Sunday 13 May 2018

திக்,திக் நிமிடங்களும் ,குடும்பத்துடன் முதல் கைதும்





தெறிக்கவிட்ட  போராட்டமும் ,வெறுத்துப்போன ஆசிரியர்களும்

அருமையான வாய்ப்பை நழுவ விட்ட தலைவர்கள் 


கானல் நீரான ஓய்வூதிய திட்டம் ????????

மனித உழைப்புகளை பயன்படுத்த திட்டமிடாத தலைவர்கள் 

பரபரப்பான சூழ்நிலையில் பயணம் :


                                            தோழர்களே , கடந்த மே 8ம் தேதி அன்று போராட்டத்திற்கு எனது குடும்பத்துடன் செல்வது என்று முடிவு செய்து ஒரு மாதத்துக்கு முன்பே ட்ரெயினில் டிக்கெட் விட்டேன்.
                                  போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே பரபரப்பு.என்னவென்று பார்த்தால் முக்கிய தலைவர்களை கைது செய்வதாக தகவல்கள்.எனக்கோ நாம் எப்படியும் போராட்டத்துக்கு சென்று  வென்று (?) வரவேண்டும் என்று வெறி.நாங்களும் யோசித்து,யோசித்து முதல் நாள் இரவு மே 7 அன்று எனது மனைவியுடன் ,மகனுடன் ட்ரெயின் ஏறி சென்று கொண்டு உள்ளோம்.
                              இதற்கிடையில் எனது தோழர் அதிசியராஜ் அவர்கள் காலையில் போன் செய்து, வாகனங்களில் செல்வோரை கைது செய்கிறார்களாம்,என்ன செய்யலாம் என கேட்டார்கள்.நானும் ,நீங்கள் பக்தர்கள் போல் வேடமணிந்து செல்லுங்கள்.என்று யோசனை சொன்னேன்.அதனடிப்படையில் அவர்களும்,தோழர் பாஸ்கரும் வெற்றிகரமாக பக்தர் வேடம் அணிந்து சென்னை நோக்கி சென்று விட்டார்கள்.

குடும்பத்துடன் பயணம் :
                           நானும் எனது குடும்பத்துடன் காலை 4.30 மணி அளவில் எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கினோம்.ரயில் நிலையத்தில் வெளியே பல நூறு போலீசார் ஆங்காங்கே சிறு,சிறு குழுக்களாக பிரிந்து  நின்று கொண்டு இருந்தார்கள்.

தீவிரவாதிகளை போல் விசாரிக்கப்பட்ட பொதுமக்கள் :
 
         எங்களுக்கு முன்பு சென்ற தனி நபராக சென்ற ஆண்களை தனியாக அழைத்து சென்று நீங்கள் ஆசிரியரா என்று பல கேள்விகள் கேட்டனர்.ரயில் நிலைய படியை விட்டு இறங்கிய உடன் அனைவரையும் விசாரித்தனர்.நாங்கள் குடும்பத்துடன் சென்றதால் எங்களை எதுவும் கேட்கவில்லை.

தெறிக்கவிட்ட போலீஸார் :
                                     அவர்களை தாண்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சென்ற போது ரயில் நிலைய வாசலில் பல ஆசிரியர்களை வாகனத்தில் ஏற்றி கைது செய்து வைத்து இருந்தனர்.(குறிப்பாக அதிகமாக பெண் ஊழியர்கள் ).அதனையும் தாண்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றோம்.பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் ஏற வேண்டிய பேருந்து வரவில்லை.அந்த நேரத்தில் எங்கள் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவரை ,ஒரு எஸ்.ஐ.வந்து சார் உங்களை அய்யா கூப்பிடுகிறார் என்று சொல்ல எனது மனைவியோ எனது கையை இறுக்கி பிடித்து கொண்டார்.எனது அருகில் நின்றவாறே,சார் நான் வாத்தியார் இல்லை.ஸ்ட்ரைகுக்கு வரவில்லை.எத்துணை முறை சொல்வது சார்.என்னைவிடுங்கள் சார் என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே அந்த போலீஸ் காரர் அவரை கையை பிடித்து தர,தரவென இழுத்து சென்று விட்டார்.நாங்கள் பஸ்சில் ஏறும்போது ,ரயில் நிலையத்தின் மாடி படியில் இருந்து இறங்கிய ஒரு நபர் ஏதோ காரணத்தினால் மீண்டும் மேலே ஏற ,எங்கள் அருகில் நின்று கோட்னு இருந்த போலீசார் ,அந்த நபரை விரட்ட (வாத்தியார்தான் என்று சொல்லி ) எங்களுக்கு பாவமாக இருந்தது.அதோடு படபடப்பாகவும் இருந்தது.

