Sunday 19 October 2014

அரசு ஊழியர்களுக்கான வருமானவரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமானவரி பிடித்தம் தொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:வருமான வரி பிடித்தம் தொடர்பாக 25.10.13 தேதியிட்ட நிதித்துறை அரசாணையில் அனுப்பப்பட்ட மத்திய அரசு சுற்றறிக்கையின்படி, மாத ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை (டி.டி.எஸ்.) ஒவ்வொரு மாதமும் அந்தந்த துறைகளைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் டி.ஏ.என். எண்ணை பயன்படுத்தி சம்பளக் கணக்கு அலுவலகங்கள், கருவூலங்கள் மூலம் 24ஜி படிவத்தில் அலுவலகத்தின் அனைத்துப் பணியாளர்களின் வருமானவரி பிடித்தத்தின் மொத்தத் தொகை தாக்கல் செய்யப்பட்டு, வருமான வரிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு காலாண்டிலும்
சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு, ஒவ்வொரு பணியாளரிடமிருந்து வருமான வரி பிடித்தம் செய்த தொகையை அறிய வாய்ப்பில்லை. தனிப்பட்ட பணியாளரின் வருமான வரி பிடித்தம், அந்தந்த துறையைச் சார்ந்த ஊதியம் வழங்கும் அலுவலர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது.கருவூலத்தால் ஒவ்வொரு மாதமும் படிவம் 24ஜி–ல் தாக்கல் செய்யப்படுவது ஒரு புத்தக சரிக்கட்டல் என்ற முறையாகும். பிடிக்கப்பட்ட வருமான வரி கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுவதில்லை. இதற்குரிய புத்தக அடையாள எண்ணை (பி.ஐ.என்.) கருவூலங்களிலிருந்து பெற்று, தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி தொகைக்கான 24கியூ படிவத்தை வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் டி.ஐ.என். மையம் மூலம் ஒவ்வொரு காலாண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.
சேர்க்கப்படாமல் இருக்கலாம்
மேலும், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி, சம்பந்தப்பட்ட பணியாளர்களது கணக்கில் சேர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறையைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கடமையாகும். அவ்வாறு பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஒவ்வொரு காலாண்டும் முறையாக உரிய காலக்கெடுவுக்குள் 24கியூ படிவத்தை தாக்கல் செய்யும் பட்சத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி அந்தந்த பணியாளர்களின் கணக்கில் விடுபடாமல் சேர்ந்துவிடும்.இப்பணிகளை முறையாக செய்வதற்கு உரிய அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24கியூ தாக்கல் செய்யாதது அல்லது கருவூலத்தால் தாக்கல் செய்யப்படும் படிவம் 24ஜியை சரிபார்க்காமல் படிவம் 24கியூ வினை தாக்கல் செய்ததாலும் பணியாளர்களின் வருமான வரி கணக்கில் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
திருத்திய படிவம் தாக்கல்
அவ்வாறு பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையென்று வருமான வரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர், அந்தந்த துறையைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலரைத் தொடர்பு கொண்டு திருத்திய 24கியூ படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். மேலும் இதன்மூலம் அபராதத்தைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment