Saturday, 3 January 2026

 100க்கும் மேற்பட்ட இளம் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரோட்டரி அமைப்பின் மூலம் உதவி செய்த மகத்தான மனிதர் லியாக்கத் அலி


 

                                   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டெய்லரிங் கடை நடத்தி வருபவர் லியாக்கத் அலி. 

                                        அவரது தொழில் போக மற்ற நேரங்களில் இளம் வயது மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் இருதய அறுவை சிகிச்சைகளுக்கு வழி காண்பித்து அவர்களது  வாழ்க்கையில் ரோட்டரி அமைப்பின் உதவியுடன் ஒளியேற்றி வருகிறார் லியாக்கத் அலி.

                                     எனக்கு தெரிந்த ஏழ்மை நிலையில் உள்ள இளம் வயது  மாணவிக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்வதற்காக யாரிடம் போகலாம் என்று விசாரித்துக் கொண்டு இருந்தேன்.

                           அப்பொழுது ரோட்டரி அமைப்பின் மூலமாக லியாகத் அலி அவர்கள் பலருக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும், பொருளாதாரத்தில் வரிய நிலையில் இருக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இளம் வயதில் இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அறுவை  சிகிச்சையோ அல்லது வேறு வைத்தியங்களை செய்வதற்கு முழு உதவியாக உள்ளதாக தகவல்  கிடைக்கப் பெறுகிறது என்பதை அறிந்தேன்.

                                   உடனடியாக அண்ணார் அவர்களை தொடர்பு கொண்டோம். ஆரம்பம் முதல் அனைத்து விதமான வழிமுறைகளையும் பொறுமையாக எடுத்துரைத்து எங்களுக்கு வழி காண்பித்தார்.

                                   பெற்றோர்களுக்கும் நல்ல முறையில் வழி காண்பித்ததுடன் , தைரியமும், நம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

                                    இனிமேல் லியாக்கத் அலி பேசுகையில் ,  இளம் வயதில் பல மாணவ மாணவியர் பொருளாதார ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இருதய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாமல் தவிப்பதை அறிந்தேன்.

                          அதன் தொடர்ச்சியாக இதை ஒரு வேள்வியாக ரோட்டரி அமைப்பின் உதவியுடன் எடுத்து தொடர்ந்து செய்து வருகின்றோம். இதனால் எங்களுக்கு  மன திருப்தி ஏற்படுகிறது. அவர்களது வாழ்வில் விளக்கேற்றும் பொழுது அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

                                 சமீபத்தில் கூட எனக்கு உடல்நிலை மிகவும் சுமார் ஆகிப்போனது. ஆனால் மூன்று மாதங்களில் மீண்டும் நன்றாக வந்து விட்டேன். அப்பொழுது தொண்ணூத்தி எட்டு ஆபரேஷன்கள் தான் ரோட்டரி அமைப்பின் உதவியுடன்  செய்திருந்தோம்..

                          அதன் பிறகு தற்பொழுது வரை 106 ஆபரேஷன்கள் வரை உதவி  செய்துள்ளோம்.. இதற்காக பல கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.. காரைக்குடியில்ரோட்டரி அமைப்பின் உதவியுடனும் , மருத்துவமனை உதவியுடனும்  வருடம் தோறும் இருதய விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றோம். 

                           முதலில் குழந்தைகளை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இணைய வைப்போம். அதற்கான வழிகளை நாங்களே முயற்சி எடுத்து செய்து கொடுக்கின்றோம்.

                                 அதன் பிறகு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தைரியம் ஏற்படும் வகையில் பேசுகிறோம். 

                             ஏனெனில், பெரும்பாலும் ஆபரேஷன் என்றால் அனைவரும் பயப்படுகிறார்கள்.அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறோம். 

                                           பிளட் டெஸ்டும் ரோட்டரி அமைப்பின்  செலவிலேயே காரைக்குடியில் எடுத்து விடுகின்றோம். அதன் பிறகு அவர்களிடம் பேசி புரிய வைத்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றோம். அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் மிகுந்த உதவி செய்கிறார்கள்.

                                 ரோட்டரி விருதுநகர் இதயம் முத்து அண்ணாச்சி அவர்களது தங்கும் அறைகளும் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றது. தொடர்ந்து இது போன்ற பலரையும் இதற்கு நாங்கள் அனுப்பி வருகின்றோம். 

                                  ஆரம்பத்தில் எங்களுக்கு  இது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனெனில் பல குடும்பங்களில் மருமகள் இந்த இருதய அறுவை சிகிச்சை செய்தால்தான் குழந்தை நன்றாக இருக்கும் என்று  மருத்துவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்.

                                           ஆனால் வயதான மாமியார்கள், அம்மாக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் குடும்பங்களை சென்று நாங்கள் சந்திக்கும் பொழுது, எங்கள் குழந்தைக்கு எந்த வியாதியும் இல்லை.எங்கள் குழந்தைகள் நன்றாகத்தான் என்று எங்களிடம் கூறி விடுவார்கள்.

                                     ஆனால்  நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து குழந்தைக்கு இதயம் வலிக்கிறது, எனவே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்.

