Friday, 30 January 2026

சட்ட , மருத்துவ , காவல் என அனைத்து உதவிக்கும் பெண்கள் 181 எண்ணுக்கு கால் செய்யலாம் 

பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமூக நல அலுவலர் பேச்சு   







       தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்     சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

                                           ஆசிரியை வள்ளி மயில் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, சமூக நலத்துறை அலுவலர்கள் சிவகலா, ஜோன்ஸ் இனியா, கல்லூரி மாணவிகள் பார்கவி, ரபியத் பரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

                            சமூக நலத்துறை அலுவலர்கள்  நிகழ்வில் பேசுகையில்,

                                          குழந்தை திருமணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் என்பது 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆகும்.

                                                பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும். ஆணிற்கு 21 வயது பூர்த்தி அடைந்தால் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும்.

                                                குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 ல் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால், யாரெல்லாம்  தண்டிக்கப்படுவார்கள்? என்றால் இரு தரப்பு பெற்றோர்கள், மாப்பிள்ளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள், திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, மற்றும் மத வழிபாட்டு தலைவர்கள் ஆகியோருக்கு தண்டனை வழங்கப்படும்.

                                         மேலும் திருமண புரோக்கர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள், சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், சமையல்காரர்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள், திருமண மண்டபம் மேலாளர்கள் ,  பந்தல் ஏற்பாட்டாளர்கள் மற்றும் வரவேற்பாளர்கள் , திருமண அழைப்பிதழ்களை  அச்சடிப்பவர்கள்  என அனைவருக்குமே தண்டனை வழங்கப்படும்.

                                                குழந்தை திருமணத்தை நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

                                                 குழந்தைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று தெரிந்தால் சமூக  நலத்துறை அலுவலகத்தில் சென்று தகவல் தெரிவிக்கலாம்.

                                        அங்கன்வாடிக்கு சென்று தகவல் தெரிவிக்கலாம். 1098 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

                                       நம்முடைய உறவினர்களை காட்டிக் கொடுத்தால் நமக்கு பிரச்சனை வரும் என்று நினைக்க வேண்டாம். நம்மதான் சொன்னோம் என்று யாருக்கும் தெரியாது.

                                      அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தால் அடுத்து டிகிரி படிப்பதற்கு மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

                             பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் பெயர் புதுமைப்பெண் திட்டமாகும். ஆண்களும் இதே மாதிரி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் பெயர் தமிழ் புதல்வன் திட்டமாகும் .

                                     நாம் கல்வியை மட்டும் கற்றுக் கொள்ளாமல், கைத்தொழில் ஒன்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். தையல் பயிற்சி, ஆரி ஒர்க், எம்பிராய்டிங் வொர்க் என ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

                                        கல்வி தான் நம்மை உயர்த்தும். நம்மிடம் எந்த பொருள் இருந்தாலும் நம்மை விட்டு சென்றுவிடும்.மற்ற பொருள்களை  யாராவது எடுத்துச் செல்வார்கள்.

                                கற்ற கல்வி மட்டும் தான் நம்மை விட்டு போகாது, நம்முடைய தவறை திருத்திக்கொள்ள தான் ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளார்கள். நம்முடைய நண்பர்களும் நம்முடைய தவறை சுட்டிக் காட்டவேண்டும்.

                                                      மகளிர் உதவி எண் 181 ஆகும். இதில் சட்ட உதவி, மருத்துவ உதவி, காவல் உதவி, உளவியல் ஆலோசனை மீட்பு மற்றும் தங்குமிடம் இவை ஐந்தும் அடங்கும்.

                                            சட்ட உதவி என்பது ஏழ்மையான மக்களுக்கு எதுவும் பிரச்சனைகள் என்றால் வக்கீல் இலவசமாக வாதாடுவார்கள்.

                                       நமக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மருத்துவ உதவிக்கு அழைக்கலாம். 108 க்கு கால் செய்து எடுக்கவில்லை என்றால் மகளிர் உதவி எண் 181 அழைக்கலாம்.

                                               காவல் உதவி என்பது அம்மாவை, அப்பா தொடர்ந்து அடித்து கொடுமை படுத்தினாலும், மாமியார் கொடுமை படுத்தினாலும், நாம் இந்த உதவிக்கு அழைக்கலாம்.       

                                      உளவியல் ஆலோசனை என்பது நமக்கு ஏதாவது மனக் கவலைக்கு ஆலோசனை வழங்கப்படும்.

                                மீட்பு  மற்றும் தங்குமிடம் என்பது நமக்கு அப்பா இல்லை,, நானும் அம்மாவும் தனிமையில் இருக்கிறோம்.பக்கத்து வீட்டிலோ  அல்லது மற்ற யாரோ ஒருவரால்  ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் 181 க்கு கால் செய்து நம்முடைய பிரச்சனையை சொன்னால் அவர்கள் நம்மை அழைத்துச் சென்று பாதுகாப்பு கொடுப்பார்கள். பத்து நாட்கள் வரை அங்கு தங்கலாம் .அதற்கு மேலும் தங்க வேண்டும் என்றால் சமூக நலத்துறை மூலம் உதவிகள் செய்வார்கள். உணவு ,உடை, தங்குமிடம் அனைத்தும் இலவசம்.

                                      முதியோர் பாதுகாப்பு எண் 1 4 5 6 7 ஆகும். முதியோர்களை  யாரும் பாதுகாக்க ஆள் இல்லையென்றால் இந்த நம்பருக்கு கால் செய்து உதவி கேட்கலாம்.

                                          நமக்கு போன் மூலமாக யாராவது நம்மை  டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டோம், உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்புங்கள் என்றால், நாம் பணம் அனுப்பக்கூடாது. சைபர் கிரைமுக்குத்தான் தகவல் அளிக்கவேண்டும். 

                                குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை என்பது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடக்கிறது. நாம் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

                                       யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது. படிப்பு மிக மிக முக்கியம் .அதைவிட ஒழுக்கம் முக்கியம்.

                                             குட் டச், பேட் டச் என்பது மாதிரி டோன்ட்  டச் என்றாகிவிட்டது. குழந்தை தொழிலாளர்கள் யாரும் இருக்கக்கூடாது.

                                      நாம்  போன் அதிகமாக பார்க்கிறோம். கேம் விளையாடுகிறோம். நாம் தெரியாத நம்பர் யாருக்கும் மெசேஜ்  அல்லது கால் செய்யக்கூடாது.

                                     நம்முடைய போட்டோக்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. நம்முடைய போட்டோக்களை தவறாக சித்தரிக்க  வாய்ப்புகள் உள்ளது.

                                               நாம்  போன் பார்ப்பதை முழுவதும் தவிர்த்துவிட்டு நியூஸ் பேப்பர் போன்றவற்றையும் , நூலக புத்தகங்களையும் வாசிக்கலாம்.

                          நம்முடைய படிப்பில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். எதற்கும் பயப்படாமல் தைரியமாக செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்கள். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார் .

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம்     சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, சமூக நலத்துறை அலுவலர்கள் சிவகலா, ஜோன்ஸ் இனியா, கல்லூரி மாணவிகள் பார்கவி, ரபியத் பரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=c0zAGn1LRCo

No comments:

Post a Comment