Sunday 20 May 2018

 இயற்கையை ரசிக்க சைலன்ட் வேலி சென்று வாருங்கள் 



அட்டைப்பூச்சிகளை அதிகம் பார்க்க வேண்டுமா ? அல்லது கடி வாங்க வேண்டுமா ? முக்காலி  சென்று வாருங்கள் 

புல்வெளிகளை பார்க்க,ரசிக்க கூலி கடவு சென்று வாருங்கள்.

மான்களின் கூட்டம் கண்ணனுக்கு அழகு.

காரைக்குடி- சைலன்ட் வேலி -டாப் சிலிப் - பரம்பிக்குளம்-வால்பாறை-மூன்று நாள் சுற்றுலா 

காரைக்குடியில் இருந்து   சைலன்ட் வேலி (முக்காலி ) செல்லுதல்

நண்பர்களுடன் இரவு 10 மணி அளவில் காரைக்குடியில் கிளம்பி திண்டுக்கல்,தாராபுரம்,கோவை வழியாக காரமடை சென்று அங்கு இருந்து காலை சுமார் 8 மணி அளவில் சைலன்ட் வேலி எனப்படும் இந்திரா காந்தி தேசிய பூங்கா சென்று அடைந்தோம்.அங்கு எங்களை வனச்சரகர் நசீம் அவர்கள் நன்றாக வரவேற்றார்.அங்கு உள்ள அறையில் தங்கினோம்.

டீசல்  இல்லாமல் சுற்றிய அனுபவம் ;
                                              காலை 5 மணி அளவில் காரமடை தாண்டிய பிறகு ,வண்டி ஓட்டுநர் சொல்கிறார்.சார் டீசல் கால் வாசி தான் உள்ளது.எப்படி போவது என்று ? அகழி என்கிற இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளதாக சொன்னார்கள்.அங்கு சென்றால் அவர்களோ காலை 6 மணிக்கு பிறகுதான் பங்க் திறக்கப்படும் என்று சொல்லி விடுகிறார்.பிறகு மீண்டும் நாங்கள் இன்னும் கொஞ்ச தூரத்தில் பங்க் இருக்கும் என்கிற நம்பிக்கையில் சென்றால் அவரும் அதனையே சொல்கிறார்.மீண்டும் தைரியமாக மேலே மலையில் ஏறினால் அங்கு செல்லும் வழியில் பங்க் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.பிறகு மீண்டும் கீழே இறங்கி வந்து சுமார் 45 நிமிடம் காத்திருந்து காலை 6 மணிக்கு பங்க் திறந்தால் கரண்ட் இல்லை.பிறகு ஜெனெரேட்டர் போட வைத்து டிஸ்ல் போட்டு கொண்டு தடாகம் சென்று டீ சாப்பிட்டு விட்டு முக்காலி அடைந்தோம்.

 தேசிய பூங்காவை பார்க்க செலுத்தல் :

அடர்ந்த காட்டுக்குள் பயணம் :
                            ஜீப் ஒன்றின் வழியாக நம்மை அடர்ந்த காட்டுக்குள் அழைத்து செல்கின்ற்னர்.ஒரு ஜீப்பில் ஐந்து பேர் மட்டுமே அனுமதி.ஒரு நபருக்கு சுமார் 500 ரூபாய் .சுமார் 22 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் பயணம்.ஒரு ஜீப்புக்கு ஒரு வழிகாட்டி.அவர் அனைத்து விவரங்களையும் எடுத்து சொல்கிறார்.பிறகு காலை 9 மணி அளவில் கிளம்பி ஜீப் மூலமாக சுமார் 3 மணி நேரத்தில் உள்ள வன காட்டுக்குள் சென்றோம்.செல்லும் வழியில் அடர்ந்த காடு .காட்டின் உள்ளே செல்ல,செல்ல நல்ல மழை பெய்து இருந்தது.அப்போது எங்களுடன் வந்த ஒரு வழிகாட்டி எங்களை அனைத்து இடங்களின் தகவல்களை விரிவாக எடுத்து சொல்லி அழைத்து சென்றார்.

