Saturday, 21 April 2018


 குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது?

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 


விவசாயத்தை அதிகமாக செய்வோம் - மாணவர்கள் உறுதி 

விண்பதியம்,மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது?
மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு எவ்வாறு செய்வது?
கவாத்து  எவ்வாறு செய்வது?
மாணவர்களுக்கு  நேரடி செயல் விளக்கம்

தேவகோட்டை – தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் அழைத்து செல்லப்பட்டு ஒட்டு கட்டுதல்,பதியம் போடுதல்,கவாத்து செய்தல்,ஹை பிரிட் செய்தல் எவ்வாறு என்பவை தொடர்பாக விளக்கப்பட்டது.
                மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப் பயணம் சென்றனர். மாணவர்களை அரசு தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் தர்மர் வரவேற்றார்.மாணவர்களுக்கு முதலில் மல்லிகை,கத்தரி,மாமரம்,புளியமரம்,முந்திரி,பூவரசு,கொய்யா,அரளி போன்ற செடிகளை பற்றி  விரிவாக எடுத்து கூறினார்.
          குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல்,மென்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து செய்தல் எப்படி என்பதை நேரடியாக விளக்கினர்.மாணவர்களும் இதனை அங்கு நேரடியாக செய்து பழகினர் .குழித்தட்டு நாற்றங்கால் வழியாக விதைத்த விதைகளை பள்ளியில் சென்று வளர்க்குமாறு மாணவர்களிடம் கொடுத்து அனுப்பினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் மாதுளை செடி வழங்கப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள் பள்ளியிலிருந்து  மாணவர்களை  அழைத்து சென்றார் .இன்றயை நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்களை நேரடி களப் பயணத்தின் வாயிலாக விழிப்புணர்வு அடைய செய்தது மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.மாணவி காயத்ரி தோட்டக்கலை பண்ணையில் நடந்த நிகழ்வுகளை அழகாக எடுத்து சொன்னதற்காக செடியை பரிசாக பெற்றார்.மாணவர்கள் அனைவரும் தாங்கள் பண்ணைக்கு வந்ததன் நினைவாக பண்ணை வளாகத்தில் செடிகளை நட்டனர்.



கூடுதல் தகவல்கள் :
                  தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் தர்மர் மாணவர்களிடம் விளக்கி கூறுகையில் ,
                            மல்லிகை செடி வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.அதன் இலை மூன்று வகைப்படும்.அவை.பிச்சிப்பூ,சாதிப்பூ ,குண்டுமல்லி என்றும்,மாமரத்தை இரண்டு வகையான ஒட்டு முறையில் உற்பத்தி செய்யலாம் என்றும் கூறினார்.
                  புளியமரம் சத்தத்தை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது.மேலும் மாசுக்களையும் தன்னகத்தே உள்எடுத்து கொள்ளும் தன்மை கொண்டது.சமீப காலமாக புளியமரங்களின் எண்ணிக்கை குறைந்ததால்தான் சத்தத்தின் எண்ணிக்கை அதிகமாக கேட்கிறது என்று கூறினார்.சத்தத்தை உள்கிரகிக்கும் தன்மையில் மூங்கில் மரம் முதலிடமும்,புளியமரம் இரண்டாமிடமும்,துளசி முன்றாமிடமும் பெற்றுள்ளது.அரளி செடிக்கு கார்பன்டை ஆக்சடை உறிஞ்சும் தன்மை உண்டு.அதனால்தான் அதனை நான்கு வழி சாலைகளில் அதிகம் வைக்கின்றனர்.
                தமிழகத்தில் 56 வகையான பண்ணைகள் உள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பண்ணைகள் மட்டுமே உள்ளன.ஒன்று நேமம் என்கிற ஊரில் உள்ளது.இன்னொன்று தேவகோட்டை ஆகும்.

குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி:
                                   இதற்கு குழித்தட்டு,தென்னை நார்,ஆல் நைன்டீன் உரம்,விதை போன்றவை தேவை
செயல் முறையில்  முதலில் தென்னை நாரை மக்க வைத்தல் ,பிறகு தென்னைபட்டை,உரியா உரம்,காளான் போன்றவை வைத்து மக்கச் செய்தல் வேண்டும்.தெளிவாக 98 குழி உள்ள குழித்தட்டில் தென்னை நாரை முதலில் வைத்து அதன் மேல் ஒவ்வொரு  விதையாக ஒரு குழியில் போட வேண்டும்.பின்பு இன்னொரு குழித்தட்டை வைத்து அழுத்தவேண்டும்.பின்பு மீண்டும் தென்னை நாரை வைக்க வேண்டும்.பின்பு ஆல் நைன்டீன் உரம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இதை 3 அல்லது 4 நாட்கள் வெய்யிலில் படமால் நிழலில் வைக்க வேண்டும்.இதை போன்று இதே முறையை கத்தரி,தக்காளி,மிளகாய் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்.

பதியம் போடுதல் : இந்த முறை விதையில்லா இனபெருக்க முறை என்று அழைக்கபடும்.இந்த முறைக்கு சல்லி வேர்கள் உடைய தாவரத்தை தேர்வு செய்ய வேண்டும்.உதாரணமாக ரோஜா,மல்லிகை,அரளி,நந்தியாவட்டை,செம்பருத்தி போன்ற அழகு தாவரங்களை பதியம் இட எடுத்து கொள்வார்கள்.
                      பதியம் போடுதலை இரண்டு முறைப்படி செய்யலாம்.அவை விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல் ஆகும்.
விண் பதியம் இடுதல் : விண் பதியதிற்கு கத்தியை பயன்படுத்தி கணுவுக்கு அருகில் வெட்ட வேண்டும்.அதை லேசாக வெட்ட வேண்டும்.பின்பு தென்னை நாரை தண்ணீர் சத்துடன் வைத்து காற்று புகாதவாறு நன்கு கயிறு கொண்டு இறுக்கி கட்ட வேண்டும்.இதற்கு என்று தனியாக தண்ணீர் ஊற்ற வேண்டியது இல்லை.வேர் 25 நாட்களில் முளைத்து விடும்.
மண் பதியம் இடுதல் ; மண் பதியத்திற்கு கத்தியை பயன்படுத்தி கணுவுக்கு தூரத்தில் லேசாக வெட்ட வேண்டும்.பின்பு ஒரு சாடியில் வைத்து செம்மண்ணை நிரப்பி பின்பு மீண்டும் ஒரு அழுத்து அழுத்தி வைக்க வேண்டும்.இதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.இதனை 60 மற்றும் 75 நாட்களில் இரண்டு முறை வெட்ட வேண்டும்.மண் பதியதிற்குசிறந்தது கொய்யா பழம் என்றார்.

ஒட்டு முறை:  இது மென்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு என இரண்டு வகைப்படும்.
மென்தண்டு ஒட்டு : மண்ணில் ஒரு தண்டை குறுக்காக வெட்டி அதன் மேல் அதே அளவுள்ள தயான் குச்சி லேசாக சீவி அதை வைக்க வேண்டும்.பின்பு பாலித்தீன் வைத்து கட்ட வேண்டும்.அதன் மேல் தொப்பி போன்று உள்ள பாலித்தீன் கவரை வைக்க வேண்டும்.நெல்லியை இம்முறையில் செய்யலாம்.பின்பு கத்தரி,சுண்டை மென்தண்டு ஒட்டு முறையில் வைக்கலாம்.
                          இந்த ஒட்டு முறை நிழல்வலைகுடை உள்ளே இருக்கும்.இதன் உள்ளே இருக்கும்போது அதிகமான வெயில் அளவு கிடைக்கும்.வளர்ச்சி அதிகம் இருக்கும் என்றார்.
நெருக்கு ஒட்டு முறை :
                       இம்முறையில் தண்டு லேசாக வெட்டி தாய் மரத்தில் கதர் துணி வைத்து சணலால் கட்ட வேண்டும்.பின்பு சாணி கலந்த செமண்ணை வைத்து பூச வேண்டும்.இதை 65 நாட்கள் மற்றும் 80 நாட்களில் கட் செய்ய வேண்டும்.ஒரு மரத்தில் இரண்டு ,மூன்று முறை இம்முறையை பயன்படுத்தலாம்.இதற்கு சப்போட்டா பழம் சிறந்தது .மேலும் மாமரத்தை இரண்டு ஒட்டு முறையிலும் வளர்க்கலாம்.அதனில் மென்தண்டு ஒட்டு முறை செய்வது சிறந்தது.

