மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த ரோட்டரி அமைப்புக்கு நன்றி! நன்றி! நன்றி!
நண்பர்களே எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிக்கு வருகை புரிந்த அரசு மருத்துவர்கள் கூறி சென்றார்கள்.
மாணவிக்கு சிகிச்சை கிடைக்க, மேல் சிகிச்சை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும், சிவகங்கைக்கு அழைத்து வர வேண்டும் என்றும், தெரிவித்து சென்றார்கள்.
நாங்களும் பலமுறை பெற்றோர்களிடம் கூறினோம். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எங்கள் குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறி விட்டார்கள்.
மீண்டும் மீண்டும் அரசு மருத்துவர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள். பெற்றோர்களிடமும் பேசினார்கள் .ஆனால் அதற்கெல்லாம் பெற்றோர்கள் மசியவில்லை.
எங்கள் குழந்தை நன்றாகத்தான் இருக்கின்றது. நீங்கள் தான் தெரியாமல் கூறுகிறீர்கள் என்று எங்களிடம் கூறிவிட்டார்கள். நாங்களும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.
மாணவியின் பெற்றோருக்கு பலமுறை எங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கினோம். மருத்துவர்களும் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் அதனை காதில் கேட்கவே இல்லை.
பிறகு மாணவிக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக அவரது தந்தை என்னிடம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனையிலும் நாங்கள் தகவல் தெரிவித்தோம். அவர்களும் சில திட்டங்களின் மூலமாக மாணவிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.மாணவியின் பெற்றோர் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் .
இருந்தபோதிலும் மாணவியின் பெற்றோர் பயந்து போய் இருந்தனர். இந்நிலையில் ஒருநாள் காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும்பொழுது மருத்துவ இதயம் வரைந்த பேருந்து ஒன்றை பார்த்தேன்.
அதனில் ரோட்டரி இதயம் காப்போம் திட்டம் என்று எழுதி இருந்தது. ரோட்டரி கிளப் மூலமாக செயல்படுவதாகவும் இருந்தது.
உடனடியாக ரோட்டரியின் ஆளுநர் இதயம் முத்து அண்ணாச்சி அவர்களை தொடர்பு கொண்டேன் . அவர்கள் விருதுநகரில் வசித்து வருகிறார்கள்.
ஜே சி அமைப்பின் மூலம் முன்பே அவர்கள் நல்ல அறிமுகமாக இருந்ததாலும் , எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றதாலும் , அவர்களின் மூலமாக இருதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அவர்களிடம் விசாரித்தேன்.
அவர்களும் உடனடியாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுடலைவேல் ( தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9750955445 ) என்பவரை என்னை தொடர்புகொள்ள கூறினார்கள்.
அதன்பின்பு மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதி செய்தார்கள். மாணவியின் பெற்றோர்கள் தேவகோட்டையில் இருந்து சென்னை செல்ல வேண்டும்.
சென்னை செல்வதற்கும், இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கும் நாகர்கோவிலில் வசிக்கும் ரோட்டரி ஷாஜஹான் அவர்களை தொடர்பு கொண்டேன். திரு.ஷாஜகான் அவர்கள் இருதய சிகிச்சை தொடர்பாக பல உதவிகளை செய்வதற்கு ரோட்டரி லியாகத் அலி அவர்கள் காரைக்குடியில் இருப்பதாக கூறினார்..
காரைக்குடியில் உள்ள ரோட்டரி லியாகத் அலி அவர்களை தொடர்புகொண்டு பேசினேன். அவர்களும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் மாணவியை முதலில் இணைய சொன்னார்கள்.
சிவகங்கையில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பணியாற்றும் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார். மிக எளிதாக காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்க ஏற்பாடு செய்தார் .
அதன் பிறகு பிளட் டெஸ்ட் காரைக்குடியில் எடுப்பதற்கும் ரோட்டரி லியாக்கத் அலி அவர்களே பண உதவி செய்து, சென்னை செல்வதற்கும் பண உதவி செய்து மாணவிக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
மாணவியும் அப்போலோ மருத்துவமனை சென்றார்கள். சென்னையில் அறுவை சிகச்சைக்கு முன்பு இரண்டு நாட்கள் இலவசமாக உணவுடன் தங்குவதற்கு இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ரூம் உதவியாக இருந்தது.
அறுவை சிகிச்சை செய்ய உள்ள அப்பல்லோ மருத்துவமனையும் இவர்களின் ரூமும் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை இதயம் ரூமில் சம்பத் அவர்கள் நல்ல முறையில் மாணவியையும் ,பெற்றோர்களும் தங்குவதற்கு உதவி செய்தார்.
சென்னையிலே அப்போல்லோ மருத்துவமனையில் தேவையான ரத்தம் உட்பட அனைத்தையும் ரோட்டரி லியாகத் அலி அவர்களே ஏற்பாடு செய்தார்கள்.
ஒவ்வொரு இடத்திலும், அப்போலோ மருத்துவமனையிலும் சரி, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்திலும் சரி, மாணவி தங்க வேண்டிய சூழ்நிலையிலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த ஆலோசனைகளை லியாக்கத் அலி அவர்கள் தெரிவித்தார்கள்.
லியாக்கத் அலி அவர்களின் ஆலோசனையின்படி மாணவிக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்பொழுது மாணவி நல்லமுறையில் இருக்கின்றார்.
மாணவியின் பெற்றோருக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் லியாக்கத் அலி அவர்கள் ஏற்படுத்தினார்கள்.அப்பல்லோ மருத்துவமனையில் நிருவாக பொறுப்பில் இருக்கும் ராஜ்குமார் அவர்களும் நல்ல முறையில் தகவல் தெரிவித்து உதவி செய்தார்கள்.
சமீபத்தில்கூட அரசு மருத்துவர்கள் என்னை சந்தித்த பொழுது, பல அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவ மாணவியருக்கு இருதய நோய் தொடர்பாக தகவல்களை கூறுகிறோம்.
இருதய நோய் இருப்பதை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் எங்கள் குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறிவிடுகிறார்கள்.
தொடர்ந்து அவர்களை வலியுறுத்தினால் படிக்கும் பள்ளியில் இருந்து டி ,சி. யை பெற்று வேறு பள்ளிக்கு சென்று விடுகிறார்கள் என்றெல்லாம் மருத்துவர் வருத்தமாக கூறினார்கள்.
இந்த நிலையில் ரோட்டரி லியாகத் அலி, ரோட்டரி இதயம் முத்து அண்ணாச்சி, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் என அனைவரும் எங்களுக்கு பல விதங்களிலும் உதவி செய்து மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததுடன் , நம்பிக்கையையும் தைரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு இந்த நேரத்தில் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் இருதய பிரச்சினை தொடர்பாக உதவி வேண்டுபவர்கள் திரு.லியாகத் அலி அவர்களை கிழ்கண்ட 9842482326 எண்ணிலும் , இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலைவேல் அவர்களை 9750955445 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு இவர்கள் செய்யும் உதவிக்கு உங்களது பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.நன்றி.
தோழமையுடன் ,
லெ . சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் .
No comments:
Post a Comment