Tuesday, 16 January 2024

 அமெரிக்கா , சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து ஒரே வீட்டில் 27 குடும்பத்தினர் கூடி 75 இற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த ஆச்சிரியமான  நிகழ்வு 

















நெற்குப்பை - ஜனவரி - சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் ஒரே வீட்டில்  27 குடும்பங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஏழாவது  ஆண்டாக ஒரே வீட்டில் கூடி பொங்கல் வைத்த நிகழ்வு அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அமைந்துள்ளது.

                               கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக  நெற்குப்பை சார்ந்த சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் எங்களை கூட்டுக்குடும்ப பொங்கல் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

                                  அப்பொழுது நாங்கள் சென்ற பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கணவன், மனைவியாக இரண்டு பேர் கூடி ஓரிடத்தில் இருப்பதே இன்று   மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

                          அதேபோல்தான் தந்தை, மகன், தந்தை, மகள், தாய் ,மகள் என்று அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக கூடுவது என்பது மிகப்பெரிய விஷயமாக இன்று இருக்கின்றது.

                               இந்த நிலையில் 27 குடும்பங்களைச் சார்ந்த 75 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 7 ஆண்டுகளாக மூன்று நாள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளக் கூடிய கூட்டு பொங்கல்  விழா மிகப் பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

                                  இந்த கூட்டு பொங்கல் விழாவில் அனைத்து பெண்களும், அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியான கலரில் உள்ள சேலை, சட்டை அணிந்து பொங்கல் வைத்த நிகழ்வு இன்னும் ஒரு ஆச்சரியம்.

                                 பொங்கல் வைத்ததுடன் பாரம்பரிய விளையாட்டுக்கள், புதுவிதமான விளையாட்டுக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றாக இந்த விளையாட்டுகளில் பங்கேற்க வைத்தனர்.

                               இளையவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் இந்த நிகழ்வில் முழுவதுமாக பங்கேற்க வைத்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம்.

                                    கையெழுத்து போட்டி, தம்போல போட்டி, குடும்ப உறுப்பினர்கள் கூடி விளையாடும் போட்டி, பட்டிமன்றம் என மூன்று நாட்களுமே வீடே களைகட்டியது.

                                   பொதுவாக இன்று நகரத்தார் வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் பராமரிப்பு இல்லாமல் புறாக்கள் இன்னும் பல்வேறு விதமான எலி, பூனைகள்  கூடியிருக்கும் வீடுகளாக மாறி வருகிறது. 

                            ஆனால் அந்த சூழ்நிலையை மாற்றி மூன்று மாதத்திற்கு முன்பாகவே முயற்சி எடுத்து பல்வேறு விதமான திட்டங்களை தீட்டி 75 இற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்னும் உறவில் உள்ள 100 பேரையும் ஒரு வீட்டில் , ஒரே இடத்தில்  சந்திக்கக்கூடிய வாய்ப்பு மிகப் பெரிய ஆச்சிரியமாகவே  பார்க்கப்படுகிறது. 

                                                     பாம்பே சேதுராமன் சாத்தப்பன் அவர்கள்தான் இதற்கான பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.  இந்த ஆண்டின் நிகழ்வு குறித்து அமைப்பாளர்  முத்து கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சேலை எடுத்து, அந்த சேலையை தறியில்  நெய்ய கொடுத்து செய்த பிறகு அதற்காக ஜாக்கெட்டும் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.

                                                சேலைகள்  தயாரானதுடன் அமெரிக்கா , சிங்கப்பூர், கோவை,மதுரை, திருச்சி என பல இடங்களிலும் உள்ள உறவினர்களுக்கு கூரியர் மூலம் சேலைகளை அனுப்பி விடுவோம்.

