Sunday, 22 July 2018

 மாணவரின் கையில் புண்.வீட்டில் சரியாக கவனிக்கவில்லை.பள்ளியில் என்ன செய்தார்கள் ?

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன ? பகுதி -1 





                                              அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் சமுதாயத்தின் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர் என்பது உண்மை.எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் பாலாஜி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற மாணவருக்கு சில நாட்களுக்கு முன்பு கையில் ஏதோ புறப்பாடு போன்று புண் கிளம்பி அது சலம் வைத்து இருந்தது.நாங்களும் அவர்களது பெற்றோருக்கு பலமுறை சொல்லி அனுப்பினோம்.அவர்களது வீட்டுக்கு போன் கிடையாது.எங்கள் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் போன் கிடையாது.அப்புறம் எப்படி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றால் அவர்களது வீடுகளின் அருகில் பயிலும் மாணவர்களிடம் சொல்லி அனுப்பி தகவல்களை பரிமாறி கொள்கிறோம்.இது பெரும் சவாலான பணி என்பது குறிப்பிடத்தக்கது.
                               மாணவர் பாலாஜி  விஷயத்துக்கு வருவோம்.நாங்களும் பலமுறை சொல்லி பார்த்தோம்.ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.கடந்த வாரத்தில் பள்ளிக்கு வந்த மாணவர் சலம் வைத்த நிலையில் மிகவும் வலியில் அழவே ,உடன் ஆசிரியர்களின் உதவியுடன் அவர்களது பெற்றோர் வாராத சூழ்நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சலத்தை எடுத்து மருந்து கொடுத்து பள்ளிக்கு அழைத்து வந்தோம்.கையில் பெரிய கட்டு போடப்பட்டது.பிறகு ஆசிரியைகளின் உதவியுடன் அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் சொல்லிய தகவல்களை சொல்லி மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.மருத்துவமனையில் வாங்க இயலாத சில மருந்துகளை வெளியில் மருந்து கடைகளில் வாங்கி நாங்களே கொடுத்து ,மதிய சத்துணவை வழங்கி அனுப்பி வைத்தோம்.

                                         அரசு  மருத்துவமனையில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவி மிகவும் பாராட்டுக்குரியது.மாணவரின் கையில் இருந்து சலம் எடுத்தபோது வலியால் மிகவும் துடித்து விட்டார்.மருத்துவரோ பெற்றோர்  ஏன் இவ்வளவு நாளாக இதனை சரியாக பார்க்கவில்லை என்று எங்களிடம் கடிந்து கொண்டார்.பிறகு அவரிடம் சமாளித்து நிலைமையை எடுத்து சொன்ன பிறகு,நாளை கண்டிப்பாக பெற்றோரை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் ,செவிலியர்களும் எங்கள் பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்வதால் மருத்துவமனையில் மாணவருக்கு நல்ல உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
                                       மாணவரின் தாயாரிடம் ,பல முறை உங்களிடம் சொல்லி அனுப்பியும் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.அப்போது அவர் என்னிடம் ,சார் எனது கணவர் சில நாட்களுக்கு முன்பு தீடிரென இறந்து விட்டார். எனக்கு எந்த வேலையும் இல்லை.இரண்டு குழந்தைகளையும் (மற்றொரு குழந்தை மிக சிறிய வயது உடையது ) வைத்து கொண்டு மிகுந்த சிரமப்படுகிறேன்.தற்போது எனது அண்ணன் வீட்டில் இருக்கின்றேன்.எனது உறவினர்கள் எனது மகனுக்கு ,சலம் பழுத்த பிறகு மந்திரித்து அதனை குத்தி விடலாம் என்று சொன்னார்கள்.எனக்கு மருத்துவமனை வரை செல்ல யாரது உதவியும் இல்லை.என் கையில் பணமும் இல்லை.எனது திருமணம் காதல் திருமணம்.எனது வீட்டுக்காரர் சித்தாள் வேலை பார்ப்பவர்.நானும் சித்தாள் வேலைதான் பார்ப்பேன்.எனது நேரம் எனது கணவர் தீடீரென இறந்து விட்டார்.எனது வீட்டிலும் என்னை முன்பு சேர்க்க வில்லை.இப்போது கணவர் இறந்த நிலையில் என்னை சேர்த்து கொண்டு உள்ளனர்.மிகுந்த சிரமத்தில் உள்ளேன் என்றார்.பிறகு அவருக்கு தைரியம் சொல்லி,அடுத்த நாள் ஆசிரியரின் உதவியுடன் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இப்போது மாணவருக்கு புண் சரியாகி விட்டது.
                            இதுதான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலைமை.பொருளாதார வசதியும் இல்லை.குடும்ப சூழ்நிலையும் மிக சுமாராக உள்ளது.மாணவர்கள் வீட்டுக்கு சென்றதும் படித்தாயா ? இல்லையா என்று கேட்க கூட ஆட்கள் யாரும் இல்லை என்பது தான் உண்மை.இது போன்று உள்ள மாணவர்களை படிக்கவும் வைத்து,பல்வேறு திறன்களை வளர்த்து அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டுவதே கல்வியாகும்.பகுதி 2யில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை இன்னும் எப்படியெல்லாம் உள்ளது என்பதை இன்னும் விரிவாக காண்போம்.இது போன்று பல்வேறு மாணவர்களின் தேவைகளை மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியரும்,ஆசிரியர்களும் அரசு பள்ளியில் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment