Thursday, 26 July 2018

 மதுவுக்கு அடிமையான ஆண்களால் பாதிக்கப்படும் கல்வி
அரசு பள்ளி மாணவர்களின் நிலைமை என்ன ? பகுதி 2


பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்கள் ,வீட்டுக்கு சென்றால் படித்து வர மாட்டேன் என்கிறார்கள் .இதுதான் அரசு பள்ளியில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்களின் கேள்வி ?

ஆசிரியர்களின் ஆர்வம்

                              இதே கேள்விதான் எங்கள் பள்ளி ஆசிரியைக்கும் வந்தது.என்னிடம் மாணவர்களை அழைத்து வந்து ,சார் இவர்கள் எல்லோரும் பள்ளியில் சிறு,சிறு தேர்வு வைத்தால் நன்றாக படித்து தப்பு இல்லாமல் எழுதி காண்பிக்கிறார்கள். ஆனால்  வீட்டில் படிக்க சொல்லி வீட்டு பாடம் கொடுத்து விட்டாலோ,தேர்வுக்கு படிக்க சொன்னாலோ சரியாக  படிக்காமல் வருகிறார்கள் என்று சொன்னார்.பல முறை பெற்றோர்களை பள்ளிக்கு வர சொல்லியும் யாரும் வரவில்லை.வீட்டில் நோட்டில் கையெழுத்து வாங்கி வர சொன்னாலும் வாங்கி வருவதில்லை.எப்படி சார் இவர்களை நன்றாக படிக்க வைப்பது ? .பெற்றோருடைய ஒத்துழைப்பும் மிக குறைவு.மாணவர்களின் ஒத்துழைப்பு பள்ளியில் இருக்கும் அளவில் வீட்டுக்கு சென்ற உடன் இல்லை என்று ஆதங்கப்பட்டார்.ஆசிரியருக்கோ நாம் சொல்லி கொடுப்பதை மாணவர்கள் நன்றாக செய்ய வேண்டும் என்று ஆர்வம்.

கடிந்து கொள்ள இயலாத நிலை
                                        நான் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ,பின்பு மாணவர்களை பார்த்தேன்,சில மாணவிகளின் கண்ணில் கண்ணீர் வெளியே வருவோமா ? வேண்டாமா ? என்று தயார் நிலையில் இருந்தது. நான் மாணவர்களிடம் பொதுவாக சில அறிவுரைகளை சொல்லி விட்டு ,பின்பு மாணவர்களை வகுப்பறைக்கு போக சொன்னேன்.மாணவர்கள் மனதில் ஓரளவு நிம்மதி.நான் யாரையும் அதிகம் ஒன்றும் கடிந்து கொள்ளவில்லை.

நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளின் நிலை

                                                 பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வகுப்பின் ஆசிரியரை அழைத்து,நிதானமாக பேச ஆரம்பித்தேன்.டீச்சர் ,நம்மிடம் படிக்க வரும் மாணவர்கள் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் குழந்தைகளாக இருந்தால்,பள்ளி நேரத்திற்கு பின்பு ,மாலை நேரங்களில் பெற்றோர்களின் கவனிப்பின் கீழ் வருவார்கள்.பெற்றோர்களும் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் வந்து எப்படி படிக்கீறார்கள் என்று கேட்பார்கள்.

மதுவுக்கு அடிமையான ஆண்களால் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்கள்
                                                          ஆனால் ,நமது பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வறுமை கோட்டின் கீழ் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள்,பெற்றோர்கள் காலை 6 மணிக்கு கிளம்பி கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்கு வருகிறார்கள்.மதுவுக்கு அடிமையான ஆண்களால் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்கள் அதிகம் உள்ளது.நமது மாணவர்கள் பள்ளி முடிவடைந்த பின் வீட்டுக்கு செல்லும்   நிலையில் இவர்களை கவனிக்க ஆள் இல்லை.சில அப்பாக்கள் குடித்து விட்டு அம்மாக்களுடன் சண்டை போடுகிறார்கள்.அம்மாக்களும் வேலைக்கு போய் விட்டு வந்து அசந்து விடுகிறார்கள்.குடிகார அப்பாக்கள் ,அம்மாக்களுடன் சண்டையிடும்போது அவர்களின் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

