Sunday 30 May 2021

 பிஞ்சுகளின் கொரோனா நிவாரண நிதி 

 பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இணைந்து தங்களின் சேமிப்பை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய நிகழ்வு 

 





தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு   பணம் அனுப்பினார்கள். கொரோனா நிவாரண நிதிக்குப் பல்வேறு மாணவர்கள் தனி நபர்களாக நிதி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.ஆனால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த நிதியை அளித்துள்ளனர்.

        

        கொரோனாவால்  உலகம் முழுவதும் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து  வருகிறார்கள் . உலகத்தின் பல நாடுகளில் மக்கள் முழுவதுமாக வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறார்கள். இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது . பொருளாதார முடக்கம் ஏற்பட்டு அதனால் ஆங்காங்கே பலரும் வாழ்க்கை நடத்துவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா  நிதியாக தங்களால் இயன்ற உதவியாக உண்டியலில் சேமித்த பணத்தை அனுப்பி உள்ளனர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள். இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம்  பேசினோம்.  சிறுவர்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார் விவேகானந்தர். இந்த செய்தியை முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். இதை மாணவர்களிடம் கூறி ஒவ்வொரு வகுப்பறையிலும் ஓர் உண்டியலை ஏற்பாடு செய்தேன். அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. அதில் மாணவர்கள் தங்கள் வீட்டில் செலவுக்காக கொடுக்கப்படும் காசில் ஒரு பகுதியை சேமிக்கிறார்கள் . சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் மாணவர்களின் உண்டியல் சேமிப்பு மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை அனுப்பி வைத்தோம். பிறகு பாட்டியும் பேரனும் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பம் பற்றி செய்தி படித்தோம். அந்தப் பேரனுக்கு ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சை உதவி தொகையாக 6,000 ரூபாய் கொடுத்து உதவினோம்.  பிறகு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது அண்டை மாநிலத்திற்கு உதவும் வகையில் வெள்ள நிவாரண நிதியாக 8000 ரூபாய் அனுப்பி வைத்தோம். இதுகுறித்து நான் அப்போது காலை வழிபாட்டு கூட்டத்தில் பேசினேன். எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்ரி என்ற மாணவி எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களிடம் கேரளா வெள்ளம் பற்றி கூறினேன். எங்களுக்கெல்லாம் இதுவரை தெரியவில்லை என்று கேட்டு வருத்தப்பட்டனர். இன்னொரு மாணவர் பேசுகையில்  இந்த முறை என்னால் உதவ முடியவில்லை. இதுபோல் துயரம் இனி வரக்கூடாது. ஒருவேளை அப்படி வரும் பட்சத்தில் நிச்சயம் உதவுவதற்கு முயல்கிறேன் .என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து கஜா புயலின் போது எங்களது பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வைத்து எங்களுடைய பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்தோம். இதனை தொடர்ந்து இப்பொழுது கடந்த ஆண்டு வரை உண்டியலில் சேமித்த பணத்தை பத்திரமாக வைத்திருந்தோம்.கொரோனாவின் அறிகுறி மிகவும் அதிகமாகி மக்கள் அனைவரும் கஷ்டப்படுவதை  பார்த்த  மாணவர்கள் உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று தெரிவித்தனர். உடனடியாக முயற்சிகள் செய்து மாணவர்களின் சேமிப்பு ரூபாய் 1032 யை  தமிழக முதல்வரின்  கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழக  அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீதும் , கடிதமும் தமிழக அரசின் இணை  செயலரின் கையெழுத்துடன் உடனடியாக பள்ளி மாணவர்களின் பெயரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                          "நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கஷ்டப்படும் யாரோ ஒருவருக்கு உதவுகிறது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால், சேமிப்பதில் இன்னும் அதிக ஆர்வம் காட்டினர்." பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தையும் பழக்கத்தையும் மாணவ பருவத்தில் ஊற்றினால் அவர்கள் பெரியவர்களானதும் ஆரோக்கியமான மாற்றம் சமூகத்தில் ஏற்படும் என நிச்சயமாக நம்புகிறேன். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிவது இந்த துயரமான நேரத்திலும் ஒருவிதமான நம்பிக்கை அளித்துள்ளது என்றார் சொக்கலிங்கம். 

       சேமிப்பு என்பது நமக்கானது என்பது என்பது மட்டுமின்றி பிறருக்காகவும் என்றாகும்போதும், சேமிப்பை  தற்போது  ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் பொதுநலன் கருதி சமுதாயத்துக்கு உதவுவது என்கிறபோது அந்த சேமிப்பின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்கிறது என்பதை இந்த பள்ளி மாணவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்! வாழ்த்துகள் மாணவர்களே!







  பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அனைவரும் தங்களின் உண்டியல் சேமிப்பை தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நேரடியாக ஆன்லைன் வழியாக பணத்தை அனுப்பி  உள்ளனர்.
தமிழக  அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீதும் , கடிதமும் தமிழக  அரசின்  இணை  செயலரின் கையெழுத்துடன் உடனடியாக பள்ளி மாணவர்களின் பெயரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  சமுதயாத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் உண்டியல் சேமிப்பு பற்றி  பேசும் பள்ளி மாணவர் ஜோயல்  பேச்சு வீடியோவாக காணலாம் :

 https://www.youtube.com/watch?v=JonW0ZnbCQ4

 

 

நீங்களும் தமிழக அரசின் கொரோனா பொது நிவாரணத்திற்கு  உங்களின் நிதியை  கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு பணமாக செலுத்தியும் ,ஆன்லைன் போர்டல் வழியாகவும் சென்று உதவலாம்.

நேரடியாக பணம் அனுப்ப இந்த லிங்க் வழியாக சென்றால் DONATE ONLINE என்பது வழியாக சென்று பணம் செலுத்தினால் 
( NET BANKING வழியாகவும்,டெபிட் கார்டு ,கிரெடிட் கார்டு வழியாகவும் பணம் செலுத்தலாம்.சில மணி துளிகள் தான்.நாம் கட்டிய பணத்துக்கு ரசீது வந்து விடுகிறது.




அனைத்து நன்கொடைகளுக்கு உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். 

 

No comments:

Post a Comment