அட்டை கடி வாங்கிய அனுபவம் :
                                                      செல்லும் வழியில் ஒரு இடத்தில் கரும் குரங்கை பார்த்தோம்.அப்போது அதனை பார்ப்பதற்காக கீழே இறங்கினோம்.இறங்கிய சில நிமிடங்களில் எங்கள் கால்களில் ஏதோ ஏறுவது போல் இருந்தது.பார்த்தல் அட்டை.பிறகு குச்சி எடுத்து அதனை தள்ளி விட்டோம்.எங்களுடன் வந்த சிலருக்கு அட்டை காலில் ஏறுவதே தெரியாமல் ஏறி பல இடங்களில் கடித்து விட்டது.கடித்து ரத்தம் வந்த பிறகுதான் அட்டை ஏறிய தகவலே தெரிகிறது.ஆனால் நமக்கோ அட்டை கடிக்க வில்லை என்றாலும் கடித்தது போன்று ஒரு உணர்வு அவ்வப்போது வந்து நம்மை அச்சபடுத்தி செல்கிறது.என்ன செய்ய? ஒரே பயம்.அதோடு பிறகு கீழே இறங்காமல் சுமார் இரண்டு மணி  நேரம் பயணம் செய்து தேசிய பூங்கா அமைந்துள்ள இடத்துக்கு சென்றோம்.

100 அடி   உயரத்தில் நாங்கள் :
                                               சுமார் 30 மீட்டர்  உயரத்தில் எங்களை அழைத்து சென்றார்கள்.அங்கு இருந்து நாங்கள் பார்த்தபோது அருமையான இயற்கை காட்சி காணக்கிடைத்தது.30 மீட்டர்  ஏறும்போதே உள்ளாற ஒரு உதறல்.பிறகு எங்களுடன் வந்தவர்களில் சிலர் 15 மீட்டரில்  நின்று கொண்டனர்.ஆனால் 30 மீட்டர்  ஏறிய பிறகு நாங்கள் அடைந்த மகழ்ச்சிக்கு அளவே இல்லை.நன்றாக சுற்றி பார்த்தோம்.

காட்டாற்றை பார்க்க ட்ரெக்கிங் செல்லுதல் :
                                      அங்கு இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த காட்டாற்றை பார்க்க சென்றோம்.எங்களுடன் வழிகாட்டியும் உடன் வந்தார்.வழி நெடுகிலும் அட்டை அதிகமாக இருக்கும் என்றதால் எங்களுடன் வந்தர்களில் 3 பேர் மட்டுமே வந்தார்கள்.அந்த வழியில் கரடு முரடாக இருந்தது.நானோ கவனமாக கையில் குச்சி உடன் வழிகாட்டி உதவியுடன் அட்டை ஏறும்போதெல்லாம் கீழே தள்ளி விட்டு கொண்டே சென்றேன்.என்னுடன் வந்த தோழர்களுக்கும் இதனை சொன்னேன்.ஆனால் அவர்களோ நீண்ட நாட்களுக்கு பின்பு சந்திப்பதால் பல கதைகளை பேசிக்கொண்டு வந்தார்கள்.சுமார் ஒரு மணி நேரம் பயணத்துக்கு பின்பு நாங்கள் மீண்டும் மேலே வந்தோம்.கீழே ஒரு தொங்கு பாலம் உள்ளது .அதன் வழியாக தண்ணீர் ஓடுகிறது.இந்த இடத்தை 30 மீட்டர் உயரத்தில் இருந்து முன்பே பார்த்து விட்டோம்.பிறகு மூச்சு இறைக்க,நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த தத்தி ,தடுமாறி மேலே வந்தோம்.ஏன் தத்தி,தடுமாறினோம் என்றால்,காலில் அட்டை ஏறுகிறது.அதனை கவனத்துடன் கையாண்டு,மேலே ஏறும்போது வியர்த்து,விறுவிறுத்து விட்டது.எல்லாம் சரியாகி மேலே வந்து தேனீர் அருந்தும் இடத்தில் அமர்ந்தால் எங்களுடன் வந்த தோழர்களுக்கு கால் முழுவதும் அட்டை ஏறி,பல இடங்களில் கடித்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.அதனை ஒரு வழியாக சரி செய்து எங்கள் வண்டியை பிடித்தோம்.

