Friday 1 July 2016

முதல் தகவல் அறிக்கை  (FIR ) என்றால் என்ன ?
காவல் நிலையத்தில்  பள்ளி மாணவர்களுக்கு டி .எஸ்.பி.நேரடி விளக்கம்

தேவகோட்டை- தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக சென்றபோது காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் காவல் நிலையம் தொடர்பாக நேரடி விளக்கம் அளித்தார்.


                                             பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் காவல் நிலையத்திற்கு களப்பயணமாக மாணவர்களை  அழைத்து சென்றனர்.காவல் நிலைய ஆய்வாளர்கள்  குமரன்,பாஸ்கரன்,காவல் உட்கோட்ட துணை கண்கணிப்பாளர் கருப்பசாமி ஆகியோர் அன்புடன் காவல் நிலையத்தில் மாணவர்களை வரவேற்றனர்.காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து டி .எஸ்.பி.கருப்பசாமி மாணவர்களிடம் விளக்கி கூறுகையில் , "பணியில் நேர்மை,பழக இனிமை,இதுவே எமக்கு பெருமை" என்பதே எங்கள் காவல் துறையின் உயர்ந்த வாசகமாகும்.இது போலவே நாங்கள் செயல்படுகிறோம்.

                                        காவலர்களை அறிமுகப்படுத்துதல்

                         தமிழ்நாடு காவல் துறையில் இயக்குனர் ,தலைவர்,காவல் துணை தலைவர் ,மாவட்ட கண்கணிப்பாளர்,உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர்,ஆய்வாளர்,சார்பு ஆய்வாளர் ,தலைமை காவலர் ,முதல் நிலை காவலர்,இரண்டாம் நிலை காவலர் என காவல் துறையின் அனைத்து நிலைகளையும் விளக்கி கூறினார்.காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளருக்கு கருநீல வண்ணத்தில் இடது தோள்பட்டையில் கையிறும் ,3 ஸ்டார்களும் ,டி.பி.எஸ்.( தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ் ) என்கிற எழுத்துக்கள் பொறிக்கபட்டிருக்கும் . இந்த எழுத்துக்கள் தமிழ்நாடு அரசின் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலராக உள்ள
காவல் துறையினருக்கு  மட்டுமே வழங்கப்படும் எழுத்துக்கள் ஆகும்.காவல் நிலைய ஆய்வாளருக்கு 3 ஸ்டார்களும்,காக்கி கலரில் கையுறும் , கொடியும் ,டி.பி.( தமிழ்நாடு போலீஸ் ) என்கிற எழுத்தும் பொறிக்கபட்டிருக்கும்.இதே போன்று சார்பு ஆய்வாளருக்கு இரண்டு ஸ்டார் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும்.தலைமை காவலருக்கு மூன்று பட்டையும்,சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்.சின்னம் இல்லாத தலைமை காவலர் புதியதாக தலைமை காவலர் என்று அர்த்தம்.முதல் நிலை காவலருக்கு இரண்டு பட்டை அணிவிக்க பட்டிருக்கும் .இரண்டாம் நிலை காவலருக்கு பட்டை எதுவும் இல்லை.இது தான் காவலர்களின் பதவி தொடர்பான செய்தி ஆகும் என்று காவலர்களை அறிமுகப்படுத்தினார்.அனைத்து காவலர்களுக்கு விசில் உண்டு என்றும் தெரிவித்தார்.

                                    காவல் நிலையத்தை அறிமுகப்படுத்துதல்

                           காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறை ,சார்பு ஆய்வாளர் அறை ,பதிவேடுகள் வைப்பறை ,நிலைய எழுத்தர் அறை ,கைதிகள் அறை ,கிடங்கு அறை ,கணினி அறை ,ஓய்வறை,ஆயுதங்கள் அறை ,ஆண் கைதிகள் அறை ,வட்ட எழுத்தர் அறை என அனைத்தையும் அழகாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கினார்.காவல் துறை  எப்போதுமே உங்கள் நண்பன் என்று மாணவர்களிடம் கூறினார். அறைகளை காண்பித்ததுடன் அங்கு நடக்கும் பணிகளையும் விளக்கினார்.ரோந்து விளக்கப்படம்,குற்ற விளக்க படம்,வாகன விளக்க படம் வாயிலாக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்கள்,கொள்ளைகள் அதிகம் நடக்கும் இடங்கள் அனைத்தும் விரிவாக எடுத்து சொன்னார்.