                          ரோட்டரி அமைப்பினர் அனைவரும் இணைந்து  நல்ல மன எண்ணத்துடன் அவர்களை எங்களுக்கு தெரிந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி தொடர்ந்து அறுவை சிகிச்சை தேவை என்றால்  அதன் மூலம் அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகின்றோம்.

                                 இது ஒரு கூட்டு முயற்சியாகும். அவர்களது குடும்பத்தினரும், பள்ளி தலைமை ஆசிரியர்களும்,  இதயம் முத்து அண்ணாச்சி போன்றோரும், ரோட்டாரியில்  இருக்கும் பலரும்  இதற்கான  உதவிகளைச் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

                              அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர்களும்  மிகுந்த உதவி செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் போன்ற பிற தேவைகளுக்கும் நாங்களே ரோட்டரி அமைப்பின் முலம் தொடர்பு ஏற்படுத்தி தேவையான தேவைகளை செய்து வருகிறோம்.

                                 ஆரம்ப காலங்களில் ரோட்டரி அமைப்பின் உதவியுடன் வேன் எடுத்து பலரையும் காரைக்குடியில் இருந்து வேன் மூலம்  சென்னைக்கு அழைத்துச் செல்வோம்.. 

                                    சென்னை  சென்ற பிறகு ரூமும்  வாடகைக்கு  ரோட்டரி அமைப்பின்  செலவிலேயே அறை வாடகைக்கு எடுத்து அவர்களை இரண்டு நாட்கள் தங்கவைத்து, அப்போலோ மருத்துவமனையில் பல்வேறு கட்ட சிகிச்சைகளும், ஆய்வுகளும் முடிந்த பிறகு அவர்களுக்கு ஆபரேஷன் தேவை என்றால் செய்யும் பொழுதும் நானே கூட இருந்து பார்த்துக் கொள்வேன்.அதற்கு ரோட்டரி அமைப்பினர்தான் முழு உதவி செய்து வருகின்றனர்.

                                  ஏனென்றால்  பலரும் ஆப்பரேஷன் என்றால் பயப்படுவார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுக்கு அனைத்து விதமான தகவல்களையும் எடுத்துக்கூறி ஆபரேஷன் முடிந்த பிறகும் அவர்களுக்கு தொடர்ந்து வழி காண்பித்து வருகின்றேன். பலருக்கு ஆபரேஷன் இல்லாமல் மருந்து, மாத்திரை முலம் சரி செய்யவும் ரோட்டரி அமைப்பின் உதவியுடன் உதவி செய்து வருகிறோம்.

                             தற்பொழுது 106 பேருக்கு இதுவரை ரோட்டரி அமைப்பின் உதவியுடன் ஆபரேஷன் செய்வதற்கு உதவி  உள்ளோம். இதில் பலரும் எங்களுக்கு வழிகாட்டி,  இந்த உதவி செய்வதற்கு ரோட்டரி அமைப்பு பெரும் உறுதுணையாக உள்ளனர்.

                                      இருதய நோயால் பாதிக்கப்பட்ட இளம் வயது குழந்தைகளுக்கு  எந்தவிதமான செலவும் இல்லாமல் காரைக்குடியிலிருந்து போக்குவரத்து செலவு  உட்பட ஆபரேஷன் செலவுகளையும் நாங்களே ரோட்டரி அமைப்பின் மூலம் பல நண்பர்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றோம்.

                             இதில் குறிப்பாக அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள்   உதவியும், ஆபரேஷன் செய்வதற்கான பல்வேறு வகையான தகவல்களையும் எடுத்துக் கூறி வருகிறார்கள்.

                      எனவே அனைத்து நல் உள்ளங்களின் உதவியுடனும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றேன்.

                                 இதில் பல குடும்பங்களில் உள்ள சிலரும் எங்களிடம்  ஆபரேஷன் செய்வதற்கு ஏன் வந்தாய்? எங்கள் குழந்தை நன்றாகத்தான் இருக்கின்றது, நீ எல்லாம் ஏன் இது தொடர்பாக பேசுகிறாய் என்று எங்களிடம் கேட்பார்கள் .

                               அவர்களுக்கும் இது  தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருதய  சிகிச்சைக்கு சம்மதிக்க வைப்போம்.

                              இவற்றையெல்லாம் தாண்டி நாங்கள் இதனை ரோட்டரி அமைப்பின் உதவியுடன்  தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். 

                              இறைவனுடைய அருளால் இது தொடர்கின்றது. தொடர்ந்து இதுபோன்று பலருக்கும் உதவி செய்ய ஆண்டவன் எங்களுக்கு வாய்ப்புகளை அளித்து உள்ளார். எனவே ஆண்டவனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். காரைக்குடி ரோட்டரி அமைப்புக்கும் மிகுந்த நன்றிகள். 

                              குழந்தைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை ரோட்டரி அமைப்பின் மூலம் தொடர்ந்து செய்கின்றோம். நீங்களும் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை உதவி தேவைப்படுவோர் என்னை 9842482326.இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

                                 இவ்வாறு லியாக்கத் அலி நம்மிடம் தெரிவித்தார். இவரது சேவை மென்மேலும் வளரட்டும். பலருக்கும் உதவி செய்யட்டும் என்று வாழ்த்துவோமாக.

தொகுப்பு :

 தோழமையுடன் 

லேனா 

காரைக்குடி.









No comments:

Post a Comment