மீண்டும் முக்காலி வருதல் :
                                   மீண்டும் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து 2.30 மணி அளவில் எங்கள் இடம் வந்து சேர்ந்தோம்.

நல்ல மதிய உணவு :
                                             முக்காலி விருந்தினர் மாளிகையில் எங்களுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது.மீன் கொழும்பு,சிக்கன் மசாலை,என நல்ல மதிய உணவு சாப்பிட்டோம்.பிறகு அங்கு நல்ல இடத்தில் சென்று ஓய்வு எடுத்தோம்.

மாலையில் புல்வெளி காண செலுத்தல் :
                                                                   முக்காலியில் நல்ல தேனீர் அருந்திய பிறகு அங்கிருந்து நாங்கள் மாலை 4.30 மணி அளவில் எங்கள் வாகனத்தில் தடாகம் வரை சென்று அங்கு இருந்து கூலி கடவு தாண்டி பிளாமரம் என்கிற ஊரின் அருகில் உள்ள மலை முகடுகளும்,புல் வெளியையும் பார்த்தோம்.சுமார் அரை மணி நேரம் ட்ரெக்கிங் போன்று எங்களை அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி.

சூரிய அஸ்தமனம் காணலாம் ;
                                          நாங்கள்  (லெ .சொக்கலிங்கம்0 செல்லும்போது இந்த இடத்தில் மாலை 5.45 மணி இருக்கும்.மலை உச்சியில் செல்லும்போது அழகாக சூரிய அஸ்தமனம் பார்த்தோம்.காற்றும் அருமையான காற்று வீசியது.நல்ல பச்சை பசேல் என்று சூப்பரான இடம்.சுமார் அரை மணி நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் எங்கள் இடம் நோக்கி வந்தோம்.அருமையான இரவு உணவு சாப்பிட்டோம்.தோசை,தொட்டு கொள்ள நல்ல குழம்பு,சட்னி.

ஊட்டி செல்லும் வழி :
                                         நாங்கள் சென்ற வழியில் சென்றால் மிக எளிதாக கூலி கடவு,பெட்ரோல் பங்க் ,பிளாமரம் ,பாக்குளம் ,கல்கண்டி ,முள்ளி,மஞ்சூர் வழியாக 98 கிலோமீட்டர் பயணம் செய்து ஊட்டி அடையாளம் என்று சொன்னார் எங்கள் வழிகாட்டி.

டாப் சிலிப் நோக்கி பயணம் :
                                 இரண்டாம் நாள் காலையில் சாப்பிட்டு விட்டு காலை 9 மணி அளவில் முக்காலியில் கிளம்பி மன்னார்காடு வழியாக மதியம் சுமார் 1 மணி அளவில் டாப் சிலிப் சென்று அடைந்தோம்.அங்கு எங்களை வனச்சரகர் முனியாண்டி அவர்கள் வரவேற்றார்.அங்கு மதியம் உணவு அருந்தி விட்டு எங்கள் வாகனத்தில் பரம்பிக்குளம் சென்றோம்.ஒரு வாகனத்துக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையும்,ஒவ்வொரு ஆளுக்கும் ரூபாய் 400ம் கட்டி உள்ளே சென்றோம்.எங்களுடன் ஒரு வழிகாட்டியும் வந்தார்.