                                 ஆண்களுக்கும் ஒரே மாதிரியாக சட்டைகள் மீட்டர் அளவு கேட்டு  அதற்கான முயற்சிகளையும் எடுத்து பல்வேறு விதமான முயற்சிகளுக்குப் பிறகு இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

                                                         பொங்கல் விழாவுக்கு முன்பு முதல் நாள்  சேலைகளையும் , சட்டைகளையும் குடும்பத்தில் உள்ள  பெரியவர்களிடம்  கொடுத்து  ஆசீர்வாதம் வாங்கி பெற்றுக்கொள்வோம்.                                            

                                             போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வாங்கப்படுகிறது. இந்த பரிசுக்காக வாட்ஸ்அப் குழுவில் பல்வேறு விதமான உரையாடல்களை நடத்தி அர்த்தமுள்ள பரிசுகளாக அனைவருக்கும் வழங்குகிறோம் .

                                     மூன்று நாட்கள் நடப்பதற்கும் முன்கூட்டியே எங்கள் அண்ணன்கள், அண்ணிகள் , தம்பி ஆகிய அனைவரும் இணைந்து  நல்ல திட்டமிடல் செய்கிறோம். 

                            அனைவருக்கும் வேண்டிய உணவு வகைகளும் மூன்று நாட்களுக்கும் நாட்டரசன்கோட்டையில் இருந்து வந்து இருந்த சமையல் குழுவினர் சிறப்பான முறையில் சமைத்து கொடுத்ததாகவும் கூறினார்.

                                     சமையலுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஏற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டதாக கூறினார்.

                        என்னென்ன மாதிரியான விளையாட்டுக்களை விளையாடலாம் என்பது தொடர்பாகவும், பழமையான, புதுமையான அனைத்து விதமான விளையாட்டுக்களை விளையாடுவது தொடர்பாகவும், ஒரு மாதம் முன்பாகவே வாட்ஸப் குழுவின் மூலமாக உரையாடல்களை நடத்தி அதிலும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்கிறோம். என்று கூறினார்.

                                                 இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடும்பத்தின் மூத்தவர் சுந்தரம் செட்டி யார் முன்னிலையில் விழா நடந்தது. இவ் விழாவை நடத்த ஆண்டுதோறும் 2 இளைஞர்களை தேர்வு செய்கிரார்கள்.

                                 அந்த இருவர்தான்  தான் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.இந்த ஆண்டில் ராஜா, முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். 

                            எனக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது. என்னுடன் புதுக்கோட்டை அரசு கலை  கல்லூரியில் பணிபுரியும்  நண்பர் கருப்பையா அவர்கள் வந்து இருந்தார்.

                                             கருப்பையா அவர்கள் இந்நிகழ்வு குறித்து கூறும்போது, இந்த மூன்று நாள் பொங்கல் நிகழ்வில் இவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி  மகிழ்வது  அவர்களுக்கு பல மாதங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று என்னிடம் கூறினார்.

                                                 ஒருவர் இருவரே இன்று சொந்தத்தில் அளவளாவ இயலாத நிலையில், இத்தனை பேர் ஒரே இடத்தில் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

                                     இந்த நிகழ்வை ஆரம்பித்த சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும், தொடர்ந்து இதனை நடத்திவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

                         இந்த நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர்  சபாரத்தினம் அவர்களையும், அவர்களது மகன் சிங்கப்பூர் ஒளிபரப்பு துறையின் மூத்த  செய்தி ஆசிரியர் திரு.சபா முத்து  நடராஜன்  அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

                                                       சிங்கப்பூர் ஒளிபரப்பு துறையின் மூத்த  செய்தி ஆசிரியர் திரு.சபா முத்து  நடராஜன் அவர்கள்  மிகவும் அருமையான பல்வேறு தகவல்களை    எங்களுக்கு எடுத்துக்கூறினார். புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். அவர்களுடைய சந்திப்பும் இந்த பயணத்தின் மூலமாக எங்களுக்கு கிடைத்தது . அனைத்துக்கும் பாம்பே சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் பல.

நன்றி கலந்த அன்புடன்


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

படவிளக்கம்:  அமெரிக்கா , சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து ஒரே வீட்டில் நெற்குப்பையில் 27 குடும்பத்தினர் கூடி 75ற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=VoU95D5O8g8






No comments:

Post a Comment