Wednesday 3 February 2021

 சொல்லுங்க ! நல்லாஇருக்கீங்களா ? இந்த வெண்கல குரலை இனி எப்போது கேட்பேன்?

 

சர்வதேச பயிற்சியாளர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

 


                        சிவகங்கை மாவட்டம் மதகு பட்டியை சேர்ந்தவர் திரு. ராமநாதன். அரசு பொறியியல் கல்லூரியில் ஜியாலஜி துறை தலைவராக பணியாற்றி, தேசிய, சர்வதேச ,பயிற்சியாளராக புலமை பெற்று பல நிறுவனங்களுக்கும், பல ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கும் வாழ்வியல் பயிற்சியை வழங்கியவர் அன்னார்  அவர்கள் கடந்த வாரம் இறந்துவிட்டார்கள் என அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். எங்கள் பள்ளிக்கும் அன்னார்  அவர்கள் ஒருமுறை வருகை தந்து மாணவர்களுக்கு கூட்டுமுயற்சி தொடர்பான பயிற்சி வழங்கினார்கள்.  அதேநேரம் ஆசிரியர்களுக்கும் கூட்டுமுயற்சி ,வேலையை மனப்பூர்வமாக செய்வதின்  மூலம் நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வது தொடர்பாகவும், நிதி நிலையும் மேம்பாடு தொடர்பாகவும், பங்குச்சந்தை, தங்கம் ,இடம் வாங்குதல், ரொக்க கையிருப்பு எனும் பகுதிகளிலும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து ஆளுமை பயிற்சி வழங்கினார்கள், அண்ணார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, 

திரு.ராமநாதன் அவருடனான எனது நட்பு எப்படி ஏற்பட்டது? 

                              15 ஆண்டுகளுக்கு முன்பாக ஆளுமை பயிற்சி பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் பணியாற்றிய பள்ளியில் ஆளுமை பயிற்சி அளிப்பதற்காக திரு.சோம . வள்ளியப்பன் அவர்களை அழைத்து வந்தோம். சோம. வள்ளியப்பன் அவர்களிடம் இந்த பயிற்சியினை இன்னும் தெளிவாக பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டபொழுது திரு. ராமநாதன் அவர்களின் முகவரியை கொடுத்து என்னை தொடர்பு கொள்ள சொன்னார்கள். அண்ணார் அவர்களுக்கு அன்றைய தினத்தில் ஒரு போஸ்ட் கார்ட்  எனது முகவரியை கொடுத்து இருந்தேன். அவர்கள் உடனடியாக என்னை  கடிதமும் அனுப்பி ஜே  .சி.யில் இணைவதற்கு ஏற்பாடு செய்தார்கள். காரைக்குடி ஜேசிஐ மூலமாக எனது நட்பு அவருடன் ஏற்பட்டது. அதன் மூலமாக மண்டல பயிற்சியாளராக தேர்வு பெற்று பல்வேறு இடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் இன்றைய நிலையில் என்னுடைய பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கும் , அண்ணார் அவர்களின் ஆலோசனைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எப்பொழுது நாம் போன் செய்தாலும் உடனடியாக எடுத்து அதற்கான தகவல்களை என்னிடம் பரிமாறிக் கொள்வார்கள். நேர்மறையாக பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறி, எவ்வாறு செயல்படுத்துவது என தெளிவான ஆலோசனைகளை வழங்குவார்கள். தொலைபேசி பேசும்போது  மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசுவார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களுடைய பேச்சு மிகவும் மகிழ்வாக நமக்கு இருக்கும். ஊக்கப்படுத்துவதாக இருக்கும். முக்கியமான சில கட்டங்களில் என்னுடைய வாழ்க்கையில் அவர்களது ஆலோசனையின் மறக்க முடியாதது. சமீபத்தில் பொங்கல் அன்று அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் அழைத்து இருந்தேன். மூன்று நாட்கள் கழித்து எனக்கு தொடர்பு கொண்டார்கள். தான்  சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,  தனக்கு அனைத்தும் சரியாகி விட்டது என்று கூறினார்கள் .   மருத்துவர் தன்னை வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டார் என்றும்,ஆனாலும் நான் இரண்டு நாட்கள் இருந்து ஓய்வு எடுத்த பிறகு சொல்கிறேன் என்று கூறி இருக்கின்றேன்  என்று மகிழ்ச்சியுடன் பேசினார்கள். பொங்கலன்று நீங்கள் அழைத்தீர்கள். அப்பொழுது நான் ஆஸ்பத்திரியில் இருந்ததால் என்னால் எடுத்துப் பேச முடியவில்லை. தற்போது தான் உங்களைக் குறித்து வைத்திருந்தேன். தற்போது பேசுகிறேன்  என்று கூறினார்கள். ஆனால் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வானது  24ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் அன்னார் அவர்களை தொடர்புகொள்ள நான்  போன் மூலம் முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்னவோ எடுக்கவில்லை. நாளை என்னிடம் பேசுவார்கள் என்று இருந்தேன் ஆனால் மறுநாள் காரைக்குடி ஜேசிஐ ன்  முன்னாள் தலைவர் முருகேசன் அவர்கள் எனக்கு போன் செய்து அன்னார்  அவர்கள் தவறி விட்டதாக கூறினார்கள் . எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மிகச் சிறந்த ஆளுமை பயிற்சியாளர் , சர்வதேச பயிற்சியாளர்,  எனக்கு பல நேரங்களில் ஆலோசனை வழங்கிய அன்னார் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 வருத்தங்களுடன்

லெ . சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

 https://kalviyeselvam.blogspot.com/2015/11/blog-post_3.html#more

 

 

 

No comments:

Post a Comment