மாணவர்களின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும்


                         சில நேரங்களில் அப்பா,அம்மா சண்டையில் உள்ளே புகும் குழந்தையின் மீதும் அடி விழுகிறது.அந்த குழந்தை அத்துடன் மனம் வெறுத்து விடுகிறது.இதனால் ஆண் குழந்தைகள் தவறான பழக்கத்திற்கும்,பெண் குழந்தைகள் சில நேரங்களில் தவறாக நடப்பதற்கும் ஏதுவாகிறது.எனவே பள்ளி நேரத்தில் அவர்கள் படிப்பதற்கு நாம் சந்தோசபட வேண்டும்.தொடர்ந்து நல்ல புத்தி மதிகளை சொல்லி வீட்டிலும் எந்த பிரச்னை வந்தாலும் கல்வி ஒன்று தான் சொத்து என்று சொல்லி அவர்களை ஊக்குவித்து படிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.அவர்கள் படிக்காமல் வருகிறார்கள் என்று அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம்  என்று ஆலோசனை சொல்லி அனுப்பினேன்.அந்த ஆசிரியை ஓரளவு புரிந்து கொண்டு தலையாட்டி சரி சார் என்று சொல்லி சென்றார்கள்.

குடியினால் மாணவிக்கும் விழுந்த திட்டு 

மாணவரின் அம்மா நேரடி விளக்கம்

ஓடி ஒளிந்த பிள்ளைகள்
                                   ஆசிரியை சென்ற சில நிமிடங்களில் கடந்த சில நாட்காளாக மாணவர் சுமாராக படிக்கிறார் என்று பலமுறை அழைப்பு விடுத்து வராமல் இருந்த மாணவரின் அம்மா அப்போதுதான் வந்தார்.மாணவரின் தாயாரை எனது முன் உள்ள இருக்கையில் அமர செய்து விட்டு,மாணவரையும் ,ஆசிரியையும் வர சொன்னேன்.மாணவரின் சகோதரியும் அதே வகுப்பில் படிப்பவர்.அவரும் உடன் வந்தார்.மாணவரின் தாயாரிடம் ,மாணவர் வாங்கிய மதிப்பெண்களை கட்டினோம்.அதற்கு அவரோ, சார் நான் படிக்கவில்லை.எனது குழந்தைகளுக்கு உணவு வழங்க கூட போதிய அளவு எனக்கு வசதி இல்லை.எனது வீட்டுக்காரர் ,தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடித்து சண்டைக்கு வருகிறார்.எனது மகள் (அருகில் நிற்கும் மாணவியை கையை காண்பித்து ) நேற்று சண்டை நடக்கும்போது ,எனது வீட்டுக்காரரை ஏதோ சொல்ல அவளுக்கும் அடி விழுந்தது.எனது இரண்டு மகன்களும் பேசாமல் பயந்து கொண்டே ஓடி ஒளிந்து கொண்டனர்.இந்த புள்ள நல்ல படிக்குது சார்.இவன்தான் படிக்க மாட்டேன் என்கிறான்.இவனை இதோடு படிக்காமல் வீட்டில் இருந்து சம்பாரித்து கொண்டு வந்து கொடுக்கிறேன் என்கிறான் .அதுதான் சார் நல்லது.இங்கு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு சேர்க்க வருட பீஸ் கட்ட வேண்டுமாம்.என்னால் பணம் கட்டி படிக்க வைக்க முடியாது சார்.(அந்த அம்மாவின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது ) அவர்களால் தொடர்ந்து பேச முடியவில்லை.பிறகு தண்ணீர் கொடுத்து குடிக்க செய்தோம்.தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே அந்த பெண்மணி கம்மிய குரலுடன் என்னிடம் , எப்படியாவது இவர்களை படிக்க வைத்துவிடவேண்டும் என்றுதான் நானும் பெரும்பாடுபடுகிறேன் சார்.இது இவனுக்கு புரியமாட்டேங்குது சார்.என் வீட்டுக்காரர் சரியாக படிக்காமல் போனதால்தான் நாங்கள் இந்த நிலையில் உள்ளோம் சார்.நானும் படிக்கவில்லை சார் .அதனால்தான் எனது வீட்டுக்காரர் அடித்தாலும் ,பரவாயில்லை நீங்களாவது படித்து கொள்ளுங்கள் என்று இவர்களிடம் தினசரி அடித்து கொள்கிறேன் சார் என்று கம்மிய குரலுடன் சொன்னார்.

