பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்களுடன் பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை கலந்தாய்வுதேவகோட்டை – பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுடன் கந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் வரவேற்றார். பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகளை பாஸ்போர்ட் அலுவலர் மணிவேலும் ,அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து அஞ்சலக தலைமை அதிகாரி மலைமேகம் ,அலுவலர்கள் கார்த்திக்,வெங்கடேசன் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.மாணவர்கள் கோட்டையன் ,காயத்ரி,அய்யப்பன் ,அஜய்,சந்தியா,மாதரசி,சிரேகா உட்பட பலர் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் அஞ்சலக மற்றும் பாஸ்போர்ட் அலுவலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
மேலும் கூடுதல் தகவல்கள் :
மாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்!
``பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற, என்ன செய்ய வேண்டும்?’’ என்ற கேள்வியோடு பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும்.இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும்.பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு , ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வரும்போது சான்றிதழின் நகலையும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை கொண்டது என்ற சுய சான்றொப்பம் இட்டு வழங்க வேண்டும்.நாங்கள் இங்கே அதனை சரிபார்த்து உங்கள் விவரங்களை மேல் அலுவலகத்துக்கு அனுப்புவோம்.அங்கு இருந்து போலீஸ் விசாரணைக்கு அனுப்புவார்கள்.அதன் பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும்.
``தற்போது பொதுமக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறும்வகையில் விதிகளை எளிமையாக்கியுள்ளோம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவது எளிது. காவல்துறை விசாரணைக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, முகவரிக்கான சான்றிதழும் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். முகவரி விவரத்தைச் சரிபார்க்க ஆதார் கார்டே போதுமானது.
பாஸ்போர்ட் மட்டுமே வெளிநாடு செல்ல போதாது.விசா அவசியம் தேவைப்படும்.அதனையும் பெற்று கொண்டுதான் வெளிநாடு செல்ல இயலும்.இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அஞ்சலக நடைமுறைகள் எப்படி?
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் அஞ்சலக நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு அஞ்சலகம் தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.
தேவகோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் சம்மதம் தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.தலைமை அஞ்சலக அதிகாரி மலைமேகம் அனைவரையும் வரவேற்றார்.அஞ்சலக அலுவலர்கள் கார்த்தி ,வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
அஞ்சலகத்தின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.
அஞ்சலகத்தில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்கள் .அஞ்சலகத்தில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வீடுகளுக்கு சென்றடைவது எப்படி? அஞ்சல் அட்டை, உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, மணி ஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி? பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்ன என்பது தொடர்பாகவும்,பதிவு தபாலுக்கும் ,விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் விளக்கமாக எடுத்து கூறினார்கள் .
அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ - போஸ்ட் ,முக்கிய நகரங்களுக்கு பொது மக்கள் தங்களது சரக்குகளை குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை, உள்நாட்டில் பண பரிமாற்ற சேவை,வெளிநாடுகளுக்கு தபால்கள்,பார்சல்கள் அனுப்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை,Mobile Money System,IMO என பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.மை ஸ்டாம்ப்,பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,பார்கோடு மூலம் கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும் செயல் விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் கோட்டையன் ,காயத்ரி,அய்யப்பன் ,அஜய்,சந்தியா,மாதரசி,சிரேகா
ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார்.
மேலும் கூடுதல் தகவல்கள் :
மணி ஆர்டர் அனுப்புவது எப்படி என்பதை விளக்கும் வகையில் பள்ளியில் படிக்கும் பரத்குமார் என்கிற மாணவர்க்கு அவரது வீட்டு முகவரிக்கு ருபாய் பத்துக்கான பணம் அனுப்புவது எப்படி என்பதை கணினி வழியாகவும்,படிவம் பூர்த்தி செய்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும் நேரடியாக விளக்கி சொன்னார்கள்.நாளை அந்த மாணவருக்கு ருபாய் பத்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
தபால் நிலையத்தில் இருந்து சரியான பின்கோடு எழுதினால் மறு நாளே தபால் கிடைக்கும் என்றும்,தபால்களை எவ்வாறு அலுவலகத்தில் ஊர் வாரியாக அடுக்கி வைக்கிறார்கள் என்றும் பிரித்து வைத்து காண்பித்தார்.மேலும் ஒவ்வொரு போஸ்ட் மேனும் சரியான வழித்தடத்தில் தான் தினமும் செல்வார்கள் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில அவர்களை சென்று அடையலாம் என்றும் தெரிவித்தார்.அதனால்தான் அந்த காலத்தில் மெயில் சென்று விட்டதா என்றும்,போஸ்ட் மேன் சென்று விட்டாரா என்றும் கேட்டு சரியான நேரத்தை அறிந்து கொள்வார்கள்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக தெளிவாக எடுத்து கூறினார்கள்.பணம் போடுவது கணினி வழியாக எப்படி என்பதை தெளிவாக விளக்கினார்கள்.
மாணவர்கள் அஞ்சலகம் சென்றது தொடர்பாக தங்களின் கருத்துக்களை கூறியதாவது ;
காயத்ரி : நான் இது வரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இதுவே முதல்முறை .அஞ்சலகம் என்றால் கடிதம் அனுப்புவது மட்டுமே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது , அஞ்சகலத்தில் இவ்வளவு சேமிப்பு இருக்கிறது என்று தெரியும்.எனது தங்கை மிக சிறிய வயது தான்.வீட்டில் சொல்லி அவரை விரைவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ப்பேன்.மேலும் நானும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் கண்டிப்பாக சேருவேன் என்றார்.
நித்திய கல்யாணி : இதுவரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இதுவே முதல் முறை.இங்கு உள்ள சேமிப்பு தொடர்பான தகவல்களை நான் அனைவரிடமும் சென்று சொல்வேன்.எங்கள் வீட்டை சுற்றி உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் சொல்லி அஞ்சலகத்தில் சேமிக்க சொல்வேன்.
அய்யப்பன் : நான் இங்கு வந்தது எனக்கு புதிய அனுபவம்.இதுவரை அஞ்சலகம் சென்றது கிடையாது.இங்கு படிவங்கள் எப்படி பூர்த்தி செய்வது என்பது தொடர்பாக தெளிவாக எடுத்து சொன்னார்கள்.இது எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
சிரேகா : நான் இதுவரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இனி வரும் காலங்களில் நான் எப்போது வந்தாலும் யாருடயை உதவியும் இல்லாமல் நானே படிவங்களை பூர்த்தி செய்வேன்.நன்றாக இன்று எங்களுக்கு தகவல் கொடுத்து கற்று கொடுத்தனர்.அஞ்சலக அலுவலர்களுக்கு நன்றிகள் பல.என்று பேசினார்கள்.
No comments:
Post a Comment