Thursday 23 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

                              நாடகக் கலைஞர் செல்வம் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

30/08/2019
                             குழந்தைகள் மீதான கவனிப்பும், கருணையும் பெரிதும் தேவைப்படுகின்ற சூழலில், ஒரு நாடக ஆசிரியராக எனது பயணத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி முக்கிய அனுபவங்களை பெற்றுத் தந்திருக்கிறது.

                                 குழந்தைகளின் பாராட்டுக்குரிய அனுபவமும், பங்கேற்பும் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகளை பெற்றுத் தரும் என்பதில் உறுதியான நம்பிக்கையை இந்நிகழ்வு எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

                  வகுப்பறை தாண்டி சிந்திக்கும் குழந்தைகளாக என் கண்முன்னே அவர்கள் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களும், அனுபவ பகிர்வும்  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது.

 பேரன்புடன்
 அ . செல்வம்,
 நாடகக்கலை வழியாக 
நன்னெறிக் கல்வி -  ஆசிரியர்,
 மதுரை.




                       நாடகக் கலைஞர் செல்வம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ள வரிகள் ஆகும்.

 முகநூல் வழியாக உருவான நட்பு :

                                           நாடகக் கலைஞர் செல்வம் அவர்கள் முகநூல் வழியாக எனக்கு அறிமுகமானார்கள். அவர்களது நாடக தகவல்களை பார்த்துவிட்டு எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி தரலாமா? என்று கேட்டிருந்தேன். அப்போது திங்கள் கிழமை மட்டும் தான் தனக்கு விடுமுறை  இருப்பதாகவும், மற்ற நாட்களில் தொடர் பணி  இருப்பதாகவும், தான் தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், எனவே பல்வேறு ஊர்களுக்கு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ,அனைத்து பள்ளிகளுக்கும் சென்று நாடகக் கலையை மாணவர்களுக்கு வழங்கி வருவதாகவும் ,  திங்கட்கிழமையன்று மட்டுமே வர இயலும் என்றும் தெரிவித்திருந்தார்கள். 

திங்கள்கிழமை மட்டுமே வர இயலும் - சரியான நேரத்திற்கு வருகை தந்த நாடக ஆசிரியர் :

                 முதலில் ஒரு மாதம் கழித்து தேதி கொடுத்திருந்தார்கள். திடீரென்று இரண்டு நாள் கழித்து , வருகிற  திங்கள்கிழமை, இந்த வாரம் வரலாமா என்று கேட்டிருந்தார்கள். நானும் வேறு ஒரு நிகழ்வு இருப்பதால், அது பற்றி சிந்தித்து பிறகு சொல்கிறேன் என்று கூறியிருந்தேன். பிறகு இரண்டு நாள் கழித்து தான் தகவல் கொடுத்து அந்த வாரமே , நாடக ஆசிரியர் செல்வம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வரலாம் என்கிற தகவலை நான் அவருக்கு தெரிவித்திருந்தேன். மிகவும் ஆர்வமுடன் எங்கள் பள்ளிக்கு காலையிலேயே கிளம்பி சரியான நேரத்திற்கு, பள்ளி நேரத்திற்கு வந்து விட்டார்கள். 

இளம் வயது மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து பயிற்சி அளித்த நாடக ஆசிரியர் :

          மாணவர்களிடம் முதலில் இளம்வயது மாணவர்களுக்கு ஒரு நாடகப் பயிற்சி கொடுத்தார்கள். நாடக பயிற்சியின் மூலமாக கதைகளை கூறினார்கள். அந்த கதையின் மூலமாக நன்னெறி கருத்துக்களை பரப்பினார்கள். மீண்டும் உயர் கல்வி மாணவர்களுக்கான நாடகத்தை வழங்கினார்கள். அதிலும் நல்ல கருத்துக்களை ,மாணவர்கள் மனதில் பதியும் வகையில்,மாணவர்களுடன் மாணவர்களாக பழகி பல கருத்துக்களை நாடகமாக நடிக்க கற்று கொடுத்தார்கள்.

கண்ணீரை வரவழைத்த இளம் வயது வாழ்க்கை வரலாறு :

              மாணவர்களுடன் சில நேரம் சில மணி நேரங்கள் கலந்துரையாட செய்தார். அப்போது அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து கூறும்போதுதான்  மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுது விட்டார்கள். மிகவும் சிரமமான சூழ்நிலையில் தான் வளர்ந்த விதங்களையும், ஒரு காப்பகத்தில் தான் படித்ததையும், அங்கு பல சிரமங்களுக்கிடையில் தனது இளம் வயது வாழ்க்கை இருந்ததையும், தனது தந்தையார் அவர்கள் மிகவும் சிரமமான கூலி வேலை பார்த்து, சொற்ப வருமானத்தில் தன்னை  படிக்க வைக்க, வளர்க்க சிரமப்பட்ட கதையும் மிகவும் இயல்பாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். பல மாணவர்கள் இதனை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களுக்கு இதன் மூலமாக பல்வேறு தகவல்களை கொண்டு வந்து கொடுத்தார்கள். வெளிநாட்டிலிருந்து ஒரு தாய், தந்தையர்  குடும்பத்தினர் தன்னை தத்து எடுத்து கொண்டதாகவும், ஆனால் இதுவரை அவர்களை தான் பார்த்ததில்லை என்கிற தகவலையும் பதிவு செய்தார்கள். அதனைக் கேட்கும் பொழுது நமக்கே மிகவும் சங்கடமாக இருந்தது .அது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்து, தனது கையை தானே ஊன்றி இன்று மக்கள் பேசும் அளவில் நின்று வருவதற்கு தன்னுடைய முழு முயற்சியை காரணம் என்றும் தெரிவித்தார்கள். 

முயற்சி செய்தால் அனைவரும் வெற்றி பெறலாம் - நம்பிக்கை அளித்த பேச்சு :

           எனவே அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், தங்களது  முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம் என்கிற கருத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.

கண்ணீர் விட்டு அழுத மாணவி காயத்ரி :

     அன்னாரது கஷ்டமான இளம் வயது வாழ்க்கை வரலாறை கேட்ட மாணவர்கள் பலரில்  மாணவி காயத்திரி என்பவர் தனது உள்வாங்கிய கருத்தை பேசும்பொழுது,   நாடக ஆசிரியர் செல்வம் அவர்களுடைய   வாழ்க்கை வரலாறு தகவல்கள் கேட்டபோது , தனக்கு மிகவும் சங்கடமாக இருந்ததாகவும் கூறி கண்ணீர் விட்டார்கள். பிறகு நாங்கள்  நல்ல நிலைக்கு வருவதற்கு இந்த நாடகங்கள் கருத்துக்கள் உதவிகரமாக இருந்ததையும் பதிவு செய்தார்கள். இதுபோன்று தகவல்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றே கூறவேண்டும். நாடக ஆசிரியர் செல்வம் அவருடனான தொடர்பு இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அதிர்ச்சியை ஏற்படுத்திய நாளிதழ் செய்தி :

             முகநூல் வழியாக நாம் அவரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இருந்தபோதிலும்  சமீபத்தில்கூட கொரோனா  நேரத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டதாக நாளிதழ் வழியாக அறிந்து கொண்டு , நான் உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன். என்னால் முடிந்த உதவியை பணமாக அனுப்பி என்று கூறினேன். வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். தேவை ஏற்படும்போது கண்டிப்பாக தங்களை தொடர்பு கொள்கிறேன் கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.

மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மறக்கமுடியாதவர் நாடக ஆசிரியர் செல்வம் :

            யாருக்குத்தான் இது போன்று மனம் வரும். உண்மையிலேயே ஆசிரியர் செல்வம் அவர்கள் மறக்க முடியாதவர். மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி பல்வேறு நண்பர்களுக்கும் சரி மறக்க முடியாதவர்.நாளிதழ் செய்தி பார்த்து தன்னை வெகு சிலர் மட்டுமே தொடர்பு கொண்டு பேசினார்கள் என்றும்,பலர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதங்கப்பட்டு பேசினார்கள்.நானும் அன்னாரை ஆறுதல் படுத்தி சில வார்த்தைகள் கூறினேன்.நம்பிக்கை கொடுக்க, ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தாலே பாதி வலி குறையும் என்பது உண்மை.

சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாடகங்கள் வாயிலாக நன்னெறி கருத்துக்களை பரப்பும் ஆசிரியர் :


          பல ஊர்களுக்கும் பயணம் செய்து மாணவர்களுக்கு நன்னெறி கருத்துக்களை நாடகம் வழியாக வழங்கி வருகிறார். இன்றைய சூழ்நிலையில் இது போன்ற நாடகங்கள், நன்னெறி கருத்துக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக மாணவர்கள் மாறவேண்டும், நாடகங்களின் வழியாக மாணவர்கள் மாறுவதற்கு நாடக ஆசிரியர் செல்வம் அவர்கள் முழு முயற்சி எடுத்து வருகின்றார்கள். 

மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து பள்ளி மதிய சத்துணவு சாப்பிட்ட நாடக ஆசிரியர் :

                       நாடக ஆசிரியர் செல்வம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து இருந்தபோது, பொதுவாக பள்ளிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களை ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் அன்னார் அவர்களோ மாணவர்களுடைய மதிய சத்துணவை  தான் நான் சாப்பிடுவேன் என்று கூறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து எங்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை  ஆர்வமுடன் சாப்பிட்டு,  அதனையும்  பாராட்டி சென்றார்கள். மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு அதையும் பாராட்டி அது தொடர்பாக தனது கருத்துக்களையும் பதிவு செய்து சென்றார்கள். அந்த நிகழ்வும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது தானும் இதுபோன்று அரசுப்பள்ளியில் படித்து, காப்பகத்தில் படித்து அதன் மூலமாகத்தான் இன்று வெற்றி பெற்றவராக வந்துள்ளேன் என்கிற கருத்தை பதிவு செய்த போது மாணவர்கள் மனதில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

நன்றிகள் பல :

          நாடக ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு மதுரையில் இருந்து தேவகோட்டை வந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நாடகம் வழியாக நன்னெறி  கருத்துகளைப் பரப்பியதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி . 


 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,   சிவகங்கை மாவட்டம்.   

 8056240653 


                       

நாடகக் கலைஞர் செல்வம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2019/09/blog-post_2.html#more

நாடகக் கலைஞர் செல்வம் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :


https://www.youtube.com/watch?v=I2MmwMV7YHU



https://www.youtube.com/watch?v=1QIgb0SIXt0
















No comments:

Post a Comment