Saturday 3 October 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

        ஹிந்தி, ஜப்பான் மொழி என பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்தவரும் , ஆளுமை பயிற்சியாளருமான விஸ்வநாதன் தம்பியண்ணா  அவர்களுடனான அனுபவங்கள் 

                                            ஆளுமை பயிற்சியாளர் விஸ்வநாதன் தம்பியண்ணா அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு பள்ளி தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள்

வாய்ப்பிற்கு நன்றி 

சீரான தொடர் முயற்சி 

சீக்கிரமே சிகரத்தின் உச்சி 

இந்த வரிகளுக்கு இந்தப் பள்ளி 

ஒரு முன் உதாரணம் 

இங்கு வந்து சென்ற உலகளாவிய 

ஆளுமைகளை அறிந்துகொண்டேன் 

முறையான பணிகளை செய்வதும் 

அதை ஆவணப்படுத்துவதும் அரிய கலை.

 அதில் நானும் ஒருவனாக  வந்து சென்றது மகிழ்ச்சி.

 நன்றி.

 வணக்கம்.

 ஆ. விசுவநாதன் 

ஆளுமை பயிற்சியாளர் 

வைகை புத்தக நிலையம் 

மதுரை.

 






மதுரை நிகில் அறக்கட்டளைக்கு நன்றி :

                         ஆளுமை பயிற்சியாளர் விஸ்வநாதன் தம்பியண்ணா அவர்களுடனான பழக்கம் எனக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. நிகில் அறக்கட்டளையின் நிறுவனர் சோம. நாகலிங்கம் அவர்களின்  மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி நிகழ்வுகளில் விஸ்வநாதன் தம்பி அண்ணா அவர்கள் முக்கிய இடம் வகித்து பல ஊர்களுக்கும் சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்கள். அந்தப் பயிற்சி பட்டறையில் நானும் ஒரு பயிற்சியாளராக பயிற்சி அளிக்க சென்றபோது விஸ்வநாதன் தம்பி அண்ணா அவர்களுடனான பழக்கம் ஏற்பட்டது. 

 SSA பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கு ஆளுமை பயிற்சி:

              அதன் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பத்தூர் வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான இரண்டு மணி நேரப் பயிற்சியில் விஸ்வநாதன் தம்பி அண்ணா அவர்கள் ஆசிரியர்களுக்கு ஆளுமை பயிற்சி அளித்தார்கள். அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கட்டுண்டு இருந்தனர். அன்னாரின் பயிற்சியை பலரும் பாராட்டி பேசினார்கள். பயிற்சி முடிந்து சில நாட்கள் கழித்தும் ஆசிரியர்கள் நேரில் சந்திக்கும் போது என்னிடம் பாராட்டு தெரிவித்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து அவர்களுடனான அனுபவங்கள் எனக்கு பழக்கம் நட்பு தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. 

 

பள்ளி ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் ஆளுமை பயிற்சி :

                                  2016ஆம் ஆண்டு எங்கள் பள்ளிக்கு ஒரு முறை வந்து மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தார்கள். பல்வேறு புதிய தகவல்களை ஆளுமை பயிற்சியின் மூலமாக கற்றுக்கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவங்கள். ஆசிரியர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்கள். வாழ்வியல் தொடர்பான பல்வேறு தகவல்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.

 உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல்  இருக்கும் 
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
 வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு

 

 ஆசிரியர்கள் அனைவரும் எப்போதும் எளிதாக நல்ல உடல் நலத்துடனும் , மன நலத்துடனும்  இருக்கலாம்.நீங்கள் முதலில் மாணவர்களுக்கு புரிவது மாதிரி சொல்லி கொடுங்கள்.நாம் பிறந்தது முதல் கேட்க மட்டுமே பழகி உள்ளோம்.வார்த்தைகளால் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல் வார்த்தைகளால் சொல்வதை தாண்டி   கண்ணால் ,மூளையால் ,இதயத்தால் புரிந்துகொண்டால் சொல்வது நன்றாக புரியும்.நாம் சொல்வது விரிவாக இருந்தால் கேட்பவர்  மனம் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அடுத்தவர் சொல்லும் தகவல் நமக்கு கேட்க கூடாது என்று தானாகவே கத்தியை காது  எடுத்துகொள்ளும்.

