Thursday 13 May 2021

 வணக்கம்.பஞ்ச் பேசுகிறேன் !பேசி முடிக்கும்போது எனது ஆசிகள் எப்போதும் உங்களுடன் இருக்கும். இந்த அன்பான  குரலை இனி எப்போது கேட்பேன்?

 

மகா குரு  மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

மகாகுரு அவர்களுடனான நினைவலைகள் 
 
ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 
 

           திருச்சி ஜேசிஐ தேசிய இயக்கத்தின் சர்வதேச பயிற்சியாளரும், திருச்சி அரசு உதவி பெறும் கல்லூரியின் விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றிய மகாகுரு பஞ்சநாதன் அவர்களுடனான அனுபவங்கள் மறக்க முடியாதது. ஜேசிஐ சார்பில்  மகாகுரு அவர்களால் நடத்தப்பட்ட வாழ்க்கைக்கான பயிற்சி வகுப்பில்  நான் எனது குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்டேன். அந்தப் பயிற்சிக்கு பிறகு அவர்களுடன் தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். தொடர்ந்து மெயில் வழியாகவும் பல்வேறு தகவல்களை அன்புடன் பரிமாறி உள்ளார்கள். புதிய தலைமுறை விருது பெற்றபோது மகாகுரு அவர்களின் வாழ்த்துக்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது : அவரது பாராட்டு வரிகள் :
 
 மகிழ்ச்சி 
கொண்டாடவேண்டிய மகிழ்ச்சி 
உங்கள் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் - உங்கள் முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததால் 
உங்கள் பள்ளி சக ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - உங்கள் முயற்சிகளுக்குத் துணை நின்றதால் 
உங்கள் பள்ளிக் குழைதைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - உங்கள் முயற்சிகளுக்கு வடிவம் கொடுத்ததால் 
உங்கள் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - அவர்கள் குழந்தைகளுக்குப் படிப்பு மட்டும் போதாது எனப்புரிந்துகொண்டதால் 
நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - புதிய தலைமுறைக்கு புதிய முயற்சிகள் தேவை எனப்புரிந்து கொண்டு செயல்பட்டதால்.
வாழ்க வாமுடன் 
பஞ்ச்
 
 
ஆச்சிரியத்தில் ஆழ்த்திய மகாகுரு :
 
                             2015 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதியன்று விருதுநகர் இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சியில் என்னையும் பயிற்சி அளிக்குமாறு மகாகுரு அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மிகப்பெரிய சந்தோசமாகவும் இருந்தது. தொடர்ந்து பத்து மாதங்களாக நடந்து வரும் அந்தப் பயிற்சியில் பதினோராவது மாதமாக "நான்தான் அந்த ஆசிரியர்" என்கிற தலைப்பில் பயிற்சியின் மூலமாக பல்வேறு விஷயங்களை 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எடுத்து வழங்கினேன். அங்கு குழுமியிருந்த ஆசிரியர்களிடம் இருந்தும் , மகாகுரு அவர்களிடம் இருந்தும் பல்வேறு தகவல்களை நானும் கற்றுக்கொண்டேன். அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் - பத்திரிக்கை முகவரி மாறி போய் இருந்தாலும் தொலைபேசி வழியாக அவர்கள் தொடர்பு கொண்டவுடன் இசைவு தெரிவித்து சென்று வந்தேன். எனக்கு அது ஒரு வாய்ப்பாகவே நான் எண்ணினேன். அன்றைய தினம் மகாகுரு அவர்களுடனான அனுபவங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.
 
இரண்டாவது முறையாக ஆச்சிரியத்தில் ஆழ்த்திய நிகழ்வு :
 
              அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 12வது மாதம் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும்  பயிற்சியின் மூலமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டோம். இந்த நிகழ்வில் புதுமை புனைதல் என்கிற தலைப்பில் விளக்கங்கள் பள்ளியில் நடைபெற்று வரும் பல்வேறு தகவல்களை ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறினேன். சுட்டிவிகடன் உதவி ஆசிரியர் திரு சரவணன் அவர்களும் இந் நிகழ்வில் பங்கு பெற்றார்கள்.

