Wednesday 9 January 2019

கோர்ட்டுக்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

தூக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு - நீதிபதி விளக்கம்

சினிமாவில் வருவது போல்  கண்கள் துணியால்  கட்டி பொம்மை எல்லாம் நீதிமன்றத்தில் இருக்காது- நீதியரசர் விளக்கம்

புத்தகம் வைத்து சத்தியம் வாங்க மாட்டோம் -மனசாட்சியோடு வாயால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் - நீதியரசர் மாணவர்களுக்கு விளக்கம்
 

தேவகோட்டை- தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவர்களை தேவகோட்டை  சார்பு நீதிமன்றங்களுக்கு களப்பயணமாக சென்றனர் .







                              பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் சார்பு நீதிமன்றங்களுக்கு களப்பயணமாக மாணவர்களை  அழைத்து சென்றனர்.தேவகோட்டை சார்பு நீதி மன்றங்களின் நீதியரசர் கிருபாகரன் மதுரம் மாணவர்களை அன்புடன் வரவேற்றார்.நீதிபதி நீதிமன்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.மாணவர்கள் சார்பு நீதிமன்றம்,குற்றவியல்,உரிமையையில் நீதிமன்றங்களை பார்வையிட்டனர்.சார்பு நீதிமன்றங்களின் சிரஸ்தாரர் பாலசுப்ரமணியன் மாணவர்களை  நீதிமன்றத்தின் அலுவலக செயல்பாடுகளை நேரில் அழைத்து சென்று எடுத்து கூறினார்.நிறைவாக மாணவர் சபரி நன்றி கூறினார்.தமிழகத்தில்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நீதிமன்றத்துக்கு களப்பயணம் சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.நீதிமன்றங்களை பார்வையிட்டது தங்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.நீதிபதி கிருபாகரன் மதுரம் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

பட விளக்கம் :தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவர்களை தேவகோட்டை  சார்பு நீதிமன்றங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர்  களப்பயணமாக அழைத்து சென்றனர்.தேவகோட்டை சார்பு நீதி மன்றங்களின் நீதியரசர் கிருபாகரன் மதுரம் மாணவர்களை அன்புடன் வரவேற்றார்.நீதிபதி நீதிமன்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.





 மேலும் விரிவாக :

நீதியரசரிடம் மாணவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தவை :

காயத்ரி : தூக்கு தண்டனை எந்த குற்றங்களுக்கு வழங்கப்படும் ?

நீதியரசரின் பதில் : தூக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு.கொடும் செயல் செய்தவர்களுக்கு மட்டுமே வழக்கு விசாரணையின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.

அய்யப்பன் : கடன்  வாங்கிய ஒருவர் பணம் கட்ட முடியவில்லை என்றால் என்ன செய்வார்கள் ?

பதில் : கடன் திருப்பி செலுத்த இயலாத சூழ்நிலையில் சட்டப்படி தண்டனை வழங்கப்படும் .

பாக்கியலட்சுமி : நீதிதேவதை கண்களை கட்டியது போல்சினிமா  படத்தில் வருமே ? அது போன்று இங்கும் இருக்குமா சார் ?

பதில் : அது சினிமாவில் மட்டுமே வரும்.இங்கு அப்படி எல்லாம் கிடையாது.

கீர்த்தியா : சினிமாவில் நீதிமன்றங்களில் புத்தகங்களை வைத்து சத்தியம் வாங்குவார்கள் .அது போன்று இங்கும் நடக்குமா சார் ?

பதில் :புத்தகம் வைத்து சத்தியம் வாங்க மாட்டோம் -மனசாட்சியோடு வாயால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் .சினிமாவில் வருவது போல் இங்கு நடக்காது என்று விளக்கி பேசினார்.

ஈஸ்வரன் : நீதிபதியாவதற்கு என்ன படிக்க வேண்டும்? 

பதில் : நீதிபதியவதற்கு முதலில் சட்டப்படிப்பு படிக்க வேண்டும்.பிறகு தேர்வுகள் எழுதி நீதிபதி பணிக்கு வரலாம்.ஒழுக்கமாக வேலை பார்க்க வேண்டும்.லஞ்சம் வாங்க கூடாது .நீதிபதி மிக சிறப்பான பணியாகும்.என்னுடைய அறைக்குள் யாரும் வர உரிமை இல்லை.மாணவர்களாகிய உங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கி உள்ளேன்.

கார்த்திகேயன் : நீதிபதி முன்பு இரண்டு பேர் உட்கார்ந்து இருப்பார்களே அவர்கள் யார் ?

பதில் : வலது பக்கம் இருப்பவர் நான் சொல்வதை தட்டச்சு செய்பவர்.இடது பக்கம் இருப்பவர் இன்று யார் வாதாட போகிறார்கள்? கேஸ் என்ன என்று சொல்வார்கள்.

நித்திய கல்யாணி : அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போனால் சீக்கிரம் வந்துவிடுவார்களா? அல்லது அனைவருக்கும் ஒரே சட்டம்தானா ?

பதில் : அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.அரசியல்வாதிகளுக்கு என்று தனியான சட்டம் இல்லை.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பல்வேறு தீர்ப்புகள் நிரூபித்து உள்ளன.

சிரேகா : என்கவுண்டர் செய்வதற்கு உத்தரவு யார் கொடுப்பார்கள் ?
 
 பதில் : சில வழக்குகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி உத்தரவுகள் பிறப்பிக்கபடும் .

                              இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நீதியரசர் பதில் அளித்தார்.

நீதிமன்றத்துக்கு சென்றது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது :

காயத்ரி :  இந்த நாள் எனக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாகும்.எங்கள் வீட்டில் சென்று கோர்ட் பற்றி தெரியுமா என்று கேட்டேன்.அவர்கள் தெரியாது என்று சொன்னார்கள்.நான் நாளை கோர்ட்டுக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.நீதிமன்றம்,வாதாடுவது என்று அனைத்தையும் நேரில் பார்த்தேன்.

அய்யப்பன் : எங்களின் பல்வேறு கேள்விகளுக்கு நீதிஅரசர் பதில் கூறினார்கள்.பாலசுப்ரமணியம் சார் எங்களுக்கு நீதிமன்றங்களின் அலுவலக செயல்பாடுகளை எடுத்து கூறினார்.எனது அப்பத்தாவிடம் சென்று கோர்ட்டுக்கு போக போகிறேன் என்று சொன்னேன்.அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.நீதிமன்றம்,நீதிபதி குறித்து அறிந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம்.

நித்தியகல்யாணி : நீதிமன்றம் பார்த்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.நீதிபதிகளின் முன்பு அனைவரும் தலை வணங்கி செல்கின்றனர்.நல்ல பதவி.பிற்காலத்தில் நானும் நீதிபதியாக வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பேசினார்கள்.

ஆசிரியை செல்வமீனாள் : நான் இதுவரை கோர்ட் பக்கம் கூட வந்தது கிடையாது.இதுவே முதல்முறை.எனக்கு தெரியாத பல விசயங்களை இன்று நான் தெரிந்து கொண்டேன்.நீதிபதியும்,கோர்ட் அலுவலக ஊழியர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக வரவேற்றார்கள்.எங்கள் மாணவர்கள் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர். 

No comments:

Post a Comment