Sunday 16 December 2018

திடீர் விபத்தும்,பொதுமக்களின் உதவியும்










குறுக்கே புகுந்த மாடும்,ரத்தகாயமும் :

                                            நண்பர்களே கடந்த வாரம் எனது இரு சக்கர வாகனத்தில் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி இரவு 8 மணி அளவில் செல்லும்போது ( எனது பின்புறமாக தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி இயற்பியல் துறை தலைவர் திரு.விஜயன் அவர்கள் அமர்ந்து இருந்தார் ) அமராவதி புதூர் முன்பு ரோட்டில் தீடிரென மாடு குறுக்கே வந்து விட்டது.நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் ,தவறி கீழே விழுந்து சில நொடிகள் எனக்கு நினைவு மறந்துவிட்டது.எப்போதுமே ஹெல்மட் அணிந்துதான் நீண்ட தூரம் பயணத்தில் செல்வேன்.நிகழ்வு நடந்த அன்றும் ஹெல்மட் அணிந்து இருந்தேன்.அதனால்தான் அன்று முகத்தில்,தலையில் எந்த அடியும் இல்லை.ஆனால் இரண்டு கைகளிலும் ரத்தம் வடியும் அளவிற்கு நல்ல காயம்.

பொதுமக்களின் உதவி :
                                     நிகழ்வு நடந்த சில நிமிடங்களில் அருகே உள்ள வீடுகளில் இருந்து பெண்களும்,ஆண்களும் வந்து உதவி செய்தனர்.வண்டியை ரோட்டில் இருந்து ஓரமாக எடுத்து வந்து கொடுத்தனர்.பிறகு குடிக்க தண்ணீர் குடுத்து ,பெண்களே ஆட்டோ அழைத்து எங்களை காரைக்குடி வர உதவி செய்தனர்.ஆட்டோவில் ஏறிய சில நிமிடங்களில் எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது.ஆனால் நல்ல வேளையாக மருத்துவமனை வந்து சேரும் வரை மயக்கம் எதுவும் வரவில்லை.பிறகு மருத்துவமனையில் இருந்து நன்றாக கட்டு கட்டி சில நாள்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு தற்போது பணியில் சேர்ந்து உள்ளேன்.ஆனாலும் இன்னுமும் புண்கள் ஆறவில்லை.நிகழ்வு நடந்த நேரத்தில் சரியான முறையில் உதவி செய்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.என்னுடன் வந்த பேராசிரியர் அவர்களுக்கு காலில் மட்டும் சிறு காயம்.

வலியால் வேதனை :
                         
                                            கைகள் இரண்டிலும் சிராய்ப்பு  காரணமாக ரணவேதனை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது.புண்கள் ஆறுவதற்கும் நீண்ட நாளாகும் என்று சொல்கிறார்கள்.விரைவில் குணமடைய ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊர்பகுதிகளில் மாடுகளை சாலைகளில் நிற்கவைக்காமல் இருக்க வேண்டுகோள் :
                                         
                                                                         அமராவதிபுதூர் சாலையில் நடுரோட்டில் வழிநெடுக மாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அதுவும் இரவு நேரத்தில் நடுரோட்டில் மாடுகள் நிற்பதால் பெரும்பாலான விபத்துக்கள் நடப்பதாக அங்குஇருந்த பொதுமக்கள் கூறினார்கள்.எனவே சாலைகளில் மாடுகள் நிற்பதை தவிர்க்க அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.இதன் மூலம் பெரும்பாலான விபத்துக்களை,உயிர் இழப்புகளை தவிர்க்க முடியும்.

அமராவதிபுதூர் ஊரினருகே சாலையில் விளக்குபோட வேண்டுகோள் :
                                               அமராவதி புதூர் பகுதியில் நான்கு ரோடு தாண்டியவுடன் ஊரின் இரு பகுதிகளிலும் சுத்தமாக விளக்கு இல்லை.ஊரிலுள்ள மக்கள் அனைவரும் பெரும்பாலும் பயணம் செய்ய பேருந்து ஏறும் இடத்தின் அருகிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சுத்தமாக விளக்கு இல்லை.இந்த சூழ்நிலையும் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட காரணமாகி விடுகிறது.இதனை தவிர்க்கும் பொருட்டு விளக்குகள்போட ஆவண செய்தால் நலமாக இருக்கும்.

உழைக்கும் வர்க்கத்திற்கு காலும்,கையும்தான் முக்கியம் :
                                                                         அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் தமிழ் துறை தலைவர் திரு.அழகப்பன் (வயது 83) அவர்கள் என்னை வந்து வீட்டில் பார்த்து விட்டு ,என்னிடம் பேசும்போது,உழைக்கும் வர்க்கத்திற்கு காலும்,கையும்தான் முக்கியம் ,எனவே அதனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உங்கள் குடும்பம்,பள்ளி,பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே இனி வரும்காலங்களில்  இரவு நேரம் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து விடுங்கள் என்று அன்பாக சொல்லி சென்றார்.உண்மைதான் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு எனது உடல் நலத்தையும்,பள்ளியின்  தொடர் செயல்பாடுகளையும்,பாதித்தது என்பது உண்மை.

நண்பர்களுக்கு நன்றி :
                                                 உடல்நலம் குன்றி இருந்தபோது எனக்கு பல ஆறுதல்களை சொல்லி உதவிய அனைத்து நண்பர்களுக்கும்,குடும்பத்திற்கும் ,பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றியை சொல்லி கொள்கிறேன். 

லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி .

No comments:

Post a Comment