                                 மூச்சுதான் நமது வாழ்கையை நிர்ணயக்கிறது.பிடிக்காத வேலையை செய்தால் மூச்சு ஈரமாக இருக்கும். உடல் பாதுகாப்பாக இருக்கிறது.உயிர் விகாசமாக இருந்தால் தான் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.நாம் அனைவரும் நமது திறமையை போல் 14 மடங்கு அதிகமாக உழைக்க கூடிய ஆற்றலை பெற்றவர்கள். அவ்வாறு நாம் உழைக்கவில்லை என்றால் நம் உடல் விடும்.அதனால் பல்வேறு நோய்கள் நமக்கு வந்துவிடும்.எனவே நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
                         உடல் உறுப்புகளுக்கு தேவையான 5 வகை சுவைகள்


                                              நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு சுவையை விரும்பும்.மொத்தம் 5 வகையான சுவைகள் நமது உடம்பு நன்றாக இயங்குவதற்கு தேவைப்படுகிறது. இவைதான் ஐந்து பூதங்கள் என்று அழைக்கபடுபவை ஆகும்.ஆசிரியர்களுக்கு நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும். நுரையீரல் , பெருங்குடல்,தோல் ஆகிய உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட காரம் சாப்பிட வேண்டும். காது,பல்,நகம்,சிறுநீரகம் , எலும்பு ஆகிய உடல் உறுப்புகள் உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.உப்பு என்றால் நாம் சாப்பிடும் உப்பு கிடையாது.இளநீர் போன்ற பொருள் சாப்பிடும்போது சுவை கொடுக்கும் உப்பு ஆகும்.கல்லீரல்,கண்,பித்தப்பை போன்ற உடல் உறுப்புகள் ஆற்றலுடன் செயல்பட புளிப்பு சுவை சாப்பிட வேண்டும்.இதயம்,மூளை ,நாக்கு,நமது ஈகோ நன்றாக செயல்பட கசப்பு,துவர்ப்பு நன்றாக சாப்பிட வேண்டும்.மண்ணீரல்,இரைப்பை ,வாய் போன்ற உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட இனிப்பு சுவை சாப்பிட வேண்டும்.இவ்வாறு 5 சுவைகளையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டாலே எந்த பாதிப்பும் வராது .இந்த 5 சுவைகள் காரம்,உப்பு,புளிப்பு,நெருப்பு,இனிப்பு ஆகிய ஐந்தும் காற்று,நீர்,ஆகாயம்,நெருப்பு,மண் ஆகிய 5 பூதங்களை  குறிக்கும்.

                                                                    ஆசிரியர்கள் அனைவரும் விதைகள் போன்றவர்கள்.விதைகளுக்குள் பல மரங்கள் இருப்பதை  போல் ஆசிரியர்களும் பல மாணவர்களை வளர்க்கிறார்கள்.ஆசிரியர்களால் தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும்.எனவே நீங்கள் அனைவரும் உச்சப் பச்ச திறனை வெளிப்படுத்தி செழுமைப்படுதினால் உங்களின் வாழ்க்கை உயரத்தை கூட்டும்.உடலை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு சுவாச பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்.

ஹிந்தி மொழி பயிற்சி :

                           2017 ஆம் ஆண்டு ஹிந்தி பயிற்சிக்காக எங்கள் பள்ளிக்கு வந்து பல்வேறு பிரிவுகளில் இருக்கும் அலுவலர்களுக்கும், எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஹிந்தி பயிற்சி அளித்தார்கள்.

