Saturday 18 April 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்களுடன் பழகிய அனுபவம் 







                              நண்பர்களே சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு நூறுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் கடந்த சில ஆண்டுகளில் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றுள்ளனர் .அவர்களுடனான எனது அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

முதலில் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை சந்தித்த நிகழ்வு :

                       முதலாவதாக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்த அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவிற்கு வருவதாக பத்திரிகையில் பார்த்து அறிந்து கொண்டேன். பிறகு காரைக்குடியில் அப்போது இருந்த புத்தக விற்பனையாளர் திரு நாராயணன் அவர்கள் மூலமாக (முன்பே அவர்கள் எனக்கு அறிமுகம்) அவரது நண்பர் டெல்லியில்  பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் திரு முத்துக்குமார் அவர்களின் உதவியுடனும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை  இரண்டு நாட்களுக்கு முன்பாக தொடர்பு கொண்டு எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொண்டேன் .அவர்களும் நீங்கள் நிகழ்வு நடக்கும் அன்று காலை ரயில் நிலையத்திற்கு காரைக்குடிக்கு வந்துவிடுங்கள் .அங்கிருந்து நான் உங்களை சந்திக்கின்றேன். நேரில் பார்த்தது கிடையாது. உங்களை சந்தித்த பிறகு உங்கள் பள்ளிக்கு மாலையில் வருகிறேன் என்று கூறியிருந்தார். நானும் அன்று காலையில் சென்னையிலிருந்து வந்த டிரெயினில் இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் காரைக்குடியில் அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தித்தேன். காரைக்குடியில் அவர் தங்கியிருந்த அழகப்பா பல்கலைக்கழக விடுதியில் அவருடைய அறைக்கு என்னை அழைத்திருந்தார்..  நானும் அங்கே சென்று அவரிடம் மீண்டும் பேசிவிட்டு மாலை  பள்ளிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார். 

சரியான நேரத்தில் வருகை தந்த இறையன்பு ஐஏஎஸ்:


                    மாலை சரியாக  நான்கு மணி என்று சொன்ன நேரத்திற்கு சரியான நேரத்திற்கு வருகை தந்தார் .வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பேசுகையில் , அரசுப் பள்ளியில் படித்தால்தான் மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம் என்று மிகவும் அன்பாகப் பேசினார் .மாணவர்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு இயல்பாக மிகவும் அன்பாக பதில்களை கூறினார். தலைமையாசிரியர்அறைக்கு  அவரை அழைத்து வந்தபோது , தலைமையாசிரியர் இருக்கையில் தலைமையாசிரியர் தான் அமர வேண்டும் ,நான் உங்கள் எதிரில் அமர்ந்து கொள்கிறேன் என்று அன்பாக கூறி அது உங்களுடைய சீட்டு நீங்கள் அமருங்கள்  என்று கூறினார் .உண்மையில் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அது . மேலும் அவர்களிடம் பேசும் போது மிகவும் இயல்பாக சில விஷயங்களை எடுத்துக் கூறினார் . 

  ஐஏஎஸ்யை மிக அருகில் சந்தித்த நடுநிலைப் பள்ளி மாணவர்கள் :


                  மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் மாணவர்கள் முன்பு பேசுகையில் , நானும் அரசு பள்ளியில் படித்தேன் . உங்களைப் போன்று இருந்தேன் என்று கூறும்போது மாணவர்களுக்கும் அதுபோன்று ஆகவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக ஏற்படும் என்பது உண்மை.தேவகோட்டை புத்தக பதிப்பாளர் என்னை தேவகோட்டைக்கு  கம்பி கட்டி அழைத்து வந்தனர்.உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செலவு இல்லாமல் அந்த கம்பியில் துணி காய போட்டு விட்டார்.அதாவது , உங்களுடன் என்னை கலந்துரையாட அழைத்து வந்து விட்டார் என்று நகைச்சுவையுடன் கூறினார்.பொதுவாக கலெக்டர் போன்ற மிகப்பெரிய பணியில் இருப்பவர்களை   பல மணி நேரம் காத்திருந்து தான் சந்திக்க இயலும்.அதுபோன்ற சூழ்நிலையில் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் மிக இயல்பாக எங்கள் பள்ளிக்கு வந்து எங்கள் மாணவரிடம் கலந்துரையாடி எங்களிடம் மிகவும் அன்பாக பேசி சென்றார்கள் . நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பொதுவான பாராட்டும் நிகழ்வு எல்லாம் வேண்டாம்.நேரடியாக மாணவர்களிடம் பேசி விடுகிறேன் என்று கூறினார். 

