என்றெல்லாம் விரிவாக வகுப்பில் ஆசிரியர்களாலும்,காலை வழிபாட்டு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியராலும் தினம்தோறும் விரிவாக விளக்கப்பட்டது.இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே செடி நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு மாணவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. அந்தந்த மரக்கன்றுகளை அந்தந்த மாணவர் கையாலயே குழி எடுத்து, நட்டு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் ஊத்தி வளர்க்க சொல்லப்போறோம். அந்தந்த மரக்கன்றுக்கு அந்தந்த மாணவர் பெயரையே வைத்தோம் ’.
இந்த ம -3 அமைப்பு மூலம் மரம்வளர்ப்பு திட்டத்தை மாவட்டத்துல முதல்ல எங்க பள்ளியில துவங்குறதுக்கு பள்ளியிலேயே 15க்கும் மேற்பட்ட மரங்களை பள்ளியின் வெளியிலும்,உள்ளேயும் மிக சிறப்பாக மாணவர்கள் ஏற்படுத்தி உள்ள பசுமை படை அமைப்பின் வழியாக சிறப்பாக வளர்த்து மரங்களை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பள்ளியின் வெளியில் திறந்த வெளியில் உள்ள பகுதியில் முறையாக செடிகளை நட்டு பராமரித்து பெரிய மரங்களாக உருவாக்க மாணவர்களே முயற்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                       ஆசிரியர்கள்,பெற்றோர்களின் ஒத்துழைப்போடு 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் செடிகளை பாதுகாப்பாக வளர்த்து வ்ருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது .

No comments:

Post a Comment