 பதட்டத்தில் எனது மனைவி :

                       இதனை பார்த்த உடன் எனது மனைவிக்கு முற்றிலும் பயம் வந்து விட்டது.உடம்பெல்லாம் நடுங்குதுங்க என்று சொன்னார்.நான் சொன்னேன் ,பயப்படாதே,தைரியமாக இரு.பயந்தால் நமக்கும் ஆபத்து.என்று தைரிய படுத்தி நண்பர் ஆனந்த் வீட்டுக்கு சென்று குளித்து,உடை மாற்றி வெற்றிகரமாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டோம்.

போராட்ட களம் நோக்கி சென்ற அனுபவம் : 
 
                                       இப்போது வேண்டுமானால் சொல்வதற்கு எளிதாக உள்ளது.ஆனால் அந்த அதிகாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை ஒரே பதட்டம்.சுமார் 6.30 மணி அளவில் அடையாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கேயும் போலீசார்.உள்ளுரா ஒரு உதறல்.இருந்தாலும் படபடப்பை வெளியில் காட்டாமல் எங்கள் நண்பர் வீடு நோக்கி சேர்ந்தோம்.அங்கு இருந்து எனது குடும்பத்துடன் மீண்டும் சேப்பாக்கம் நோக்கி பஸ்சில் பயணம்.அதற்கு இடையில் வாட்ஸப்புகளில் பல நூறு பதட்டமான செய்திகள்.மீண்டும் தைரியத்தை வரவழைத்து கொண்டு எனது மனைவியையும் தைரியப்படுத்தி எனது மகனுடன் போராட்ட காலம் நோக்கி சென்றறோம்.

எனது மனைவி , மகனுக்கு முதல் போராட்டம் மற்றும் முதல் கைது :

                     அங்கு தோழர் புரட்சி தம்பி மற்றும் தோழர் சத்தியா (தேவகோட்டையில் இருந்து வந்து இருந்த ஒரே பெண் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது ) ஆகியோருடன் போராட்ட களம் சென்று கைதாகி ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றோம்.அங்கு பல ஆயிரக்கணக்கான போராட்டக்கார்கள் எங்களை போன்று உள்ளே இருந்தார்கள்.

பதட்டப்படுத்திய போலீசார் பற்றி தேவகோட்டை தோழர் சத்தியா :
                                எனது கணவர் என்னை போராட்டம் இருக்கும் இடத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்.எனக்கோ வழி தெரியவில்லை.நான் போனில் பேசி கொண்டே வந்தபோது ,என்னை சுற்றி ஏழு,எட்டு போலீசார் ,நீங்கள் யார்,ஐ.டி.கார்டு இருக்கிறதா,எந்த ஊர்,இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்ட உடன் எனக்குள் பதட்டமாகி விட்டது.என்ன பதில் சொல்வது என்றே ஒரு கணம் தெரியவில்லை.பிறகு என்னை ஆசுவாசப்படுத்தி ,சொந்தக்காரரை சந்திக்க வந்தேன் என்று சமாளித்து உங்களுடன் வந்து சேர்ந்தேன் என்று பரபரப்பான நிமிடம் பற்றி சொன்னார்கள்.இருந்த போதும் அந்த படபடப்பு சரியாக பல நிமிடங்கள் ஆனது என்றும் சொன்னார்கள்.உண்மையில் அதுதான் போராட்ட உணர்ச்சி.ஆனால் இவ்வளவு உழைப்பும் அன்று பயன்படாமல் போய் விட்டதே என்பதுதான் வருத்தமான செய்தி.

