Thursday 10 September 2020

குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு

  ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு 

 விளையாட்டில் உங்களை ஆர்வப்படுத்தி கொள்ளுங்கள் - வட்டார கல்வி அலுவலர் அறிவுரை 





 

  தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆன்லைன் வழியாக சதுரங்க பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் ஞான கிரேஸ் வளர்மதி தலைமையில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


                   
                 ஊரடங்கு நேரத்தில் கடந்த சில மாதங்களாக குவைத் நாட்டிலிருக்கும் செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன், தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்குப் ஆன்லைன் வழியாக செஸ் பயிற்சி அளித்தார்.  பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை குவைத் நாட்டிலிருந்து பயிற்சியாளர் பள்ளிக்கே அனுப்பி வைத்தார்.பரிசுகள் வழங்கும் நிகழ்வு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் ஞான கிரேஸ் வளர்மதி  தலைமை தாங்கி பேசுகையில் , விளையாட்டு என்பது முக்கியமானது.ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு சதுரங்கம் தொடர்பான பயிற்சி நல்ல முறையில் உதவியாக இருந்திருக்கும்.நீங்கள் பிற்காலத்தில் விளையாட்டு துறையில் உங்கள் கவனத்தை அதிகம் செலுத்துங்கள்.மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடையலாம் .என்று பேசினார். சதுரங்க போர்ட் மற்றும் காயின்களை வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு பரிசாக  வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் வழியாக சதுரங்க பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் ஞான கிரேஸ் வளர்மதி பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


   மேலும் விரிவாக :
                                      முன்னதாக கொரோனா நோய்த் தொற்று உலகை முடக்கிவிட்டது. அலுவலகங்களில் இயல்பான பணிகளை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக, பள்ளிகளுக்குத் தேர்வுகூட வைக்க முடியாத நிலை. மீண்டும் எப்போது பள்ளித் தொடங்கும் என்று இப்போதைக்கு தெரியவில்லை. இதனால் மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர். சுதந்திரமாக வெளியில்கூட விளையாட முடியவில்லை.
இந்த ஊரடங்கு சூழலில் தங்கள் பள்ளி மாணவர்களின் திறனை வளப்படுத்த ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர். வாட்ஸப் வழியே கதை சொல்வது, கதை புத்தகங்கள் கொடுத்தனுப்பி படிக்கச் சொல்வது எனப் பலரும் தங்களால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
கடந்த சில  மாதமாக குவைத் நாட்டிலிருக்கும் செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன், தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறார். குவைத் நேரப்படி காலை 4 மணிக்கு தயாராகி, (இந்திய நேரம் காலை 7 மணி) மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகின்றார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது.அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது. அந்த மாணவர்களைக் கண்டறிந்து, ஒருங்கிணைத்து, ரூக் பிரிவு, கிங் பிரிவு, குயின் பிரிவு எனக் குழுக்களாக மாணவர்களைப் பிரித்துக்கொண்டு செஸ் பயிற்சி அளித்தனர்.
                              பயிற்சி ஆரம்பிக்கும்போதே,பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும்  பரிசுகள் உண்டு என்று பயிற்சியாளர் கூறி இருந்தார்.அதன்படி குவைத் நாட்டிலிருந்து முயற்சி எடுத்து சென்னையில் இருந்து மாணவர்களுக்கு பரிசாக சதுங்க போர்ட் மற்றும் காயின்களை அனுப்பியது பாராட்டுக்குரியது.இப்போட்டிகள் ஊரடங்கு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து அவர்களின் நம்பிக்கையை வளர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

No comments:

Post a Comment