Wednesday 24 October 2018

தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை  உணவு வகைகளை மாலை நேரத்தில்   மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு பயிறு வகைகள் உணவாக  வழங்கப்படுகிறது.     
                                             

                                                   தினமும் மாலை நேரத்தில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தட்டப்பயிறு,பட்டாணி ,கொண்டக்கடலை போன்ற சத்தான உணவு வகைகள் பள்ளியில் வழங்கப்படுகிறது.இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : பள்ளியில்  மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது பள்ளியில் பயிலும் இளம் வயது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு நாள் ஒன்றுக்கு ஒரு சத்தான உணவு என்கிற வகையில் தட்டப்பயிறு ,பட்டாணி ,கொள்ளு,கொண்டக்கடலை.கடலை பருப்பு ,பாசிப்பயிறு போன்ற உணவு வகைகள் பள்ளியில் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.மாணவர்கள் சத்தான உணவினை சாப்பிட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் தங்களது பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.இளம் வயது மாணவர்கள் பசி அறிந்து உணவு வழங்கி சாப்பிடுகையில் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.இதனால் பயிற்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை,கடலைப்பருப்பு,கொள்ளு,பாசிப்பயிறு போன்ற சத்தான உணவு வகைகளை பரிமாறும் ஆசிரியர்கள்.



 மேலும் விரிவாக :


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டு வரும் மாலை நேர உணவு  சாப்பிடும் மாணவர்கள் கூறியதாவது :

மாணவி நித்யகல்யாணி : மாலை நேரத்தில் பள்ளியில் நமது பாரம்பரிய உணவு வகைகளான கொள்ளு,கொண்டைக்கடலை,தட்டப்பயிறு ,கடலைப்பருப்பு போன்ற உணவு பொருள்களை தாளித்து ருசிப்பட கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.அதனை சாப்பிட்டு விட்டு நாங்கள் பயிற்சியில் ஈடுபடும்போது எங்களுக்கு மிகுந்த தெம்பாக உள்ளது.எங்களுக்கு வீட்டுக்கு சென்ற பிறகு நெடுநேரம் கழித்துத்தான் இரவு உணவு பசி வருகிறது.

மாணவி கீர்த்தியா :  பள்ளியில் மாலை நேரத்தில் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவது குறித்து எங்கள் வீட்டில் சென்று சொன்னேன்.நாங்கள் இதுவரை இப்படி பள்ளியில் கொடுத்ததாக கேள்விப்பட்டதில்லை.இளம் வயதில் இது போன்று உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.பெண் குழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் சக்தியை தரும் என்று எனது அம்மா,பாட்டி ஆகியோர் தெரிவித்தனர்.இதனை கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

மாணவர் ஈஸ்வரன் : எங்களது வீட்டில் இந்த உணவுகளை நான் இதுவரை சாப்பிட்டதில்லை.பள்ளி முடிந்து வீட்டுக்கு போன உடன் பைகளை எடுத்துக்கொண்டு டியூஷன் சென்று விடுவோம்.மாலை நேரத்தில் எதுவும் வீட்டில் கொடுத்தது இல்லை.பள்ளியில் கொடுக்கும் கொண்டக்கடலை எனக்கு மிகவும் பிடித்தமானது.மாலையில் பள்ளி விடும்  வேளையில் நான் சாப்பிடும் சத்தான உணவுகள் எனக்கு நல்ல சக்தியை கொடுக்கிறது.தொடர்ந்து ஆர்வமுடன் பயிற்சிகளில் பங்குபெற நல்ல மனநிலை உருவாகிறது.பசியும் சரியாகிவிடுகிறது.என்று கூறினார்.


மாணவி சிரேகா : எங்கள் பள்ளி ஆசிரியைகள் எங்களுக்கு மாலை நேரத்தில்  சத்தான உணவு வகைகளை பாசத்துடன் பரிமாறும்போது எங்களுக்கு சந்தோசமாக உள்ளது.எங்கள் வீட்டில் சுற்றி உள்ளவர்களிடமும் ,எங்கள் வீட்டின் அக்கம்பக்கம் உள்ளவர்களிடமும் இதனை சொல்லும்போது ஆச்சரியத்துடன்  நீ சொல்வது உண்மையா?  என்று கேட்கின்றனர். இப்படி எல்லாம் தருவது பெரிய விஷயம்.இதனை நன்றாக பயன்படுத்தி கொண்டு நீங்கள் நல்ல பிள்ளைகளாக படியுங்கள் என்று சொன்னார்கள்.உணவும் சாப்பிடும் அளவிற்கு சூப்பராக உள்ளது .எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறினார்.

No comments:

Post a Comment