 தீடீர் மறியலில் கிடைத்த வெற்றி :

                            சுமார் 12.30 மணி அளவில் போராட்டக்களத்தில் உள்ள சிலர் சாலை மறியல் செய்ததன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களை ராஜரெத்தினம் ஸ்டேடியம் வரவழைத்தனர்.அதுவும் போராட்டம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள்ளே அனைத்து தலைவர்களையும் ஸ்டேடியம் உள்ளே போலீசார் கொண்டு வந்து விட்டனர்.இதுவே முதல் வெற்றி என்று எண்ணினோம்.ஆனால் நடந்ததோ வேறு ????????

சரியான நேரத்தில் உதவிய நண்பர் ஆனந்த் அவர்களுக்கு நன்றி :
                                              பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் ஸ்டேடியம் உள்ளே உள்ளோம்.அவ்வளவு பேருக்கும் சிறுநீர் கழிப்பதற்கும் , குடிக்க தண்ணீரும்,சாப்பிட சரியான ஏற்பாடுகளும் இல்லை.அனைத்து நபர்களையும் உள்ளே உட்கார வைப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லை.வெயிலில் ,ஆங்காங்கே மர நிழலில் அமர்ந்து இருந்தனர்.நாங்களும் மர நிழலில் அமர்ந்து இருந்தோம்.என்ன செய்ய போகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.எங்களுக்கு உணவும் கிடைக்கவில்லை.உடன் எனது நண்பர் ஆனந்த் அவர்களை தொடர்பு கொண்டு மதிய உணவு கொண்டு வர சொன்னோம்.எனது மகனும் அதிகமாக பசிக்குது என்று சொன்ன பிறகு தான் இந்த முடிவுக்கு வந்தோம்.நண்பர் எங்களுக்கு போதிய அளவு உணவு வாங்கி கொண்டு வந்து கொடுத்தார்.அவருக்கும் நன்றி.

களை கட்டிய வியாபாரம் :
                                     போலீஸார் கடைசி வரை எங்கள் பெயரை கேட்க வில்லை.எழுதவும் இல்லை.இது குறித்து சில தோழர்களிடம் சொல்லி பார்த்தேன்.சார் என்ன செய்ய போறாங்கன்னு யாருக்குமே தெரியவில்லை .என்று சொன்னார்கள்.போலீஸார் தண்ணீர் தந்து இருக்க வேண்டும்.அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து இருக்க வேண்டும்.அதனை செய்யாத சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ தலைவர்களாவது அதனை ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.ஆனால் யாரும் எதனையும் கண்டு கொள்ளவில்லை.
                                   மதியம் 12 மணிக்கு மேல் தண்ணீர் பாட்டில்,தேனீர்,சுக்கு காபி ,வெள்ளரிக்காய்,சுண்டல்,மாங்காய் என வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றது.அனைவரையும் உள்ளே அனுமதித்தது போலீஸ்.நம்மில் உள்ள பலரையும் வெளியில் விட்டது.அங்கு போராட்டம் நடந்ததாக தெரியவில்லை.வியாபாரம் வண்டி,வண்டியாக வந்தது.நல்ல வசூல்.

முடிவு எடுக்க திணறிய தலைவர்கள்  :
                                                      மதியம்   சுமார் இரண்டு மணி அளவில் தலைவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூட்டத்தின் ஒரு பகுதியாக அழைத்து பேசினார்கள்.கூட்டத்தில் இருந்தவர்கள் (போராட்டக்காரர்கள் ) உங்களை இங்கு அழைத்து வர நாங்கள் சாலையில் மறியல் செய்தோம்.அரை மணி நேரத்தில் வந்து விட்டீர்கள்.அது போல் அரசு அழைத்து பேசும் வரை நாம் இந்த இடத்தில் இருந்து போக கூடாது.மேலும் தேவை பட்டால் சாலை மறியல் செய்யவும் தயராக உள்ளோம் என்று சொன்னார்கள்.அப்போது பேசிய தலைவர்களில் ஒருவர், நம்மிடம் இங்கு பேசுவதற்கு EPS  அல்லது OPS வரவேண்டும் .அல்லது அரசு தரப்பில் இருந்து வரவேண்டும்.அப்போது தான் நாம் இங்கிருந்து செல்ல வேண்டும்.என்று அருமையாக வீர வசனம் பேசிவிட்டு,சுமார் அரை மணி நேரத்தில் முடிவை சொல்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றார்.
                                          ஆனால் மாலை 6 மணி வரை எந்த தலைவரும் முடிவு சொல்லவும் இல்லை.