பரம்பிகுளத்தில் மான்கள் கண்ணுக்கு அழகு ;
                                                   பரம்பிகுளத்தில் சுமார் மூன்று மணி நேரம் நமது வாகனத்தில் சுற்றலாம்.ஆனால் எங்கும் இறங்க கூடாது.வழி நெடுகிலும் மாங்காய் பார்க்கலாம்.அதுவும் கூட்டமாக பார்த்து ரசிக்கலாம்.வழியில் காட்டு எருமைகளை காணலாம்.மயில்கள் வழி நெடுகிலும் உள்ளன .மந்திகளும் அதிக அளவில் உள்ளன.காட்டு அணிகளும் உள்ளன .அவற்றை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

பரம்பிக்குளம் அணையை பார்வையிடுதல் :
                                                                             பரம்பிக்குளம் அணையை நன்றாக பார்த்தோம்.எவ்வளவு பெரிய அணை அருமையாக அமைந்து உள்ளது.அந்த காலத்தில் நன்றாக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டி வைத்து உள்ளனர்.செல்லும் வழியில் தூனகடவு அணையையும் பார்வையிட்டோம்.

கன்னிமரா சந்தன மரம் :
                                  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமரா சந்தன மரத்தை பார்வையிட்டோம்.அந்த இடமே நல்ல அடர்ந்த காடாகத்தான் இருந்தது.இங்கு செல்லும் வழியில் தான் காட்டெருமைகள் கூட்டத்தை பார்த்தோம்.பிறகு மீண்டும் பரம்பிக்குளம் ஊருக்கு வந்து தேனீர் குடித்து விட்டு அங்கிருந்து டாப் சிலிப் வந்து சேர்ந்தோம்.

டாப் சிலிப்பில் இரவு தங்குதல் :
                                                        டாப் சிலிப்பில் நாங்கள் தங்கி இருந்த அறை அருகில் இரவு நேரத்தில் மான் வரும் என்று கூறினார்கள்.ஆனால் எதுவும் வரவில்லை.இரவு உணவு நன்றாக இருத்தது.இரவு சுமார் 10 மனைவி வரை அனைவரும் வெளியில் அமர்ந்து சிரித்து பேசி கொண்டு இருந்தோம்.

கரண்ட் இல்லாமல் அவதி : 
                                                 இரவு சுமார் 9 மணி முதல் சுமார் இரண்டு மணி வரை மின்சாரம் இல்லை.மிக சிரமம்.ஏனெனில் இரவு காற்று வரட்டும் என்று ஜன்னலை திறக்க போக கருப்பு பூச்சிகள் அதிகம் வந்து விட்டன.அவற்றின் கடியோடு ,மின்சாரமும் இல்லாமல் இரவு வேர்த்து விட்டது.பிறகு இரவு இரண்டு மணிக்கு மேல் ஓரளவு தூங்கி காலையில் கிளம்பி விட்டோம்.

வால்பாறை நோக்கி பயணம் ;
                                                           டாப் சிலிப்பில் இருந்து காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி ஆழியாறு சென்று நண்பகல் 12 மணி அளவில் வால்பாறை (லெ .சொக்கலிங்கம்அடைந்தோம்.அருமையான தட்ப வெப்ப நிலை.மகிழ்ச்சியாக இருந்தது.எங்கு பார்த்தாலும் டீ எஸ்டேட்.கண்ணுக்கு குளிர்ச்சி.

ஆழியாறு அணையை ரசியுங்கள் :
                                                      நீங்கள் செல்லும் வழியில் உள்ள ஆழியாறு அணையையும் ,அறிவு திருக்கோவிலையும் அவசியம் பாருங்கள்.நாங்கள் சென்றபோது விரைவாக மீண்டும் திரும்ப வேண்டும் என்கிற கட்டாயத்தின் காரணமாக இவற்றை ரசிக்க முடியவில்லை.

வளைவுகளில் வியூவு பாய்ண்டை ரசியுங்கள் :
                                                             வீயூவ் பாய்ண்டை இறங்கி அங்கிருந்து இயற்கை அழகை ரசியுங்கள். ஆழியாறு அணை பகுதி,அடர்ந்த காட்டின் நடுவே பச்சை பசேல் என்ற இடங்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்.வண்டியை விட்டு இறங்கி ரசித்து,போட்டோ எடுத்து செல்லுங்கள்.ஆனால் எங்களுக்கோ இவற்றையும் வண்டியில் இருந்தவாறே ரசிக்க வேண்டிய சூழ்நிலை.