தனது கையால் அழகு கையெழுத்தில் கடிதம் அனுப்பி அசத்திய இறையன்பு ஐஏஎஸ்:


                   அவர்கள் சென்ற பிறகும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன். பலமுறை கடிதங்கள் எழுதி அதற்கு   அவருடைய கைப்பட  முகவரி உட்பட கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அது மிகப்பெரிய விஷயம். பொதுவாக மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் தட்டச்சு செய்து அனுப்புவார்கள்.ஆனால் அவர்களிடம் பிடித்த விஷயம் ,அன்னாரது கைப்பட அழகு தமிழில் கடிதம் எழுதி உள்ளது பாராட்டக்குறியது.ஆளுமைகளுடன் அனுபவத்தில் முதலாவதாக சந்தித்த  இறையன்பு ஐஏஎஸ் அவர்களை வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு .அதுவும் நடுநிலைப்  பள்ளி மாணவர்களிடம் அவர் அன்பாக கலந்துரையாடுவது மிகப்பெரிய வரப்பிரசாதமாக என்னுள் தோன்றுகிறது . 

தமிழக அரசில் செயலர் பதவியில் உள்ளவர் எங்கள் பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சி :



                              பழகுவதற்கு மிகவும் எளிமையாக இருந்தார்.   பல நண்பர்கள் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் . அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கின்றோம். அவருடைய எழுத்துக்களை நாங்கள் மிகவும் நேசித்து இருக்கின்றோம் .அவர் உங்கள் பள்ளிக்கு வந்து உங்கள் மாணவரிடம் பேசியது மிகப் பெரிய விஷயம் என்று என்னிடம் கூறினார்கள். அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் அன்னாரை சந்தித்து பேசியது ,அருகில் நின்று கேள்விகள் கேட்டது பெருமையாக இருந்தது .அவருடைய நட்பு கிடைத்தது மிகப்பெரிய அளவில் எங்களுக்கு உதவியாக இருந்தது. 


எப்படி இறையன்பு ஐஏஎஸ் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினோம் ? சுவாரசியமான தகவல் :


             இறையன்பு ஐஏஎஸ் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது மிகப்பெரிய  விஷயமாகவே இருந்தது. ஏனென்றால் அவரது அலைபேசி எண் கிடைக்கவில்லை. நண்பர் திரு.நாராயணன் (தற்போது அவர் உயிருடன் இல்லை)  அவர் மூலமாக திரு. முத்துக்குமார் அவர்கள் பலமுறை தொடர்பு கொண்டேன் .அப்பொழுது அவர்கள் டெல்லியில் பணியாற்றினார்கள். அவர்களும் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் எண்ணை தொடர்பு கொள்ள மீண்டும் மீண்டும்  முயற்சி  எடுத்தார்கள் . இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் திரு.முத்துக்குமார் அவர்களின் பள்ளி கால நண்பர் என்று என்னிடம் தெரிவித்திருந்தார் .மிக மிக நீண்ட நாட்களுக்கு முன்பு தான் இறையன்பு ஐஏஎஸ்அவர்களுடன் பேசியதாகவும், தற்போது சில வருடங்களாக தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்கள்.என்னுடைய பழைய  நண்பர்களை தொடர்பு கொண்டு எப்படியும் உங்களுக்கு தொடர்பு  பெற்று தருகிறேன் என்று நம்பிக்கை கூறினார் .பிறகு பல  முயற்சிகள் எடுத்து அவருடைய தொலைபேசி லேண்ட்லைன் வழியாகச் சென்று இறையன்பு ஐஏஎஸ் அவர்களை தொடர்பு கொண்டு அவரிடம் பேசி எனக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நானும் தொலைபேசியில் பேசும் பொழுது மிகவும் அன்பாக அவருடைய அசிஸ்டன்ட் செகரட்டரி அவர்கள் பேசினார்கள். மீண்டும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் எனக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது .அவரும் என்னுடன் அன்புடன் பேசினார் .பிறகு அவருடன் தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்துவதும், பேசுவது மிகவும் இயல்பாக இருந்தது. பெரும் முயற்சிக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய ஆளுமையை நடுநிலைப்பள்ளி அளவில் இருக்கக்கூடிய மாணவர்களுடன் கலந்துரையாட செய்தது என்பது மிகப் பெரிய விஷயமாகவே என்னுள் அமைந்திருந்தது .