தலைவர்களின் ஆதரவுடன் போராட்டக்கார்களை திட்டமிட்டு வெளியில் அனுப்பிய அரசு:
                                            அய்யா அரை மணி நேரத்தில் வருகிறோம் என்று சொல்லி விட்டு சென்றீர்கள்.ஆனால் 4 மணி நேரமாகியும் வரவில்லை .
ஏன் ?????????  என்பதே கேள்வி.அரை மணி நேரம் விடுங்கள்.ஒரு மணி நேரத்தில் வந்து அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து ஒரு முடிவை அறிவித்து இருந்தால் இந்த போராட்டம் வெற்றி பெற்று இருக்கும்.மதியம் 2 மணிக்கு மேல் போலீஸார் அனைத்து போராட்டக்காரர்களையும் வெளியில் செல்ல அனுமதி அளித்தது.இதனால் பெரும்பாலான உறுப்பினர்கள் எந்த முடிவும் தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.இருந்த போதிலும் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்ளே இருந்தனர்.

இனிமேல் சென்னைக்கு போராட்டம் என்றால் யாரும் வரமாட்டார்கள் :- சொன்னவர் ஏங்கல்ஸ் 
                                   போராட்ட களத்தில் திண்டுக்கல் ஏங்கல்ஸை சந்தித்தேன்.சுமார் 3.30 மணி இருக்கும்.என்ன தோழர் ,என்ன முடிவு என்று கேட்டேன்? அப்போது அவர் சொன்னார்.தோழர் இவர்கள் இப்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல  முடிவு எடுக்காவிட்டால் இனி வரும்காலங்களில் சென்னைக்கு போராட்டம் என்றால் யாருமே வரமாட்டார்கள்.என்று சொன்னார்.அதுதான் உண்மை .பல்வேறு தடைகளை தாண்டி ,திக் ,திக் நிமிடங்களை தாண்டி போராட்டத்துக்கு வந்த பெண்கள் பெரும்பாலானோர் வெறுத்து போய்தான் கிளம்பி சென்றார்கள்.எந்த முடிவும் அறிவிக்காத தலைவர்களை நம்பி என்ன செய்வது?

தாசில்தார் தோழர் தமிழரசன் மதியம் 12 மணி அளவில் போராட்ட களத்தில் கூறியதாவது :
                                             சும்மா வந்து உட்கார்ந்து ,சாப்பிட்டு விட்டு போவதற்காக நாம் இங்கு வரவில்லை தோழர்.நமது கோரிக்கைகளை வென்று எடுக்க வந்துள்ளோம்.வாருங்கள் நமது தலைவர்களை இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்வோம் என்று சொல்லி விட்டு சென்று  சாலை மறியல் செய்து மீண்டும் என்னிடம் வந்து ஒரு மணி நேரத்துக்குள் அழைத்து வர சொல்லி உள்ளனர்.கண்டிப்பாக அழைத்து வந்து விடுவார்கள்.அவர்கள் வந்த பிறகு ,நாம் தலைவரிகளிடம் சொல்ல வேண்டியது என்னவெனில்,எண்ணற்ற தடைகளை தாண்டி பல்வேறு போராட்டத்துக்கு இடையில் ,இத்துணை பெரிய கூட்டத்தை நாம் கூட்ட இயலாது .எனவே இன்று நாம் ஒரு முடிவோடு செல்வோம் என்று சொன்னார்.ஆனால் நடந்ததோ வேறு?????????