 மொழி கற்பிக்கும் பயிற்சியாளர் விசுவநாதன் தம்பியண்ணா ஹிந்தி மொழி எளிதாக கற்பது எப்படி என்பது குறித்து பேசும்போது : ஒரு மொழியில் பேசுவது என்பது கேள்வி கேட்பது மற்றும் பதில் சொல்வதுதான்.பொதுவாக எந்த மொழியிலும் மொழியில் என்ன  (கியா),ஏன் (க்யோன்) ,எப்போது (கப் ),எங்கே (கஹாங்) , எத்துணை (கித்னா),எப்படி (கைஸா),யார் (கௌன்) ஆகிய ஏழு கேள்விகள் உள்ளன.ஏற்கனவே நடந்தது,இனி நடப்பது என இரண்டு காலங்கள் உள்ளன.இத்துடன் ஆனால் ,மேலும்,ஆக போன்ற சில இணைப்பு சொற்களை பயன்படுத்தி எளிதாக யாரும் பேச கற்றுக் கொள்ளலாம்.ஏழு கேள்விகள்,இரண்டு காலங்கள்,சில இணைப்பு சொற்களை பயன்படுத்த கற்றுக்கொண்டால் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளையும் எளிதாக கற்று கொள்ளலாம் இவ்வாறு பேசினார்.

                  அதன்பிறகு தொடர்ந்து எனக்கு அவருடனான நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒருமுறை பள்ளிக்கு வருவதாக பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தார்கள். 

 ஈடு செய்ய முடியாத இழப்பு :

              கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணார் அவர்கள் இறந்து  விட்டதாக அறிந்தேன். வார்த்தைகளால் கூற முடியாத ஒரு வருத்தம்.இதனை எழுதும்போது  கண்ணீர் துளிர்க்கிறது. 

 நேர்மறை சிந்தனையாளர் :

              பலமுறை பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக அண்ணார் அவரிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் . விரைவில் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவீர்கள் என்று தெரிவிப்பார்கள். அண்ணார் அவர்கள் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதனை நேர்மறை சிந்தனையோடு அணுகும் அவரது எண்ணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு சிறு புத்தகங்களாக ஆளுமை தொடர்பாக பல்வேறு புத்தகங்களை வைகை புத்தக நிலையம் மூலமாக வெளியிட்டுள்ளார்கள். ஹிந்தி, ஜப்பான் மொழி, சைனீஸ் என பல்வேறு மொழிகளையும் கற்றுக் கொடுக்கும் ஆளுமைமிக்க பயிற்சியாளராக திகழ்ந்தார்கள். 

தொழிலாளர் பலருக்கும் பயிற்சி அளித்தவர் :

                கோவை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தங்கியிருந்து பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கும் ஹிந்தி மொழியை கற்றுக் கொடுத்தார்கள். என்னிடமும்  பல்வேறு தகவல்களை பேசியுள்ளார்கள். சமீபத்தில்கூட பயிற்சியாளர் தயானந்த் அவர்களிடம் பேசும் பொழுது, எனது மகனுக்கு ஜப்பான் மொழி கற்றுக் கொடுத்து பல்வேறு விதமான ஆளுமைகளையும் சொல்லிக் கொடுத்தார். அவர்களை மறக்க இயலவில்லை என்று வருத்தத்துடன் பேசினார்கள். 

குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுபவங்கள் :

             அண்ணார் அவர்களின் இழப்பு அவர்களது குடும்பத்தாருக்கும், அவருடைய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை  ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை. 

பழகுவதற்கு எளியவர் - நன்றிகள் பல :

                           ஆளுமைகள் உடனான அனுபவங்களின் மூலமாக எங்கள் பள்ளிக்கு தேடி வந்து பயிற்சி அளித்து பள்ளியை பாராட்டி சென்ற அன்னாருக்கு நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.இயல்பானவர்.ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் பல.

லெ . சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,

தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

8056240653 



ஹிந்தி, ஜப்பான் மொழி என பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்தவரும் , ஆளுமை பயிற்சியாளருமான விஸ்வநாதன் தம்பியண்ணா    அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன்,ஆசிரியர்களுடன்  கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2016/02/14.html#more

 

 https://kalviyeselvam.blogspot.com/2017/10/blog-post_4.html#more

 

 

 

 

 

 

 

1 comment:

  1. நன்றி ! தங்களது நன்றியறிதலுக்கு நன்றி !
    ஈடு செய்ய முடியாத இழப்பு அவர் பழகிய ஒவ்வொருவருக்கும்!

    தொடர்ந்து பயணிப்போம் !

    ReplyDelete