நன்றிக்குறியவர்கள்  :
                                      காரைக்குடி திரு.நாராயணன் ( லேட் ) அவர்களும் , திரு.முத்துக்குமார் ( கோவையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வருகிறார் ) அவர்களுக்கும் நன்றிகள் பல.  நீண்ட காலத்துக்கு பின்பு தற்பொழுது இந்த விஷயங்களை வார்த்தையால் சொல்லும்போது மிக எளி.மையாக இருந்திருக்கின்றது. ஆனால் அந்த நேரத்தில் நாம் அவரை தொடர்புகொண்டு முயற்சி செய்து அவர்கள் பள்ளிக்குவந்து மாணவர்கள் பேசி சென்றது என்பது மிகப்பெரிய ஒரு விஷயமாகவே என்னுள் இருக்கின்றது.வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும்,எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய எங்கள் பள்ளி செயலர்  திரு.அரு .சோமசுந்தரம் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி.

எங்கள் பள்ளிக்கு இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்ற பிறகு பள்ளியை பாராட்டி அனுப்பிய கடிதங்களும், பள்ளி பார்வையாளர் பதிவேட்டில் பள்ளியை பாராட்டி எழுதிய தகவல்களும் :

பள்ளி பதிவேட்டில் அழகு கையெழுத்தில் அன்னாரின் பாராட்டு : 

 இப்பள்ளியில் 
இன்று மாணவர்களுடன் நடந்த உரையாடல் 
மகிழ்ச்சிக்குரியது .
இம்மாணவர்களிடம் காணப்படும் வீரியம் 
போற்றத்தக்கது.
 பல அறிவு வல்லுநர்கள் இங்கிருந்து 
உருவாக நாற்றங்காலாயத்   திகழ வாழ்த்துகள்

வெ . இறையன்பு 

என எழுதி உள்ளார்கள்.



பள்ளிக்கு அனுப்பி உள்ள  கடிதத்தில் :

அன்புள்ள திரு.சொக்கலிங்கம் ,
உங்கள் கடிதம் கிடைத்தது.

 மாணவர்களை மாணிக்கமாக மாற்ற நீங்கள் எடுக்கும் 
முயற்சிகள் மகத்தானவை.
 உழைப்பும், உண்மையும் உரிமையும் வைரமாக்கும்;
 கல்லையும் கல்கண்டு ஆக்கும்.
 இதற்கு உதாரணமாக நீங்கள் செயல்படுவது பாராட்டத் தகுந்தது .
என்னுடைய வாழ்த்துகள் 
அன்புடன்,
 வெ . இறையன்பு .

பள்ளிக்கு அனுப்பி உள்ள மற்றொரு  கடிதத்தில் :
 
அன்புடையீர்,
வணக்கம் .
11.11.2013 நாளிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது.
மிகவும் மகிழ்ந்தேன்.

 பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் பயன்பெற வேண்டும் 
என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை குறித்து மகிழ்ந்தேன்.
தொடர்ந்து இவர்களோடு உரையாடுங்கள்.
கல்விமானாகிய  நீங்கள் 
நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்த முடியும். 
எங்களால் ஆன 
உதவி எப்போதும் உண்டு.
 வாழ்த்துக்கள் 
அன்புடன்,
 வெ . இறையன்பு .

என எழுதி உள்ளார்கள்.

அன்னாரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் :
அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653











No comments:

Post a Comment