திட்டமிடாத தலைவர்களால் வீணாகி போன மனித உழைப்புகள் :
                               இன்று என்னை சந்தித்த தோழர் பாஸ்கர் ,சார் சென்னை செல்வதுற்குள் மிகுந்த சிரமப்பட்டோம்.ரூபாய் 5000 வரை செலவு.செலவை விடுங்கள் சார்.எவ்வளவு உழைப்பை கொடுத்து ,முயற்சி எடுத்து தேவகோட்டையில் இருந்து சென்னை வரை சென்றோம்.ஆனால் அதற்கு என்ன பலன் சார்? மாலை வரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை.இரவு முழுவதும் கொசு கடியில் படுத்து ,போலீசாரிடம் மாட்டகூடாது என்று மாறுவேடம் இட்ட சென்னை வரை வந்ததது எந்த முடிவும் எட்டப்படாமல் ,முடிவு தெரியாமல் சென்று விட்டதே சார்.என்று வருத்தப்பட்டார்.என்ன செய்வது வருத்தப்படத்தான் முடியும்.காரணம் திட்டமிடாத தலைவர்கள்.

ஆசிரியர் ஜாஹீர் :
                                     சார் காஞ்சீபுரத்தில் இருந்து பல தடைகளை தாண்டி ,போராட்டத்தில் பங்கு கொண்டு ,கடைசியில் யாருமே அரசு சார்பில் பேச வராமல் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று சொன்னது பேரதிர்ச்சியாக இருந்தது.எவ்வளவு மனித உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது என்று தனது கருத்தை பதிவு செய்தார் .

எனது குடும்பத்துடன் முதல் கைது :
                                                          நம்பிக்கை கொடுத்து பிறகு என்னுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்ற எனது மனைவி எனது மகன் ஆகியோருடன் முதல் கைது ஆனது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.எனது மகனும் போராட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு புதிய அனுபவமே.
         
நிறைவாக :
                       1)   பல தடைகளை தாண்டி போராட்டத்துக்கு வந்த தோழர்களை வழி நடத்த தெரியாத தலைவர்கள் செயல் திட்டமிடப்பட்டதா ? அல்லது வேண்டும் என்றே போராட்டத்தை நீர்த்து போக செய்வதா? என்ன காரணம் ??????????? காரணம் என்ன கூறினாலும் எங்கள் உழைப்பு அன்று வீணானது உண்மை.

2) பல பெண் தோழர்கள் பல்வேறு உடல் உபாதைகளுடன்  போராட்டக்களத்திற்கு வந்து இருந்தார்கள்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தார்கள் .பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்தார்கள்.யாரை நம்பி வந்தார்கள் ?????????????? தலைவர்களை நம்பி வந்தார்கள்.ஆனால் தலைவர்களோ எந்த திட்டமிடலும் இல்லாமல் வந்து உள்ளனர்.

3) இவ்வளவு கூட்டம் வரும் என்று தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்து இருப்பார்களோ?????  
                             இவ்வளவு கூட்டத்தை கூட்டியே முடிவு எடுக்க தடுமாறிய தலைவர்கள் மே 19,20இல் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோமாக.போராட்டம் வெடிக்கும் ?????? என்றும் நம்புவோமாக .(வெடிக்க வேண்டிய நேரத்தில் வெடிக்க இல்லை.இப்போது வெடிக்கும் ????????)

4) மதியம் இரண்டு மணி அளவில் அரை மணி நேரத்தில் முடிவு சொல்வதாக சொல்லி சென்ற தலைவர்கள் மீண்டும் மாலை 6 மணி வரை முடிவு அறிவிப்பதை தாமதம் செய்தது ஏன் ?
                                  இந்த போராட்டத்தில் என்னை நம்பிக்கையுடன் பல தடைகளை தாண்டி பங்கேற்க செய்த தோழர் புரட்சி தம்பி.அதிசியராஜ்,மயில் ,தோழர் சத்தியா ,எனது மனைவி ,எனது மகன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திட்டமிடாத தலைவர்களை நம்பி  வந்து தீவிரவாதியை போன்று கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

லெ .சொக்கலிங்கம் .

 
                                                                                  

No comments:

Post a Comment