குழந்தைகளை நாங்கள் படிக்க வைக்கிறோம் -
                                               பிறகு ,அந்த பெண்மணியிடம் நான் பேசும்போது ,அம்மா நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்.உங்கள் பையனை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கவையுங்கள் .ஒன்பதாம் வகுப்புக்கு படிக்க பணம் நாங்கள் தருகிறோம் என்று தைரியம் சொன்னதுடன் ,அந்த மாணவனிடமும் அன்புடன் அக்காவிடம் கேட்டு படிக்க சொல்லி சொன்னேன்.அந்த அம்மா ,எனது நம்பிக்கை தரும் பேச்சை கேட்டு,சரி சார்,எப்படியாவது எனது மகனையும் படிக்க வைத்து விடுகிறேன் சார் என்று நம்பிக்கையுடன் சொன்னார்கள் . அவருக்கு தொடர்ந்து நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்லி,மதிய சத்துணவையும் சாப்பிட சொல்லி அனுப்பினேன்.

ஆசிரியைக்கு ஆச்சரியம்

                                இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ஆசிரியைக்கு ஆச்சிரியம் மற்றும் அனுதாபம்.காலையில் தான் நான்.அந்த ஆசிரியையிடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும்,குடியால் அவர்கள் எப்படியெல்லாம் வீடுகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சொன்னேன்.அதனை சில மணி நேரங்களில் மாணவரின் தாயார் உறுதிபடுத்தி சென்றதை பார்த்து அசந்து போய் நின்றார்.அவருக்கும் தற்போது பல்வேறு விஷயங்கள் புரிந்து இருந்தது.மாணவரின் நிலை,அவர்களது குடும்ப நிலை என அனைத்துமே புரிந்து இனி வரும்காலங்களில் அவரது செயல்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.அவரிடமும் அதே நம்பிக்கை வந்திருந்தது அவரது நம்பிக்கையான பேச்சில் தெரிந்தது.

அரசு பள்ளி மாணவர்கள் தினசரி பள்ளிக்கு வருவதே பெரிய விஷயம்
                                  பொதுவாக சில ஆசிரியர்கள் , சார் என்ன சொன்னாலும் வீட்டில் படித்தும்,எழுதியும் வரமாட்டேங்கிறான் என்று பலரை என்னிடம் கொண்டு வந்து நிறுத்துவார்கள்.அப்போதெல்லாம் ,நான் சொல்வேன்,டீச்சர் மாணவரை நமக்கு உள்ள 9 மணி முதல் 4 மணிக்குள் படிக்க வைத்தால் போதும்.அந்த நேரத்தை சரியாக சொல்லி கொடுத்தால் மிக சிறப்பு என்று சொல்வேன்.ஏனென்றால் ,இந்த மாணவர்களின் நிலைமை வீடுகளில் மிகவும் மோசம்.இவர்கள் தினசரி பள்ளிக்கு வந்தாலே மிக பெரிய விஷயம் என்று சொல்வேன்.அது உண்மைதான் . 

வெறுப்பில் சிரித்த பெண்மணி
                                இன்று வந்த பெண்மணியும் பலமுறை பள்ளிக்கு வரும்போது ,அவரது குழந்தைகள் பள்ளிக்கு தாமதமாக வரும்போது உடன் வந்து விளக்கம் சொல்லி மாணவர்களை உள்ளே விட்டு செல்வார் .அப்போதெல்லாம் சிரித்து கொள்வார் .நான் சில நேரங்களில் எண்ணியது உண்டு? என்ன இவர் இதற்கெல்லம் சிரித்து கொள்கிறாரே என்று எண்ணியது உண்டு.ஆனால் அன்று தனது குடும்ப நிலையையும்,அவரது கணவரின் குடியையும் அவர் எண்ணி,எண்ணி அழும்போதுதான் அவரின் சிரிப்பு வெறுத்துப்போன இதயத்தில் இருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டேன்.இது மிகவும் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
                                  அரசு பள்ளி மாணவர்களின் நிலைமையை இன்னும் விரிவாக பகுதி 3யில் காண்போம்.இதுபோன்று நிலையில்தான் பெரும்பாலான மாணவர்கள் உள்ளனர்.அவர்களை சொல்லி குற்றம் இல்லை.அவர்களின் சமுதாய சூழ்நிலை அப்படி உள்ளது.அதனில் மாற்றம் கொண்டு வரவே நாங்கள் நல்ல முயற்சி எடுத்து வருகிறோம்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவங்கை மாவட்டம்


No comments:

Post a Comment