காவல் நிலையம் தொடர்பாக மாணவர்களின் கேள்விகளும்,
டி .எஸ்.பி.அவர்களின் பதில்களும் :

பரமேஸ்வரி : காவல் நிலையத்தில் எவ்வாறு புகார் மனு கொடுப்பது ?

:பதில்  : அசம்பாவித சம்பவங்கள் எது நடந்தாலும் புகார் மனுவாக நீங்கள் பள்ளியில் விடுமுறை விண்ணப்பம் எழுதுவது போல் எழுதி கொடுக்கலாம்.பெறுநர் ,சார்பு ஆய்வாளர் ,காவல் நிலையத்தின் பெயர் எழுதி கொடுக்கலாம்.காவல் நிலையத்தில் புகார் மனு உண்மையா,பொய்யா,விசாரித்து உண்மையில் குற்றம் என்றால் பார்மில் என்ட்ரி போட்டு முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்படும்.சாட்சிகளை வைத்து சம்பவம் உண்மை என்று அறிந்து நீதிமன்றத்திற்கு அனுப்பி அதன் பிறகு நீதிபதி விசாரித்து தீர்ப்பு சொல்வார்.

தனலெட்சுமி : புகார் மனுவை எழுத படிக்க தெரியாதவர்களும் ,வாய் பேசாதவர்களும் எப்படி எழுத முடியும்? அதற்கு காவல் நிலையத்தில் என்ன வாய்ப்பு உள்ளது ?

பதில் : மாற்று திறனாளிகள் பள்ளியில் இருந்து ஆசிரியரை வரவழைத்து அவர்களை வைத்து தகவலை கேட்டு அந்த ஆசிரியரும்,புகார் கொடுக்க வந்தவரும் கையெழுத்து இடுதல் . மேலும் ஹிந்தி போன்று வேறு மொழி பேசுபவர்கள் வந்தாலும் அவர்கள் மொழி தெரிந்தவர்களை வரவழைத்து அவர்களிடம் தகவலை கேட்டு பதிவு செய்து என்னால் பதிவு செய்ய பட்டது என்று கையெழுத்து பெற்று கொள்ளப்படும்.

ஜீவா : 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குற்ற பிரிவில் எடுத்து கொள்வீர்களா?

பதில் : இளம் சிறார்கள் என்று தனி சட்டம் உள்ளது.அவர்கள் அதனை விசாரிப்பார்கள்.

பார்கவி லலிதா : சௌதி அரேபியா நாடுகளில் சாதாரண தண்டனையாக கை,கால் எடுத்தல் தண்டனை உள்ளது.அது போன்று தமிழ்நாட்டில் சட்டம் உள்ளதா ?

பதில் : அது போன்று சட்டங்கள்,தண்டனைகள் நம் நாட்டில் கிடையாது.

விஜய் : FIR  என்கிற முதல் தகவல் அறிக்கையில் என்ன,என்ன  விவரங்கள் இருக்கும்?

பதில் : பெயர்,குற்றம்,எந்த பகுதியில் நடைபெற்றது,எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அது நடந்துள்ளது ,சம்பவத்தை பார்த்தவர்கள் யார் ,தேதி,மணி,காவல் நிலையத்திற்கு புகார் வந்த தேதி,குற்றம் செய்தவர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.

பரத் : சிறுவர்களுக்கான சீர்திருத்த பள்ளி எங்கு உள்ளது?

பதில் : திருச்சி

சங்கீதா : வரதட்சணை கொடுமைக்கு எந்த பிரிவில் தண்டனை தருவீர்கள்?

பதில் : பெண்கள் குழந்தைகள் என்று தனி காவல் நிலையமாக அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படுகிறது.அங்கு வரதட்சிணை பெரிய பிரிவில் உள்ள குற்றமாகும்.

சாய் புவனேஸ்வரன் : கடும் தண்டனைக்குரிய குற்றம் எது?

பதில் : கொலை,கொள்ளை ,கற்பழிப்பு கொலைக்கு கொலை ஆகியவை கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.

ஜெகதீஸ்வரன் : சினிமாவில் நடக்கிற மாதிரி துப்பாக்கியை சுற்றி கொண்டு ஒரே நேரத்தில் பல பேரை ஒரு போலீஸ் அடிக்க முடியுமா ? உண்மையில் அப்படி  நடக்குமா?

பதில் : சினிமா என்பது கற்பனை உலகம். துப்பாக்கி நீங்கள் இங்கே தூக்கி பார்த்து உள்ளீர்கள் .எவ்வளவு எடை உள்ளது பார்த்தீர்கள் அல்லவா.எனவே இவ்வளவு எடை உள்ள துப்பாக்கியை தூக்கி சினிமாவில் வருவது போல் சுற்ற முடியாது.அது உண்மை இல்லை.ஒரு பிஸ்டலில் 13 தோட்ட மட்டுமே நிரப்பி சுட முடியும்.தீர்ந்து விட்டால் மீண்டும் நிரப்பி தான் சுட வேண்டும் .சினிமாவில் வருவது போன்ற ஒரே நேரத்தில் 50 தோட்டாக்கள் எல்லாம் சுட முடியாது.அது ஒரு மாய தோற்றம் என்றார்.

தினேஷ் ; போலீஸ் எப்போது சுடுவார்கள் ?

பதில் : தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயர் அதிகாரியின் அனுமதியோடு மட்டுமே சுடுவார்கள் .வருடத்தில் ஒரு நாள் அனைத்து போலீசாரும் பயிற்சி அரங்கில் சுமார் 50 ரவுண்ட் வரை சுடுவார்கள்.எனவே அனைத்து போலீசாரும் வருடத்தில் ஒரு நாள் பயிற்சி அரங்கில் கண்டிப்பாக சுட்டே ஆக வேண்டும் என்றார்.

இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.


                       பிறகு மாணவர்கள் அனைவரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கருப்பசாமி  தலைமையில் அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகளை தலைமை காவலர் கோப்பெருந்தேவி விளக்கினார்.மாணவ,மாணவியர்கள் எவ்வாறு பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள் ,அதனை எவ்வாறு தடுப்பது,உச்ச நீதி மன்றத்தின் விதி முறைகள் என்ன,அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் என்ன ,எதற்கெல்லாம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகலாம் என்பது தொடர்பாக விளக்கமாக கூறினார்.ஆண்கள் குடித்து விட்டு பெண்களை துன்பப்படுத்துவது,வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவது,சிறுவர்,சிறுமியர்களை அவர்கள் அறியாத வயதில் தொடகூடாத இடங்களை தொட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது போன்ற காரணங்களுக்காக இந்த காவல் நிலையத்தை அணுகலாம்.இங்கு ஆலோசனை மையம் உள்ளது.அதிலும் உங்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.காவல் நிலையத்தின் உள் அமைப்புகள் அனைத்தும் சுற்றி காண்பிக்கப்பட்டது.மாணவர்கள் முக நூல்,வாட்சப் என அனைத்திலும் புகார் கொடுக்கலாம் என விரிவாக விளக்கப்பட்டது.
                          பள்ளியின் சார்பாக மாணவி அல் நிஸ்மா பேகம் நன்றி கூறினார்.


மாணவர்கள் காவல் நிலையம் கள பயணமாக வந்தது தொடர்பாக கூறும்போது : நாங்கள் போலீஸ் என்றாலே பயந்து கொண்டுதான் இருந்தோம்.ஆனால் இன்றைக்கு டி .எஸ்.பி அய்யா,ஆய்வாளர் குமரன்,பாஸ்கரன் ஆகியோர்   காவல் நிலையத்துக்குள் வந்த உடன் அனைவரையும் வாசலில் வைத்து கை கொடுத்து வரவேற்றார்.காவல் துறை உங்கள் நண்பன் என்றார்.எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததது .மேலும் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும் .எங்களை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்று அன்பாக,தெளிவாக எடுத்து கூறினார்.துப்பாக்கி முதலாக காண்பித்தார்.அனைத்து விஷயங்களையும் அன்பாக எடுத்து கூறியது நன்றாக இருந்தது.இனி வரும் காலங்களில் போலீஸ் என்றால் எங்களுக்கு நண்பர் என்ற எண்ணம்தான் வரும் என்று தெரிவித்தனர்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கள பயணமாக தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலையம் தொடர்பாக கேட்டறிந்தனர்.காவல் உட்கோட்ட துணை கண்கணிப்பாளர் கருப்பசாமி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார்.


No comments:

Post a Comment