நெல்லி தோப்புக்கு மாணவர்களை அழைத்து சென்றனர்.அங்கு மென்தண்டு ஒட்டு முறையில் உருவான மரங்களை மாணவர்கள் பார்த்தனர்.அதனில் என்.ஏ வகை நெல்லி,கான்ஞ்சன் வகை நெல்லி கிருஷ்ணா வகை நெல்லி ஆகியவற்றை விளக்கி கூறினார்கள்.

கவாத்து முறை : இதனை செய்வதற்கு கத்தரிக்கோல் போல் உள்ள ஒரு இயந்திரம் சிக்கியேச்சர் என்பதன் மூலம் வெட்டி நீக்குவது தொடர்பாக விளக்கினார்.இந்த முறையில் பெரும்பாலும் நோய் தாக்கிய பகுதி,மற்றொரு மரத்துடன் இணைந்த பகுதி,மரத்தில் காய்க்காத பகுதி போன்றவற்றை நீக்குவதற்கு காவாத்து செய்தல் என்று பெயர் என்று தெரிவித்தார்.இதனை செய்வதால் அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.
                மாமரத்திற்கு ஆகஸ்ட் மாதத்திலும்,முந்திரிக்கு டிசெம்பர் மாதத்திலும் கவாத்து முறை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

களப் பயணம் சென்றது தொடர்பாக மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ;

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
                  இரண்டாவது ஆண்டாக மாணவர்களை அரசு தோட்டக்கலை பண்ணைக்கு அழைத்து வருகின்றோம்.விவசாயம் தொடர்பாக  காலத்து மாணவர்களுக்கு இளம் வயது முதலே அறிய வேண்டும் என்கிற நோக்கில் தான் இங்கு அழைத்து வந்துள்ளோம்.அரசு தோட்டகலை பண்ணை அலுவலர் தர்மர் மாணவர்களுக்கு நல்ல முறையில் அனைத்து விவசாயம் தொடர்பான விசயங்களையும் எடுத்துரைத்தார்.பதியம் இடுதல்,கவாத்து செய்தல்,குழித்தட்டு நாற்றங்கால் செய்தல் தொடர்பாக மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் பசுமரத்து ஆனி போல் நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மாணவர்களில் பலர் கூலி வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள்.அவர்களுக்கு இந்த பயண அனுபவம் விவசாயம் தொடர்பாக நல்ல புரிதலை ஏற்படுத்தி உள்ளது.மாணவர்களில் சிலர் விவசாய துறை படிப்புகளை படிக்க வேண்டும் என்கிற குறிக்கோளை இந்த களப்பயணம் அவர்களது மனதில் ஏற்படுத்தி உள்ளது.இதற்காக அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

காயத்ரி  : காலையில் எங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறாய் என்று கேட்டனர்.நான் அதற்கு தோட்ட கலைப் பண்ணைக்கு செல்கிறேன் என்று கூறினேன்.அதனை ஆச்சிரியமாக அப்படியா எங்கே உள்ளது என்று விசாரித்தனர்.நான் இங்கே பக்கத்தில் தான் உள்ளது என்று சொன்னேன்.இவ்வளவு நாள் இங்கே உள்ளோம் எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.பல வகையான செடிகள் தொடர்பாக தெரிந்து கொண்டேன்.பதியம் போடுதல்,ஒட்டு கட்டுதல் போன்றவை என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று தெரிவித்தார்.

கார்த்திகேயன்  : நான் இது போன்றெல்லாம் இது வரை பார்த்தது கிடையாது.எனக்கு பல்வேறு புதிய தகவல்கள் செடிகள் குறித்தும்,பழங்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன்.தாவரங்களின் அறிவியல் பெயர்களை தெரிந்து கொண்டேன்.
நித்திய கல்யாணி : இங்கு உள்ள அனைத்து விசயங்களும் புதியதாக இருந்தது.வேளாண்மை தொடர்பாக நிறைய தெரிந்து கொண்டேன்.ஒட்டு கட்டுதல்,கவாத்து செய்தல் ,அதனால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.தோட்டக்கலைப் பண்ணை அலுவலர் தர்மர் எங்களுக்கு பொறுமையாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக விளக்கினார்.வாழ்கையில் இந்த நினைவுகள் எங்களுக்கு மறக்க முடியாத இடத்தை பிடித்துள்ளன என்றார்.



No comments:

Post a Comment