டீ எஸ்டேட்டால் சூழ்ந்த வால்பாறை :
                                                வால்பாறை செல்லும் வழி எங்கிலும் டீ எஸ்டேட்.நாங்கள் வால்பாறை சென்று டீசல் ஊற்றி கொண்டு பிறகு கூளங்கள் ஆறு சென்று பார்த்தோம்.பிறகு மூடில் நோக்கி சென்றோம்.பிறகு நேரம் ஆகிவிட்டது என்பதால் பாதி வழியில் திரும்பி அங்கிருந்து உணவு அருந்த சின்ன குன்று செல்லும் வழியில் உள்ள வன சரக அலுவலகத்துக்கு சென்றோம்.

வால்பாறையில் ரசிக்க வேண்டிய இடங்கள் :

1) கருமலை வேளாங்கண்ணி கோவில் (6 கிலோமீட்டர் )
2)பாலாஜி கோவில் (9 கிலோமீட்டர் )
3)வெள்ளமலை டன்னல் (12 கிலோமீட்டர் )
4) சின்னக்கல்லாறு டேம் (12 கிலோமீட்டர் )
5)நீரார் டேம்  (15 கிலோமீட்டர் )
6)கூலங்கள் ஆறு (3 கிலோமீட்டர் )
7) சித்தி விநாயகர் கோவில் (6 கிலோமீட்டர் )
8)நல்லமுடி பூஞ்சோலை (12 கிலோமீட்டர் )
9)சோலையாறு டேம் (24 கிலோமீட்டர் )
10)அதிரம்பல்லி அருவி (90 கிலோமீட்டர் )
11)தலனர் வியூ பாயிண்ட் (20 கிலோமீட்டர் )

சுட,சுட மதிய உணவு :
                                                           அங்கு நாம் தங்கும் விடுதிகள் உள்ளன .இவற்றை நாம் (லெ .சொக்கலிங்கம்),ஆன்லைன் வழியாக புக் செய்து கொள்ளலாம்.அங்கு திரு.ராஜா என்பவர் சுட,சுட எங்களுக்கு உணவு பரிமாறினார்.சூப்பர்.பிறகு அங்கு இருந்து மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி ஆழியாறு வழியாக நெய்க்காரப்பட்டி ,பழனி வழியாக திண்டுக்கல் வந்து அடைந்தோம்.வால்பாறையில் நேர பற்றாக்குறையின் காரணமாக வேறு எந்த இடத்தையும் பார்க்கவில்லை.ஆனால் அதிகமான இடங்களை சுற்றி பார்க்க வேண்டிய இடம் வால்பாறை ஆகும்.

காரைக்குடி நோக்கி வருதல் :
                                                    திண்டுக்கல்லில் வேணு பிரியாணியில் உணவு அருந்தி விட்டு இரவு 11.30 மணி அளவில் காரைக்குடி வந்து சேர்ந்தோம்.

எப்போதெல்லாம் செல்லலாம் ?


சைலன்ட் வெளியில் உள்ளே செல்லும் நேரம் ;
                           முக்காலி எனும் சைலன்ட் வேலியில் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே ஜீப் மூலம் அடர்ந்த காட்டின் உள்ளே தேசிய பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர்.

பரம்பிக்குளம் ;
                               பரம்பிகுளத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாகனம் செல்ல அனுமதி.பொதுவாக அவர்கள் வாகனத்தில் தான் அழைத்து செல்கின்றனர்.இங்கு தங்க அறைகள் உள்ளன.ஆன்லைன் வழியாக புக் செய்து கொள்ளலாம்.

டாப் சிலிப் :
                             இங்கு யானை உணவு உண்பதை நீங்கள் பார்க்கலாம்.காலை 8 மணி முதல் 9 மணி வரையும் ,மீண்டும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பார்க்கலாம்.மேலும் காலை 9 மணி முதல் இரண்டு மணி வரை யானை சவாரி செய்யலாம்.


லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி.
chokkalingamhm@gmail.com















No comments:

Post a Comment