Wednesday 25 March 2020

 மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக சுமை ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி? ஏன் வீட்டிலேயே இருக்க வேண்டும்? மருத்துவர் விளக்கம் 





கொரோனாவை வெல்வோம் - யுத்தம் தொடர்கிறது....
     - Dr.ச.தெட்சிணாமூர்த்தி

மக்களின் சந்தேகங்களும் பதில்களும்..

1. ஏன் வீட்டிலேயே இருங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று மருத்துவர்கள், அறிவியலாளர்கள், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் அலறுகின்றனர்..?

      * தென் கொரியாவில் பிப்ரவரி 9 இல்  ஓர் 61 வயது பெண்மணியிடம் நோய்க்குறிகள் இருப்பதை மருத்துவர் எச்சரித்து டெஸ்ட் செய்ய சொல்கிறார். ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து, உணவகம் செல்கிறார், பிரார்த்தனைகளில் கலந்து கொள்கிறார். உடல் நிலை மோசமடைவதை ஒட்டி அவருக்கு Covid19 பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது.

    28 நாட்கள் 30 நோயாளிகளாக இருந்த தென்கொரியாவில், இவர் கலந்து கொண்ட சின்சோன் ஜிதேவாலயப் பிரார்தனை தொடர்புகளை (Shinchonji church cluster) கண்டறியும் போது, அது 5028 தொற்றுகளை உருவாக்கி , அடுத்த 17 நாட்களில் தென் கொரியாவின் நோயாளிகளின் எண்ணிக்கையை 6000 ஆக உயர்த்தியுள்ளது என்னும் அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது.

     நோய்த் தொற்றுள்ள ஒருவர் சமூகத்தில் நடமாடும் போது, அல்லது நல்ல நிலையில் உள்ள ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து, அவருடன் தொடர்பு கொள்ளும் போது மிக எளிதாக அடுத்தடுத்த தொற்றுகள் பரவி பேராபத்தை விளைவிக்கக் கூடும் என்பதையே இந்த நிகழ்வு நமக்கு காட்டுகிறது.

     சமூகப் பரவலைத் தடுக்க நம்மிடையே உள்ள ஒரே ஆயுதம் நோய் பரவும் சங்கிலியை உடைத்தெறிவதே . பல சிரமங்கள் இருக்கும் பட்சத்திலும் வீட்டிலேயே அனைவரும் தனித் திருத்தலே அதை உடைத்தெறிய ஒரே வழி.

      அதனால்தான் வீட்டிலேயே இருங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று பிரதமர், முதல்வர், மருத்துவர்கள், ஊடகங்கள் என அனைவரும் அலறுகிறோம்.

2. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஒரே நேரத்தில் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

       ஒரு ஒப்பீடு.
சைனாவில் ஒரு லட்சம் பேருக்கு 420 மருத்துவமனை படுக்கைகள், 3.6 ICU படுக்கைகள் உள்ளன. இத்தாலியில் 340 மருத்துவமனை படுக்கைகள் 12.5 ICU படுக்கைகள் உள்ளன.
 
   இதுவே இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 70 மருத்துவமனை படுக்கைகள், 2.3 ICU படுக்கைகளே உள்ளன.

     எனவே சமூக தனிமைப்படுத்தலை ஒவ்வொருவரும் கடைபிடிக்காமல், நோய் பரவலுக்கு காரணமாகி விட்டால், நோயாளிகனின்  எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை அதிகரிக்கும் போது,  இந்தியா மிகவும் திணறிப் போய், அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாகி விடும்.

3. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு என்பதும், அவர்களுக்கு அதிக சுமை ஏற்படுத்தாமல் இருப்பதும் இந்த நேரத்தில் எவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்தது ?

     ரொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நேரடியாகக் களத்தில் நிற்பவர்களே மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களே. அவர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, PPE போன்றவற்றை தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு மாநில அரசின் தலையாய கடமை.

     பத்தாயிரம்
மக்களுக்கு 18 மருத்துவர்கள், 23 செவிலியர்கள் கொண்டிருக்கும் சீனாவும் 41 மருத்துவர்கள், 59 செவிலியர்களைக் கொண்டிருக்கும் இத்தாலியும் கொரோனாவைத் தடுக்க எவ்வளவு தடுமாறுகிறது என்று எண்ணும் போது இந்தியாவில் 10000 ஆயிரம் பேருக்கு 3.4 மருத்துவர் 3.2 செவிலியர் மட்டுமே இருக்கும் நிலையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு
அதிமுக்கியத்துவம் ஆகிறது.

      கொரோனா யுத்தத்தில் இதுவரை சைனாவில் 3300 மருத்துவப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாகி அதில் 22 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இத்தாலியில் 20% பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, அதில் சில பேர் இறப்பிற்குள்ளாகி உள்ளனர். இது போன்றதொரு துயர நிலை நம் மருத்துவர்களுக்கு ஏற்படாத வகையில் அரசாங்கள் பாதுகாப்புக் கருவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.
     பொதுமக்களும் சிறு சிறு உடல் உபாதைகளுக்காக மருத்துவமனையில் கூடுவதை தவிர்த்து, மருத்துவர்களை கொரோனா யுத்தத்தில் முழுமையாக ஈடுபட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

     இப்படி தமிழகத்திலும், இந்தியாவிலும், உலகெங்கிலும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்பிக்கையோடு தொடர்கிறது. பொதுமக்களும் தங்கள் அளவில் முக்கியமாக வீடுகளிலேயே தனித்திருத்தல், ஒன்றாகக் கூடுதலை தவிர்த்தல், அடிக்கடி சோப் அல்லது கிருமி நாசினியால் கை கழுவுதல், தும்மும் போதும் இருமும் போதும் முகத்தை மூடிக் கொள்ளுதல் போன்ற எளிய செயல்களால் ஒத்துழைக்கும் போது, நிச்சயம் கொரோனாவை விரைவிலேயே வென்றெடுக்க முடியும்.

வென்றெடுப்போம்...

நம்பிக்கையோடு👍
Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS., DDVL.,
அரசு மருத்துவர்,
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
9159969415

26-03-2020

No comments:

Post a Comment