   இந்த நிகழ்வில் நான் பங்கு பெற்றது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது பல்வேறு விதமான தகவல்களை ஆசிரியர்களுடனும் மகாகுரு அவர்களுடனும் நான் கலந்துரையாடுவதற்கு அருமையான வாய்ப்பாக இருந்தது நானும் பல்வேறு தகவல்களை இதன் மூலமாக கற்றுக்கொண்டேன்.இந்த நிகழ்வுக்கான தலைப்பு தேர்ந்தெடுப்பதற்கு பலமுறை என்னிடம் மெயில் வழியாக தொடர்புகொண்டார்கள்.முக்கியமாக அவரது இல்லத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த நிலையிலும், தொடர்ந்து தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என்கிற நிலையில் பயிற்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தோடு இரவோடு,இரவாக கிளம்பி பயிற்சிக்கு வந்து சேர்ந்தார்கள்.அருமையான,பாராட்ட வேண்டிய நிகழ்வு அது.தொலைபேசி வழியாக பேசினாலும்,மெயில் வழியாக தொடர்பு கொண்டாலும் அன்புடன் பேசக்கூடியவர்கள்.பயிற்சியின்போது அன்பு,கோபம் போன்றவற்றை சம அளவில் அன்பாக கற்றுக்கொடுத்து பயிற்சி வழங்குவார்கள்.மறக்க முடியாத மனிதர்.
 
அகம் 5 புறம் 5 பயிற்சி அளிக்க பள்ளிக்கு வருவதாக கூறியவர் தொடர் பயிற்சியின் காரணமாக வரமால் சென்று விட்டார்கள் : வருத்தமான விஷயம் :
 
           இதன் தொடர்ச்சியாக அகம் 5 புறம் 5 பயிற்சி எங்கள் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையின் நிறுவனர் சோம நாகலிங்கம் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சோம நாகலிங்கம் அவர்கள் எழுதிய அகம் 5 புறம் 5 பயிற்சி கையேடு மகா குரு பஞ்சநாதன் அவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடைபெறுவதற்கு எனக்கு முழு ஆக்கமும் ஊக்கமும் மகாகுரு அவர்கள் வழங்கினார்கள்.மொத்தம் 10 மாத பயிற்சியில் ஒரு மாத பயிற்சிக்கு வருகிறேன் என்று கூறி இருந்தார்கள்.பிறகு வாய்ப்பு இருக்கும்போது எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால் வராமலே சென்று விட்டார்கள்.
 
கண்டிப்பான அன்புடன் பயிற்சி அளிக்கும் மகாகுரு :
 
                அவர்களுடனான அனுபவங்கள் மறக்க முடியாதது. சமீபத்தில் அன்னார்  அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கூட மகாகுரு அவர்களை தொடர்புகொண்டு கோடை பண்பலையில் வெளியே வராத வெளிச்சங்கள் பகுதியில் தாங்கள் பேச வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டேன். அப்பொழுது எனக்கு உடல்நிலை சரியில்லை பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்தார்கள். எனக்கே பெரிய ஆச்சரியமாக இருந்தது. எப்பொழுதும் நன்றாக உரையாடுபவர்கள். அன்றுதான்  நான் அவருடன் கடைசியாக பேசியது. அதன்பிறகு அன்னார் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமீபத்தில் முகநூல் வழியாக அன்னார்  அவர்கள் இறந்து போன தகவலை அறிந்தேன். மிகுந்த வருத்தமாக இருந்தது. மகாகுரு அவர்களின் பணி என்றும் மறக்க முடியாதது . அனைவருக்கும் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறி அதன் மூலமாக அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அவரது எண்ணமாக இருந்தது. அவர்களுடனான அனுபவங்கள் என்றுமே மறக்க முடியாது.
 
ஆழ்ந்த அனுதாபங்கள் 
 
 வருத்தங்களுடன்

லெ . சொக்கலிங்கம்,

ஜேஸிஐ மண்டல பயிற்சியாளர் ,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

 

2 comments: